SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எனக்கு என்னதான் அதிகாரம் இருக்கு என பரிதாபமாக கேட்கும் பெண் ஆணையரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-08@ 00:19:36

‘‘தேனி மாவட்டத்துல கோயில் கடைகள் ஏல பிரச்னை வெடிச்சிருக்கே... கவனிச்சீரா...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தெரியலையேப்பா... எங்கே சொல்லு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கவுமாரியம்மனுக்கும், தேவதானப்பட்டி மஞ்சளாற்று மூங்கிலணை காமாட்சி அம்மனுக்கும் வருடந்தோறும் திருவிழா நடக்கும். காமாட்சி அம்மன் கோயில் திருவிழாவின்போது, அறநிலையத்துறை சார்பில் கடைகள், பந்தல், ஒலிபெருக்கி, மேடை அலங்காரம் ஆகியவை தனிநபர்களுக்கு ஏலம் மூலம் கான்ட்ராக்ட் விடுவாங்க. இதன்மூலம் வரும் பல லட்சம் ரூபாய் வருவாய் இந்து அறநிலையத்துறைக்கு செல்லும். காலங்காலமாக இந்த நடைமுறை இருந்து வரும் நிலையில், இந்த வருஷம் கடைகள், கழிப்பறை, டூவீலர் ஸ்டாண்ட், பந்தல் என அனைத்தும் ஏலம் விடாமல், கோயில் நிர்வாகத்தினர் தாங்களாகவே ஒரு தொகை நிர்ணயித்து தங்களுக்கு வேண்டிய ஆளுங்கட்சியினருக்கு ஏலம் விடுவது என முடிவு செய்துள்ளனராம். இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. கோயில் நிர்வாகமே நேரடியாக வசூலில் இறங்கும்போது, முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பள்ளிக் கல்வித்துறையில வேறென்ன விவகாரம் இருக்கு..’’
‘‘இங்கு ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி இயக்குநர் இருக்கும் நிலையில், பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு தனியாக ஒரு  பெண் ஆணையரை கடந்த ஆண்டு அரசு நியமித்தது. இவர் பள்ளிக்கல்வி–்த்துறையின் அனைத்து பணிகளையும் கண்காணிப்பார் என்று அரசு தெரிவித்தது. இந்த புதிய ஆணையர் பதவியில் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு டிபிஐ வளாகத்தில் அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் 5,8ம் வகுப்புக்கு தேர்வு உண்டு என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், 5ம் தேதி இந்த தேர்வு குறித்து முடிவு எடுப்பதற்காக அமைச்சர்கள் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. அந்த கூட்டத்துக்கு பிறகு மதியம் 12 மணி அளவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 5,8ம் வகுப்பு தேர்வு ரத்து என்று அறிவித்தார். இது தொடர்பான எந்த செய்தியும் பள்ளிக் கல்வி ஆணையருக்கு தெரியவே தெரியவில்லை. 5ம் தேதி மாலையில் தான் அவர் டிவியை பார்த்து தெரிந்து கொண்டார். அதனால் அவர் மனம் வெறுத்துப் போய்விட்டார். எதற்காக என்னை நியமித்தார்கள், இங்கு என்ன நடக்கிறது, என்னதான் அதிகாரம் எனக்கு இருக்கிறது என்று  புலம்பித் தீர்த்து விட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘அல்வா மாவட்டத்தில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்த தொகுதியில் கடும் குஸ்தியாமே...’’
 ‘‘ஆமா..சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அந்த ஊரின் ஒன்றிய செயலாளர் பதவியை கைப்பற்ற கடும் போட்டியே நடக்குதாம். தற்போதுள்ள ஒன்றிய செயலாளர் மாஜி எம்எல்ஏவின் மகன். விஜயமான அந்த ஒன்றிய செயலாளருக்கு எதிராக புகாரை கிளப்ப ஆளுங்கட்சியின் கிளை செயலாளர்கள் அனைவரும் சொகுசு பஸ்சில் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். அனைத்து கிளை செயலாளர்களும் ஒரு சேர கட்சியின் இணைத் தலைமையை பார்த்து புகார் அளித்தார்களாம். அதில் இடைத்தேர்தலிலும் சரி, மக்களவை தேர்தலிலும் சரி. வார்டு செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை கொடுத்த பணத்தை இவர் கொடுக்காமல், ‘லவட்டி’ விட்டாராம். அதனால்தான் சென்னைக்கு படையெடுத்தார்களாம். புகார் அளித்ததோடு மட்டுமல்லாது இவரை பதவியில் இருந்து தூக்கி விட்டு மற்றொருவரை நியமிக்குமாறு கட்சித் தலைமைக்கு பரிந்துரையும் செய்தனராம். அதற்கு உள்ளூர் எம்எல்ஏவும் நானும் கட்சித் தலைமை, இணைத் தலைமையிடம் வலியுறுத்துகிறேன் என்று பச்சைக்கொடி காட்டினாராம்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘புதுவை நிலவரம் ஏதாவது இருக்கா..’’
 ‘‘கம்பெனி போல செயல்பட்டு வந்த என். ஆர் காங்கிரஸ் கட்சி, நாங்களும் ஜனநாயக முறைப்படி செயல்படுவோம் என ஒரு வழியாக தெரிவித்துள்ளனர். கட்சி துவங்கி 9 ஆண்டுகளை கடந்து, இப்போதுதான் தொகுதி தலைவர்களை போடப்போறோம், அணி தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை நியமிக்கப்போறோம் என்று ரங்கசாமி தன் வாயால் கூறினார். அவர் கூறியதை நம்பாமல், அருகில் இருந்தவர்கள் கிள்ளிப்பார்த்துக்கொண்டனர். கனவல்ல, நிஜம்தான் என்பதை தெரிந்துகொண்டு, யாருக்கு என்ன பதவி கிடைக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்களாம். இப்போதானே சொல்லியிருக்கிறார். அதற்குள் அவசரமா, கொஞ்சம் பொறுமையாக இருக்குமாறு கூற பலர் கடுப்பாகிவிட்டனராம். இனிமேல் பொறுமை காக்க முடியாது. உடனே தெரிவிக்குமாறு வலியுறுத்த, சிலருக்கு மட்டும் ரகசியமாக மூத்த நிர்வாகிகள் கூறிவருகிறார்களாம். அப்பாடா என பெருமூச்சு விட்டு செல்கின்றனர் என். ஆர் காங்கிரசார்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘காவல்துறை சேதி ஏதும் உண்டா..’’
‘‘மாங்கனி சிட்டியின் கொண்டலாம்பட்டி ஸ்டேஷனில் யார் இன்ஸ்பெக்டர் என்று முழிக்கிறாங்களாம் போலீசார். எட்டு மாசத்துக்கு முன்னாடி பதவி உயர்வில் டியூட்டிக்கு வந்தார் பெண் இன்ஸ்பெக்டர். ஆனால்  உயரதிகாரிகளின் ஆசி பெற்ற எஸ்ஐ ஒருத்தர்தான் இங்கு அனைத்திலும் அதிரடி கிளப்புறாராம். இன்ஸ் 7 மணிக்கு வந்தால், அவரு 8 மணிக்கு தான் வருவாராம். அதுவும் அன் யூனிபார்ம்  ஸ்பெஷலிஸ்டாம். அப்புறம் இன்ஸ்சின் ஜீப்பை எடுத்துக்கிட்டு வலம் வரும் எஸ்ஐ, அனைத்திலும் கல்லா கட்டிவிட்டு ஹாயாக புறப்பட்டு போறாராம். இப்ப சொல்லுங்க சார்,  இன்ஸ்பெக்டர் யார் என்று என புலம்புகிறார்களாம் அப்பாவி போலீசார்..’’ என்றார் விக்கியானந்தா.     


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்