SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முருங்கை மரத்தில் ஏறிய கோயம்பேடு தரைக்கு வந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-06@ 01:48:13

‘‘பல்டியடிப்பதில் கில்லாடி என்ற பட்டத்தை யாருக்கு தரலாம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கூட்டணியில் இருப்பதால் நாங்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்று கோயம்பேடு கட்சிக்காரரின் மனைவி பேசினார். அடுத்த சில நாட்களில் நடந்தது என்ன என்றே தெரியவில்லை. கூட்டணி தர்மத்துக்கு எதிராக எதுவும்  செய்ய முடியாது... நாங்கள் இலை கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று ஒரே அடியாக பல்டியடித்துவிட்டார். பின்னணியை விசாரித்தால் ராஜ்யசபாவில் ஒரு சீட் ஓகே என்று இலை தரப்பில் பச்சை கொடி காட்டி இருக்காங்களாம்... இந்த  சூழலில் கூட்டணியை உடைந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இலை தரப்பு முடிவு செய்துள்ளதாம்... அதனால் முருங்கை மரத்தில் ஏறிய கோயம்பேடு கடைசியாக நிலத்துக்கு இறங்கிவந்துவிட்டது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாம்பழமும் மிரட்டுதுபோல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வழக்கமாக எத்தனை தேர்தலை பார்த்துவிட்டோம்... இந்த முறையும் தனித்துபோட்டி... தனியாக ஆட்சி என்ற பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார் மாம்பழம்காரர். ஆனால் அதற்கு அவரது கட்சியிலேயே பெரிய அளவில் ஆதரவு இல்லையாம்.  அதனால்தான் இருப்பவர்கள் தீவிரமாக வேலை செய்யுங்கள்... இல்லையென்றால் வீட்டுக்கு போங்கள் என்று சூடாகிவிட்டார் மாம்பழ தலைவர். அப்புறம் இந்த ஸ்டேட்மென்டின் பின்னால் நகர உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில்  தேர்தல் ஆணையத்தின் அங்கீகராத்தை வாங்கிவிட வேண்டும்... ஒவ்வொரு முறையும் சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையம், கோர்ட்டை அணுக முடியாது என்பதும்... இலை தரப்ை மிரட்டி சீட்டும்... நோட்டு கட்டும் வாங்குவதும்தான்  பிரதானமாம்... அதனால்தான் கோயம்பேடுகாரரை பார்த்து மாம்பழமும் சந்தைக்கு வந்துள்ளது என்று அவரது கூட்டணி கட்சியினரே சிரிக்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாங்கனி மாவட்டத்தில் கோயபல்ஸ் உருவாகி இருக்கிறாரா என்ன...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்டத்தில் இலை கட்சியில் பதவியில் இருப்பவர்கள் செய்யும் அலம்பல் ஒருபுறமிருக்க, மாஜிக்களின் உறவினர்கள் செய்யும் தகிடு தத்தங்களும் சர்ச்சையை உண்டாக்குதாம். அரசு ஆஸ்பத்திரியில் தற்போது முக்கிய பதவியில்  இருப்பவர், இங்கு வருவதற்கு முன்பு பொறுப்பாளராக இருந்தவர் இலைகட்சி மாஜி எம்எல்ஏவின் தம்பியாம். புதியவரை வரவிடாமல் எப்படியாவது சீட்டை பிடித்து விட வேண்டும் என்று அவர் நகர்த்திய காய்கள் எதுவும் பலன் தரவில்லையாம்.  இப்படிப்பட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் ரிட்டையர்டு ஆகப்போகிறாராம் மாஜியின் தம்பி. இதனால் பொறுப்புக்கு எப்படியாவது வரவேண்டும் என்று நிறைய மாத்தி யோசிக்கிறாராம். இதன் எதிரொலியாக பதவியில் இருப்பவர் மீது  சர்ச்சைக்குரிய வதந்திகளை பரப்பி விடுகிறாராம். ஆனாலும் பதவியில் இருப்பவர், சுகாதார மினிஸ்டருக்கு நெருக்கமானவர் என்பதால், முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லையாம். இதனால் அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆழ்ந்த  யோசனையில் இருக்கிறாராம் மாஜியின் தம்பி...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுச்சேரியில் என்ன பிரச்னை...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தில் முட்டிக்கொண்ட முதல்வர்-கவர்னர் மோதல், அதிகாரிகளை விட்டு வைக்கவில்லை. சட்டமன்றத்தில் எடுத்த நடவடிக்கையை அவமதித்த தலைமை செயலர் அஸ்வனிகுமாருக்கு உரிமை  மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது. அவரும் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது சரமாரி கேள்வி எழுப்பிய எம்எல்ஏக்களிடம்  மத்திய உள்துறை அமைச்சகம் என்ன சொல்கிறதோ அதனைதான் செய்ய முடியும் என கறாராக  தெரிவித்ததோடு, அனைத்து கேள்விக்கும் ஒரே பதிலை வடிவேலு ஸ்டைலில் திருப்பி கூறியுள்ளார். மேலும் எழுத்துப்பூர்வமாக பதிலளிப்பதாகவும், ஐந்து நாட்கள் அவகாசமும் கேட்டார். ஆனால் சொன்னபடி திரும்பவரவில்லை. இதில்  கடுப்பான உரிமை மீறல் குழு மீண்டும் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம். இந்த நோட்டீசை மதிக்காமல் இருந்தால், வரும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தலைமை செயலருக்கு தகுந்த தண்டனை வழங்க திட்டமிட்டுள்ளதாம்.  ஏற்கனவே டெல்லி கெஜ்ரிவால் அரசில் செயலராக இருந்த அஸ்வனிகுமார், நீதிமன்றம் வரை சென்று உரிமை மீறல் குழு விசாரணைக்கு தடை வாங்கியவர். அதே  பாலிசியை கையில் எடுக்க தலைமை செயலர் முடிவு செய்துவிட்டாராம்...’’  என்றார் விக்கியானந்தா.
‘‘இலை நிர்வாகிகள் மீது காக்கிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஏற்கனவே சட்டம், ஒழுங்கை காரணம் காட்டி நிறுத்திட்டாங்க... கடந்த ஜன. 30ம் தேதி நடக்கவிருந்த தேர்தலையும், இரண்டாவது முறையாக சட்டம்,  ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி நிறுத்திட்டாங்களாம்... 29ம் தேதி இரவு வரை நடக்கும்னு எதிர்பார்த்த நிலையில், திடீரென்று இரவோடு இரவாக முடிவெடுத்து நிறுத்திட்டதா ஏற்கனவே பரபரப்பாக பேசப்பட்டது. இதனால மாவட்ட எஸ்பி  முதல் உயர் அதிகாரிகள் வரை கடும் அதிருப்தியில் இருக்காங்களாம்... பாதுகாப்பு கொடுக்க முடியாத அளவிற்கு சிவகங்கை மாவட்ட போலீஸ், மாவட்ட நிர்வாகம் பலவீனமாகவா இருக்கு... ஆளுங்கட்சியில் உள்ள சில தனிநபர்களின்  விருப்பத்திற்காக, தேர்தலை நிறுத்தி விட்டு, பழியை போலீசார், மாவட்ட நிர்வாகத்தின் மீது போடுகின்றனர் என அனைத்து துறை அலுவலர்களிடமும் புலம்பல் அதிகரித்து வருகிறதாம்... இதுதொடர்பாக நடந்த தேர்தல் ஆலோசனைக்  கூட்டத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியதாம்.... இதனால் அரசுத்துறை அலுவலர்களுக்குள்ளேயே மோதல் போக்கும் அதிகரித்திருக்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.        


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்