SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயர் பதவி பெறுவதில் எந்த பெண் அதிகாரி ஜெயிப்பார் என்று ‘பெட்’ கட்டும் ஊழியர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-04@ 00:39:09

‘‘இலை நிர்வாகிகள் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் தயங்குறாங்களாமே... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ம். முட்டைக்கு பேமசான ஊரில் எம்பி நடத்தும் அதிரடி ஆய்வு, இலைகட்சி நிர்வாகிகளை கலங்கடிக்குதாம். எம்பியானவரு போற இடத்தில் எல்லாம் பொதுஜனம், சந்துக்கடைகள் குறித்து தான் அதிகமா புகார் சொல்றாங்களாம். இதனால்  அதிர்ந்து போனவரு, சமீபகாலமாக அவர்கள் குறிப்பிடும் இடத்திற்கே போய், அதிரடியாக ஆய்வு நடத்தறாராம். இப்படி அவர் ஆய்வு நடத்தும் பல இடங்கள்,  இலைகட்சி நிர்வாகிகள்தான். சந்துக்கடைகளை அகற்றுங்க என்று எம்பி  உத்தரவிட்டாலும், ஆளுங்கட்சியாச்சே என்று அதிகாரிகள் அலறுகிறார்களாம். ஆனாலும் பிரச்னை பெரிதாகி விடக்கூடாது என்பதற்காக, ஒப்புக்கு ஒன்றிரண்டு பேரை கைது பண்றாங்களாம். சமீபத்தில் எம்பியின் அதிரடி குறித்து, உள்ளூர்  அமைச்சரின் காதில், முக்கிய நிர்வாகிகள் போட்டு  வைத்தார்களாம். அவரு, இது தொடர்பா கொடுத்த பேட்டி, இலைகட்சி காரங்களுக்கு கொஞ்சம் தெம்பை குடுத்ததாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வரியுடன் வசூல் கொட்டும் இடத்துக்கு போட்டி போடும் பெண் அதிகாரிகளை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மண்டல தலைமை மின் பொறியாளர் பணியிடத்தை பிடிக்க கடும் போட்டி நடக்குது. இப்பதவியை பிடிக்க 40 லகரம் வரை பேரம் பேசப்படுகிறது. இப்போது தலைமை மின் பொறியாளர் பதவியில் இருக்கும் பெண் அதிகாரி இன்னும்  மூன்று மாசத்துல பணி ஓய்வுபெற போறாங்க. அதனால், இவரது பதவியை பிடிக்க, இப்போதே போட்டி துவங்கிவிட்டது. கோவையில் பணியாற்றி வரும் மேற்பார்வை பெண் பொறியாளர் ஒருவர், பதவி உயர்வு அடிப்படையில் இப்பதவிக்கு வர  வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் இவர், இப்பணியிடத்தை பிடிக்க கடும் முயற்சி செய்து வருகிறார். இதற்காக, ஆளும் விவிஐபிக்கள் மூலம் காய் நகர்த்தி வருகிறார். இவரைப்போலவே இன்னொரு பெண் அதிகாரியும் களத்தில் இறங்கியுள்ளார்.  இதனால், போட்டி அதிகரித்துள்ளது. இந்த மேட்டர்தான் மின்வாரிய அலுவலகத்தில் ஒரே பேச்சாக இருக்கிறது. இரண்டு பெண் அதிகாரிகளில், யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகள்,  ஊழியர்களிடம் பெட் கட்டும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கலை பண்பாட்டு துறையா... கலெக் ஷன் துறையானு ஒரே குழப்பமா இருக்காமே. உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தான் இன்று தமிழகத்தில் நம்பர் ஒன்னில் இருக்குனு பார்த்தால்.. அதை விட பெரிதாக தமிழக அரசின் கலைப்பண்பாட்டு துறையில் நடந்து இருக்காம். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக  அரசின் கலைப்பண்பாட்டுத்துறை மூலம் 23 இசையாசிரியர்கள் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டனர். அந்த இசையாசிரியர்கள் தேர்வில் ஒரு அதிகாரி சட்டத்தை கடைப்பிடிக்காமல் அவருக்கு வேண்டிய நபர்கள் மூலம் பல லட்சம் பணத்தை  வாங்கி கொண்டு தேர்வுக்கு முதல்நாள் வினாத்தாளை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு குறிப்பாக தனது பெண் தோழிக்கும் கொடுத்துள்ளாராம். அதன்படி தான் சம்பந்தப்பட்ட நபர்கள் தற்போது இசையாசிரியர்களாக நியமனம்  செய்யப்பட்டுள்ளார்களாம். இதுதொடர்பாக தேர்வு எழுதியவர்கள் உரிய ஆதாரத்துடன் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையாம்...’’ என்று பாதிக்கப்பட்ட தேர்வர்கள் வேதனையுடன் புலம்புகின்றனர்...’’ என்றார்  விக்கியானந்தா.

‘‘சோகத்தில் இருக்கும் அமைச்சர் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ தூங்கா நகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இந்த மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் முகாமிட்டும், இலை கட்சிக்கு பெருத்த ஏமாற்றம்... மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் தோல்வி, அடுத்து 13 ஒன்றியங்களில் 6ல் மட்டுமே  தலைவர் பதவியை பிடிக்க முடிந்ததாம்... அருகில் உள்ள வாடிவாசல் ஊரின் ஒன்றிய தலைவர் பதவியை எப்படியாவது பிடித்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டி அமைச்சர் மீசை முறுக்கி, தாடியை இழுத்துக் கொண்டு இருந்தாராம்...  இலை கட்சிக்கு கூடுதல் எண்ணிக்கையுடன் கவுன்சிலர்கள் கையில் உள்ளது. பணம், அதிகார பலம் பாய்ந்ததாம். ஆனாலும் 2 முறை அறிவிக்கப்பட்ட தேர்தலிலும் தலைவர் பதவியை இலை கட்சிக்கு பிடிக்க முடியாமல் மீண்டும் தள்ளி  போனதாம்... அதிகாரிகளை ஆட்டி படைக்கும் அமைச்சர், இங்கு நினைத்ததை சாதிக்க முடியாமல், அதிகாரிகள் மீது சீறி பாய்கிறாராம் ’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அல்வா மாவட்டத்துல என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நெல்லையில புதிதாக பிரிக்கப்பட்டு, தென்காசி மாவட்டம் உருவானது. இதனால் நெல்லை  மாவட்டத்தை அரசியல் ரீதியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால, நெல்லையை 5 மாவட்டமாக பிரிக்க தலைமை முடிவு  செஞ்சிருக்காம். இதனால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவரை பிடிச்சி பதவி கேட்கிறாங்களாம். அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்து ஆட்கள் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகிவிட்டதாம். இதனால், எல்லா சமுதாயத்துக்கும் சமமாக  பதவிகளை வழங்கனும்னு கோரிக்கை எழுந்திருக்காம். அதில் தற்போது மாவட்டச் செயலாளர் சிறப்பாக செயல்படுவதால் அவர் தொடர்வாராம். அதேபோல, ஜெயலலிதா இருந்தபோது செல்வாக்காக இருந்து தற்போது தலைமை பதவியிலும்,  ஆவின் பதவியிலும் இருக்கும் பெண்ணின் பெயரையும், சிவனின் பெயரையும் கொண்டவர், மாவட்ட பதவியை எதிர்பார்த்து காய் நகர்த்துகிறாராம். அவருக்கு தலைமையும் ஆதரவா இருக்காம். அந்த மாவட்டத்தில் எம்எல்ஏவாக இருக்கும்  இன்பமானவரும், தற்போது இடைத்தேர்தலில் எம்எல்ஏ ஆனவரும், ரேசில் இருக்காங்களாம். இப்படி பதவியை பிடிக்க கடும் போட்டி உருவாகியிருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்