SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீட்டர் மாமா மஞ்சள் மாவட்டத்துக்கு போய் கோடீஸ்வரனாகிற கதையை சொல்கிறார் wiki யானந்தா

2020-01-27@ 00:22:50

‘‘கீ ழடி விவகாரத்தில் மந்திரி மயக்கத்தில் இருக்கிறாரா என்ன...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கீழடியில் அகழாய்வு நடத்த வேண்டும் என்று போராட்டம், நீதிமன்றத்தை நாடிய பிறகே தமிழர்களின் 2600 ஆண்டுக்கு முன்பு எப்படி வாழ்ந்தார்கள் என்ற விவரம் தெரியவந்தது. அப்போது 6வது கட்ட அகழாய்வு நடத்துவோம் என்று மன்னரின்  பெயரை கொண்ட மந்திரி வீராவேசமாக பேசினார். இதையடுத்து அகழாய்வுக்கு அகரம், மணலூர், கொந்தகை ஆகிய 3 இடங்களை தேர்வு செய்த தொல்லியல் அதிகாரிகள் தயாரித்த கோப்புகள் தூங்குகிறதாம்... ஜனவரி இறுதியாகியும் இதுவரை  அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லையாம்... துறை அமைச்சரும் மவுனம் சாதிக்கிறாராம். இதன் பின்னணியில் தாமரை இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள்... காரணம் தமிழர்களின் நாகரிகம் வெளியே வரக்கூடாது என்ற எண்ணமாம்...’’  என்றார் விக்கியானந்தா.  

‘‘லட்சாதிபதி கோடீஸ்வரனாக ஆக வேண்டுமா... உடனே மஞ்சள் மாவட்டத்துக்கு போங்க என்று பேசிக்கிறாங்களாமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலையில் பிளவு ஏற்பட்டு கிப்ட் தலைமையில் புதிய கட்சி உதயமான நிலையில், ஈரோடு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் பலரும் சில மாதங்களிலேயே வேறு  கட்சிக்கு ஜம்ப் ஆயிட்டாங்க. இதனால், மாவட்ட செயலாளர் பதவி ராசியில்லாத பதவியாக கிப்ட் கட்சியில் இருந்து வருகிறது. தற்போது ஈரோடு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஒருவர், நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதில்  நஷ்டம் ஏற்பட்ட நிலையில் திக்கு தெரியாமல் தவித்த இவருக்கு கட்சியில் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு, கட்சி வளர்ந்ததோ இல்லையோ, இவர் தன்னை வளர்த்துக்கொண்டார். புதுப்புது கார்களில் பவனி வருகிறார்.  ஆளும் கட்சியோடு கூட்டணி அமைத்துக்கொண்டு பல காரியங்களை சாதித்து வருகிறார்.

மேலும், இவர் தனது சொந்த ஊரில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் பொறுப்பில் தொடர்கிறார். ஆளும் கட்சியை எதிர்த்து அரசியல் செய்யாமல் பதுங்கும்  இவர், விரைவில் கட்சி மாற இருப்பதாக நிர்வாகிகள் கிசுகிசுக்கிறார்கள். விரைவில், கிப்ட் கட்சியை விட்டு பறந்துவிடுவார் என பலவாறு பேச்சு அடிபடுகிறது. எப்படியோ, கிப்ட் கட்சியில் இருந்தால் தானாகவே லட்சாதிபதி கோடீஸ்வரனாகும்  அதிர்ஷ்டம் இருப்பதாக மஞ்சள் மாவட்ட நிர்வாகிகள் பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கிண்டிக்காரர் எப்படி இருக்கிறாரு...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘பட்டமளிப்பு விழா, அரசு விழான்னு அவரு காலம் போயிட்டு இருக்கு... இப்போது நான் சொல்லப்போறது வேறு மேட்டரு கேளு... மாங்கனி மாவட்டத்துல சர்ச்சைக்கு பெயர் போன யுனிவர்சிட்டியில, புது குற்றச்சாட்டு கிளம்பியிருக்கு.

 யுனிவர்சிட்டியில அலுவலக பணியாளரா இருந்த சிலருக்கு, சமீபத்துல புரமோசன் கொடுத்தாங்க. யுனிவர்சிட்டி ரூல்ஸ் மட்டுமில்லாம, கோர்ட் உத்தரவையும் மீறி இந்த புரமோசன் கொடுத்ததா சர்ச்சை எழுந்துச்சு. இதுக்காக அவமதிப்பு வழக்கு  தொடர்ந்தா என்னனு, ஒரு தரப்பினர் நிர்வாகத்துக்கு நோட்டீசும் அனுப்புனாங்க. இந்த விவகாரம் ஒருபக்கம் இருக்க, அந்த புரமோசனுக்காக பல்கலையின் இரண்டு விஐபிக்கள் `ரெண்டரை சி' வாங்குனதா, புது தகவல் சர்ச்சை கிளம்பியிருக்கு.  யுனிவர்சிட்டியில வேலை பாக்குற ரெண்டு பேரு, இந்த விவகாரத்த கிண்டிக்காரருக்கு புகாரா அனுப்புனதா, 3 பக்க மனு ஒண்ணு, வாட்ஸ்அப்ல பரவிக்கிட்டு இருக்கு. ஆனால், மனுவுல இருக்குற -யானவரு, நான் ஆளுநருக்கு புகார் எதுவும்  அனுப்பல, அதுல இருக்குறது என்னோட கையெழுத்து இல்லனு, திடீர்னு ஜகா வாங்கிட்டாராம். பின்னணியில என்ன நடந்ததுனு தெரியாமல் புகார் கொடுத்தவர்கள் தலைமுடியை பிய்த்து கொள்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அல்வா மாவட்டத்துல என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘நெல்லையில் குடியரசு தினவிழாவில் போலீஸ் அதிகாரி மனைவி குச்சிப்புடி நடனம் ஆடி அசத்தினாராம். நெல்லையில் 8 பள்ளிகளைச் சேர்ந்த 989 மாணவ, மாணவிகளின் 55 நிமிட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2 கலைநிகழ்ச்சிகள் முடிந்த  நிலையில் 3வது நிகழ்ச்சியாக தேச பக்தி பாடல்கள் பாட பார்வையற்ற பள்ளி மாணவ, மாணவிகள் வரிசையாக வந்தனர். அதற்கு முன்பாக போலீஸ் அதிகாரி மனைவியின் ‘குச்சிப்புடி' நடனம் திடீரென அரங்கேறியது. விழா பந்தலில்  இருந்தவர்களின் ஆச்சர்யத்தையும் மீறி போலீஸ் அதிகாரி மனைவி பலத்த கை தட்டலை பெற்றார். பார்வையற்ற மாணவ, மாணவிகளின் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளி விட்டார்களே, என்று அரங்கில் இருந்தவர்கள் ஆதங்கப்பட்ட நிலையில்  அவர்களை உற்சாகப்படுத்த கலெக்டர் எழுந்து சென்று அவர்களுடன் குழு படம் எடுத்துக் கொண்டு ஐஸ் வைத்தாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பதவியும் பாராட்டும் தானாக வர வேண்டும்... அதை கேட்டு வாங்கக் கூடாது என்பது கூட தெரியலையே...’’ என்று இழுத்தார் பீட்டர் மாமா.

‘‘உண்மை தான்... ஆனால் இந்த காலத்துல அது தேவைப்படுகிறதே. சரி விஷயத்தை ெசால்றேன் கேளு... நாகர்கோவிலில் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.  இதில் கொடியேற்றிய பின்னர் கலெக்டர் அரசு துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். இதில் மொத்தம் 51 பேர் கொண்ட பட்டியல் முதலில் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதில்  நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் பெயர் இடம் பெறவில்லை. இதனை தெரிந்து கொண்ட நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் தனக்கு எப்படியாவது சான்றிதழ் வழங்கியாக வேண்டும் என்று விழாக்குழு அதிகாரிகளை  கேட்டுக்கொண்டாராம். அதனால் வேறு வழியின்றி 52 வது பெயராக மாநகராட்சி ஆணையர் பெயர் அடங்கிய துண்டுச்சீட்டை பயனாளிகள் பட்டியலில் வெட்டி ஒட்டி சேர்த்து அதன் பிறகு கடைசியாக அவருக்கும் நற்சான்றிதழ் கலெக்டரால்  வழங்கப்பட்டது. இந்த தகவலை கேட்ட பொதுமக்கள் தலையில் அடித்துக் கொண்டனர்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

 • bogi13

  பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

 • 13-01-2021

  13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்