SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரேஷன் கடை ஊழியர்களின் 3 கோடியை சுருட்டிய அதிகாரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-01-24@ 00:25:10

‘‘இலை கட்சி எம்எல்ஏ ஒருவர் விரக்தியில் கட்சிக்கு கல்தா கொடுத்துவிடுவார் போலிருக்கே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகர் மாவட்ட இலை கட்சி செயலாளராக இருப்பவர்தான், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருக்காரு. இவர், கட்சி பணியில் இருந்து ஒதுங்கியே இருக்காரு...  சட்டமன்ற கூட்டத்தொடரிலும் பங்கேற்பது இல்லை. காரணம் இவரது தொகுதியில் மூன்று வருஷமா எந்த பணியும் நடப்பதில்லையாம். அந்த கடுப்பில் மக்கள் பிரதிநிதி கடமையையும், கட்சி பணியையும் மூட்டை கட்டி வைச்சுட்டார். சட்டமன்றத்துக்கு போகாதது குறித்து இவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘சட்டமன்ற கூட்டத்தொடருக்கு சென்றால் மட்டும், தொகுதிக்குள் வேலை நடந்து விடுமா, அட போப்பா...'' என கடுமையான கோபத்தில் பொரிந்து தள்ளிவிட்டாராம். விவிஐபி இரட்டையர்களை சந்திக்க மறுப்பதால்தான் தொகுதியில் வேலையே நடக்கவில்லை என்கிறார்கள் இவரது ஆதரவாளர்கள்.

இதனால கட்சி அடிப்படை உறுப்பினரில் இருந்து அதிகாரிகள் வரை யாரும் இவரை கண்டுகொள்வதே இல்லையாம். இப்படியே போனால், இவர், விரைவில் மா.செ. பதவியையும் உதறிவிடுவார் போலிருக்கே... என்கிறார்கள் இவரது ஆதரவாளர்கள். இப்போது தன் தொகுதி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தடையாக இருக்கும் அதிகாரிகள் யார், யார்? என்ற நீண்ட பட்டியல் தயாரித்து, முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்களுக்கு தனித்தனியாக புகார் கடிதம் அனுப்பியுள்ளாராம். இதனால், கோவை மாவட்ட அரசு அதிகாரிகள் மட்டத்தில் ஒரு பிரிவினர் கலக்கத்தில் இருக்காங்க... தன் கடிதம் மீது நடவடிக்கை இல்லாவிட்டால் கட்சிக்கு கல்தா கொடுத்துவிட்டு, வீட்டில் அமைதியாக இருக்க முடிவு செய்துள்ளாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒன்றிய செயலாளரை பார்த்து பயப்படும் கலெக்டர் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு கலெக்டர் அதிரடியாக தணிக்கை மேற்கொண்டார். அப்போது ஒன்றியத்துக்கு உட்பட்ட பல ஊராட்சிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக பதிவேடுகளை வைத்தும், சம்பந்தப்பட்ட பிடிஓக்கள், மண்டல துணை பிடிஓக்கள் ஆகியோரை கொண்டும் தணிக்கை மேற்கொண்டார். அப்போது பல அதிகாரிகளும், ஒன்றியத்தில் பணிகள் மேற்கொள்வதில் ஆளுங்கட்சி ஒன்றிய செயலாளரின் தலையீடு அதிகமாக இருப்பதாக புகார் தெரிவித்தார்களாம். அதற்கு கலெக்டர், ‘எனக்கு அதெல்லாம் தெரியாது. பணிகள் ஒழுங்காக நடக்க வேண்டும்’ என்று கூறி சென்றுவிட்டாராம்.

இதையடுத்து அதிகாரிகள் கலெக்டரின் உத்தரவு குறித்து ஒன்றிய செயலாளரின் வீட்டுக்கே நேரடியாக சென்றார்களாம். அங்கு அவர்களை பார்த்த ஒன்றியம், மரியாதை குறைவாகவும், தரக்குறைவாகவும் பேசினாராம். அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள், ‘என்ன இது கேட்க வேண்டிய கலெக்டர் தெரியாது என்று சொல்லிவிட்டார். இங்கு இவர் மரியாதை குறைவாக பேசுகிறார். அவரே பயப்படும்போது, நாமெல்லாம் எம்மாத்திரம்?’ என்றவாறு திரும்பி வந்தார்களாம். அதோடு தங்கள் தரப்பு சங்க கூட்டத்தில் இதுதொடர்பாக போராட்டம் அல்லது கண்டன தீர்மானம் அல்லது அரசுக்கு புகார் தெரிவிப்பது என்று ஏதாவது செய்ய முடியுமா? என்ற ஆலோசனையில் உள்ளார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அரசியல் இல்லாவிட்டால் என்ன... என்னை வஞ்சம் தீர்த்த அரசுக்கு எதிராக தன் சொந்த பலத்தில் தொடர் போராட்டம் எங்கே நடக்குது...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ தனமானவர் ஆளுமை இல்லாவிட்டால், முதல்வர் பதவி விலக வேண்டுமென பகிரங்கமாக பேட்டி கொடுத்தார். மேலும் கவர்னரை சந்தித்து ஊழல் புகார்களையும் தெரிவித்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் அவர் தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. மாறாக அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த இருக்கிறார். மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். அடுத்ததாக என். ஆர் காங்கிரசிலும் தனமானவருக்கு  சீட் கொடுக்க வாய்ப்பில்லை. எனவே தனது அறக்கட்டளையை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார். இதனை வைத்து மாநிலம் தழுவிய அளவில் ஆளும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுக்கிறார்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ரேஷன் கடை ஊழியர்களிடம் கோடிக்கணக்கில் சுருட்டிய இலை கட்சி சப்போர்ட் அதிகாரிகளின் லீலை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார்  பீட்டர் மாமா.
‘‘பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியது. ரேஷன் கடைகளுக்கு கரும்பு இறக்குதல் மற்றும் வெட்டுதல், முந்திரி, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் பொட்டலமிடுதல் பணிக்காக கூடுதல் பணியாளர்களை அமர்த்திக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் சிறப்பு செலவின தொகையும் அறிவிக்கப்பட்டது. அதன்படி 1000 கார்டுகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளுக்கு ரூ.2,200ம், 1000 கார்டுகளுக்கு கீழ் உள்ள ரேஷன் கடைகளுக்கு ரூ.1,500ம் செலவின தொகையை டியுசிஎஸ் காசாளரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்தது.

அரசு அறிவித்தபடி, ரேஷன் கடை ஊழியர்கள் செலவின தொகையை பெற சென்றனர். ஆனால் அறிவித்தபடி அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஒவ்வொரு கடைக்கும் ரூ.1000 பணத்தை சரக மேலாளர்கள் பிடித்துக் கொண்டு மீதி தொகையை மட்டுமே ரேஷன் கடை ஊழியர்களிடம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி ரேஷன் கடை ஊழியர்கள் கேட்டபோது, `நாங்கள் அதிமுக தொழிற்சங்கத்தில் இருக்கிறோம். யாரிடம் சென்றாலும் ஒன்றும் செய்ய முடியாது'' என்று மிரட்டுகிறார்களாம். 35 ஆயிரம் ரேஷன் கடைக்கு தலா ரூ.1000 கமிஷன் என்றால் ரூ.3.5 கோடியை அதிகாரிகள் சுவாகா செய்து விட்டனராம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்