SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகின் மூத்த குடி என நிரூபிக்கும் களமான சிவகளையில் விரைவில் தொல்லியல் கள ஆய்வு: கற்கால தமிழர் நாகரிகம் இனி கண்ணுக்கு புலப்படும்

2020-01-19@ 10:44:42

‘‘கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி” என்று உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பெருமிதப்பட்டு வருகிறோம். அதை உறுதி செய்வதற்கான ஆதாரமாக சமீபத்தில் அமைந்தது சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்த அகழாய்வு. அங்கு நடத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களின் மூலம் தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகளுக்கும் முன்புள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழர் நாகரிகம் அதைவிடவும் பழமையானது என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்றாலும், அதை நிரூபிக்க தொல்லியல் ஆதாரங்கள் தேவை. அதற்காகத்தான் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி கரையில் அமைந்த ஆதிச்சநல்லூர், சிவகளையில் அகழாய்வு நடத்த வேண்டும் என தினகரன் நாளிதழ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தாமிரபரணியின் கரையில் செழுமை நிறைந்து அமைந்துள்ள சிவகளை கிராமத்தின் மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கிறது தமிழர்களின் கற்கால நாகரிகம். பழங்கால மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள், பழங்கற்கால கருவிகள், இடைக்கற்கால கருவிகள், புதிய கற்காலத்தைச் சார்ந்த இரும்பு பொருட்கள், சுண்ணாம்பிலான முதுமக்கள் தாழிகள், தானியங்கள், எலும்புகள், நடுகற்கள், கல்வெட்டுகள், தமிழ் வட்டெழுத்துக்கள், மேட்டு கற்குடி பகுதிகள், எரிமலைக் குழம்பு ஓடிய பகுதிகள், பழங்காலத்தில் தாமிரபரணி ஓடிய பாதைகள் என அடுக்கடுக்காக பல்வேறு தொல்லியல் எச்சங்கள் இங்கு புதைந்து கிடப்பதை சிவகளையைச் சார்ந்த வரலாற்று ஆசிரியரும் வைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியரும் திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவருமான சிவகளை மாணிக்கம் கண்டறிந்தார்.

இதற்காக இவர் காடு போதல், சிவகளை தொல்லியல் கழகம் என்ற அமைப்புகளை உருவாக்கி அதில் தனது நண்பர்களான சிவகளை விஜய், கிருபாநிதி கணேஷ், திருப்பதி வெங்கடாச்சலம், வெள்ளையப்பன், ரமேஷ், சண்முகசுந்தராஜா, கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ், விக்னேஷ், பரும்பு சிவா,  ஜெபமாலை, வைகுண்டம் ஜெயக்குமார், வழக்கறிஞர் முத்துராமலிங்கம், ஆறுமுகபெருமாள், சிவகளை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நாராயணன், கணபதி சுந்தரராஜா, மீனாட்சிபட்டி மாணவர்கள் பார்வதிநாதன், இசக்கிமுத்து, தாணுசக்தி, பேட்மாநகரம் பாலசுந்தரராஜா, மூலக்கரை மயிலேறும்பெருமாள், சுப்பிரமணியன், ஏரல் சேகர் ஆகியோரின் உதவியுடன் சிவகளை பரும்பு பகுதியில் மேற்கொண்ட தேடல்களின் மூலம் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தி தமிழர் நாகரிகத்தை உலகறியச் செய்யும் முயற்சியை துவக்கினார்.
இதுகுறித்த தகவல்களை புகைப்படத்துடன் மத்திய, மாநில தொல்லியல்துறைக்கு சிவகளை மாணிக்கம் தொடர்ச்சியாக அனுப்பி வந்தார். இதுகுறித்து தகவலை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக தினகரனில் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை ஆணையாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் உத்தரவின் பேரில் தமிழக தொல்லியல் துறை அலுவலர்கள் லோகநாதன் மற்றும் பாஸ்கர் இப்பகுதியை பார்வையிட்டு தமிழக தொல்லியல் துறைக்கு அறிக்கை அனுப்பினர்.

அதில், சிவகளையில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தொல்லியல் களம் இருந்ததற்கான தடயங்கள் பல காணப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதிகளை அகழாய்வு செய்தால் மேற்கொண்டு பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வரலாம் என்றும் பழங்காலத்தில் சிவகளையின் வடக்கே தாமிரபரணி ஆறு ஓடியதற்கான தடயங்கள் காணப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளனனர். இதைத்தொடர்ந்து இந்திய தொல்லியல்துறை அலுவலர்கள் டாக்டர் யத்தீஸ்குமார், டாக்டர் பிரசன்னா, கல்வெட்டாய்வாளர் வீரமணிகண்டன், நாகராஜன், கல்வெட்டு படியெடுப்பாளர் நசுருல்லா ஆகியோர் சிவகளையில் ஆய்வு செய்து இங்கு இடைக்கற்கால மற்றும் பெருங்கற்கால குடியேற்றங்கள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன என்ற அறிக்கையை இந்திய தொல்லியல் துறைக்கு அனுப்பினர்.

சிவகளையில் மிகப்பெரிய தொல்லியல் களம் இருப்பதை கண்ட இந்திய தொல்லியல் துறையினர் இதுவரை யாராலும் கண்டுபிடிக்கப்படாத மிகவும் முக்கியமான பரந்து விரிந்த தொல்லியல் களம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது மிகப்ெபரிய சாதனை என குறிப்பிட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆதிச்சநல்லூர் தொல்லியல்களத்தைவிட பெரியதான சிவகளை தொல்லியல் களத்திலும் அகழாய்வு செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். நீதியரசர்கள் கிருபாகரன் மற்றும் சுந்தர் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து மத்திய மற்றும் தமிழக தொல்லியல் துறையின் உயரதிகாரிகள் சிவகளை தொல்லியல் களம் குறித்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டனர்.இதை தொடர்ந்து இந்திய மற்றும் தமிழக தொல்லியல் துறை உயரதிகாரிகள மதுரை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சிவகளையில் வரும் ஜனவரி 2020ல் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என ெதரிவித்திருந்தனர். தமிழக தொல்லியல் துறை சிவகளையை அகழாய்வு செய்வதற்கான உத்தேச செலவு பட்டியலை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டது.

இந்நிலையில் சிவகளையை பார்வையிட்டு அறிக்கை செய்ய தமிழக தொல்லியல்துறை ஆணையாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் தலைமையில் இந்திய மற்றும் தமிழக தொல்லியல் துறை அலுவலர்களும், தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி, திருச்செந்தூர் ஆர்டிஓ கோவிந்தராஜு, ஏரல் தாசில்தார் மலர்தேவன் அடங்கிய குழு சிவகளை தொல்லியல் களங்களை ஆய்வு செய்து சிவகளை அகழாய்வு பணிக்கான அறிக்கையை தயார் செய்தனர். பின்னர் தமிழக அமைச்சர் பாண்டியராஜன், ஆணையாளர் உதயச்சந்திரன் ஆகியோர் டெல்லி சென்று மத்திய அரசிடம் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல் மற்றும் கீழடியை அகழாய்வு செய்ய அனுமதி கேட்டனர்.

 இதில் ஆதிச்சநல்லூர், கொடுமணல் மற்றும் கீழடி போன்ற தொல்லியல் களங்களில் அடுத்த கட்ட அகழாய்விற்கும் சிவகளை தொல்லியல் களங்களில் முதற்கட்ட அகழாய்வு செய்வதற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து தமழிர்திருவிழாவான பொங்கல் விழா கொண்டாட்டங்கள் நிறைவடைந்த பின் சிவகளையில் தொல்லியல்  கள ஆய்வு செய்யப்படும் என உதயசந்திரன் தெரிவித்துள்ளார். சிவகளை அகழாய்வு தமிழக பண்பாட்டையும் நாகரிகத்தையும் உலகறியச் செய்ய பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  சிவகளை தொல்லியல் களத்தை பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பார்வையிட்டு சென்றுள்ளனர். குறிப்பாக பாளை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முதல்வர் டாக்டர் சாதிக், வரலாற்று ஆய்வுத்துறை தலைவர்கள் நசீர் அகமது, முகைதீன் பாட்சா, பேராசிரியர்கள் ஆஷா, ஆய்வு மைய ஒருங்கினைப்பாளர் சின்னத்தம்பி, நெல்லை ராணி அண்ணா கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை சிவசங்கரி ஆகியோர் அடங்கிய குழு சிவகளை தொல்லியல்களத்தை மாணவர்களுடன் வந்து ஆய்வு செய்தனர்.

இடைக்கற்கால கருவிகள்
சிவகளையில் இடைக்கற்கால கருவிகள் நூற்றுக்கணக்கான அளவில் கண்டுபிடிக்கப்பட்டு அவைகள் செர்ட், ஜாஸ்பர் அகேட் மற்றும் பிளண்ட் வகையைச் சார்ந்தது என அறியப்பட்டுள்ளது. சிவகளை சாயர்புரத்திற்கு மிக அருகில் இருப்பதால் இவ்வகையான கருவிகள் சிவகளையில் காணப்படுகின்றன. சாயர்புரத்திலுள்ள தேரிக்காடுகளிலும் இவ்வகையான கற் கருவிகள் கிடைத்திருந்தாலும் அங்கு குடியேற்றங்கள் இல்லை. சிவகளையின் கீழக்குளத்தின் கிழக்குப் பகுதியின் கடைசிப்பகுதியில் தேரிக்காடுகள் அதிகம் காணப்படுகின்றன. வேட்டையாடுதலுக்காக சிவகளையிலிருந்து ஆதிகால மனிதர்கள் சாயர்புரம் சென்றிருக்கலாம். இக்கருவிகளை வைகுண்டம் குமரகுருபரசுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் தொன்மை பாதுகாப்பு மன்றத்தில் ஆசிரியர் சிவகளை மாணிக்கம் பாதுகாத்து வருகிறார்.

பஞ்சாயத்து உதவும்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளரான மதிவாணன் மகளும் பி.இ. பட்டதாரியுமான பிரதிபா, சிவகளை பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றுள்ளார். சிவகளை தொல்லியல் களம் குறித்து அவர் கூறுகையில், சிவகளையை அகழாய்வு செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். சிவகளையை அகழாய்வு செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். பாராளுமன்றத்தில் டி.ஆர். பாலு எம்பி இதுகுறித்து கேள்வி கேட்டபோது மத்திய தொல்லியல் அமைச்சர் தமிழக தொல்லியல் துறை சிவகளையை அகழாய்வு செய்யும் என கூறியிருந்தார்.

நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் நிறைந்த சிவகளையில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தொல்லியல் களத்தையும், அதில் பல்வேறு தொல்பொருட்கள் இருப்பதையும் பற்றி எங்கள் ஊரைச் சார்ந்த வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் ஆய்வில் கண்டறிந்தார்.  சிவகளை கிராமமானது தொன்மையும், பழமையும் மிக்க பாரம்பரியான கிராமமாகும். சிவகளை தொல்லியல் களமானது நீரிலும், நிலத்திலும் என சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. இங்கு பல்வேறு தொல்பொருட்கள் காணப்படுகின்றன. தொல்லியல் எச்சங்கள் நிறைந்த சிவகளையில் அகழாய்வு செய்தால் உலகின் பழமையான நாகரிங்களில் ஒன்றான தமிழர் நாகரிகத்தை பற்றி மக்கள் தெரிந்து கொள்வர். விரைவில் நடக்கவுள்ள சிவகளை தொல்லியல் ஆய்வுக்கு தேவையான அனைத்து ஒத்தழைப்பும் பஞ்சாயத்து சார்பில் செய்து கொடுக்கப்படும் என்றார்.

இதேபோல் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் 6வது வார்டு உறுப்பினரான சிவகளை ராமலெட்சுமி கூறுகையில்; எங்கள் ஊரில் தொல்லியல் துறை சார்பில் விரைவில் அகழாய்வு நடத்தப்பட உள்ளது. அதன் பிறகு சிவகளை கிராமத்தின் பெயர் உலகமெங்கும் வாழும் தமிழர்களிடமும், அனைத்து தரப்பு மக்களிடமும் போய்சேரும். அகழாய்வு பணிகள் துவங்கும் நாளை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

சிவகளை அமைவிடம்
ஆதிச்சநல்லூரைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்கும் நிலையில் எங்கிருக்கிறது இந்த சிவகளை? தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய வணிக நகரங்களில் ஒன்றான ஏரலிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம். சுமார் 1800 குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஊரின் தென்புறம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தாமிரபரணி பாய்கிறது. வடபுறம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேலகுளம், கீழகுளமும், கீழ்புறம் வயல்களும் பெருங்குளம் ஊரும், மேல்புறம் வயல்களும் பேட்மாநகரம் ஊரும் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மேலகுளம், கீழகுளம் அமைந்துள்ள பகுதி வழியாக பாய்ந்த தாமிரபரணி ஏரல் நட்டாத்தி அம்மன் கோயில் வழியாக கொற்கை கடலில் சங்கமித்துள்ளது. சிவகளையிலிருந்து கிழக்கே 7 கி.மீ தொலைவில் கொற்கை அமைந்துள்ளது. சிவகளையிலிருந்து மேற்கே 7 கிலோ மீட்டர் தொலைவில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது.

4 வகை குடியேற்றங்கள்
சிவகளையில் பழைய கற்கால குடியேற்றங்கள், இடைகற்கால குடியேற்றங்கள், பெருங்கற்கால குடியேற்றங்கள் மற்றும் வரலாற்று கால குடியேற்றங்கள் என நான்கு விதமான குடியேற்றங்கள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன.
சிவகளையிலுள்ள தம்ளார் முக்கு, தாரசுகுளம். கல்மேட்டு பரம்பு, வெள்ளத்திரடு போன்ற பகுதிகளில் இவ்வகையான குடியேற்றங்கள் இருந்துள்ளன சிவகளையில் பல்வேறு வகையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சூழ வடிவம் பொறிக்கப்பட்டுள்ள சூழக்கல் காணப்படுகின்றன. சிவகளையில் ஏராளமான பாறைக்கிண்ணங்கள் காணப்படுகின்றன. அவைகள் அருகே எரிமலையின் லாவா ஓடியதற்கான தடயங்களும் காணப்படுகின்றன.

சிவகளை தொல்லியல் களத்தில் இரும்புத்தாதுக்கள் மற்றும் குவார்ட்ஸ் வகை கற்கள் அதிகம் காணப்படுகின்றன. அதேபோல் தமிழர்களின் சிறப்பான கருப்பு சிவப்பு வண்ண மண்பாண்டங்கள் அதிகம் காணப்படுகின்றன. வல்லநாடு மலையிலிருந்து சிவகளை தொல்லியல் களத்தில் மான்கள் இன்றும் வந்து செல்கின்றன. சிவகளை ஒரு காலத்தில் வளநாடாக இருந்துள்ளது. சிவகளையின் அருகேயுள்ள மீனாட்சிபட்டி மற்றும் புதுப்பட்டி கிராமங்களிலுள்ள மிகப்பெரிய மேய்ச்சல் இடம் ஆடு மாடுகளை மேய்க்கும் இடமாக இருந்துள்ளது.

குட்டி கொழும்பு
சிவகளையின் நான்கு புறங்களிலும் நீர் நிலைகள் அமைந்துள்ளதால் கொழும்பு தீவைப்போல் உள்ளதாக கருதி, இப்பகுதியை குட்டி கொழும்பு என்று பிரிட்டீஸ்காரர்கள் அழைத்துள்ளனர். சிவகளையைச் சேர்ந்த பலர் கொழும்புவில் வியாபாரம் செய்து வந்ததால் இந்த பெயர் வந்துள்ளது. ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கீழ, மேல குளங்களிலும் தொல்லியல் எச்சங்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்த குளங்கள் ஒரு காலத்தில் தாமிரபரணி ஆறு ஓடிய பகுதியாக இருந்ததால் இந்தக்குளக்கரைகளிலும் அருகே உள்ள வயல்களிலும் ஆற்று மணல் படிந்து காணப்படுகின்றன.

கண்டறியப்படாத களம்
சிவகளையின் தொல்லியல் களத்தை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆதிச்சநல்லூரை பற்றி கூறியிருந்த அலெக்ஸாண்டர் ரியா, தென்தமிழகத்தை பற்றி ஆய்வு செய்த போப் மற்றும் கால்டுவெல் போன்றவர்களின் கண்களில் கூட இந்த இரண்டாயிரம் ஏக்கர் நிலபரப்பளவுள்ள தொல்லியல் களம் படாமல் இருந்தது ஆச்சரியமான ஒரு விஷயமாக தமிழக மற்றும் இந்திய தொல்லியல் துறை அலுவலர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழக தமிழினையதளத்தில் சிவகளை தொல்லியல் களத்தைப்பற்றி குறிப்பிட்டுள்ளனா். அதில் சிவகளை தொல்லியல் களத்தை கண்டறிந்தவர் என்கிற பெருமையை சிவகளை மாணிக்கத்திற்கு கொடுத்துள்ளனர்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்