SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சஞ்சய் ராவுத்தின் தொடரும் சர்ச்சை பேச்சால் சிவசேனா - காங்கிரஸ் மோதல் வலுக்கிறது: கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்படுமா?

2020-01-19@ 00:06:08

மும்பை: சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவுத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதால், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் இடையே மோதல் வலுத்து வருகிறது. இதனால், கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்படுமோ என இரு கட்சித் தலைவர்களிடையே அச்சம் நிலவுகிறது. மறைந்த மும்பை நிழல் உலக தாதா கரீம் லாலாவை மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மும்பை வந்தபோது சந்தித்து பேசியதாக சஞ்சய் ராவுத் சமீபத்தில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திரா காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தும் வகையிலும் சஞ்சய் ராவுத் பேசியதாக காங்கிரஸ் தலைவர்களும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, தான் பேசிய கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நேற்று முன்தினம் சஞ்சய் ராவுத் அறிவித்தார். இத்துடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும் என்று கருதப்பட்டது.ஆனால், சஞ்சய் ராவுத் நேற்று மீண்டும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார். ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘ரேப் இன் இந்தியா’வாக நாடு மாறிக் கொண்டிருக்கிறது என்று கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜ தலைவர்கள், இந்திய பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், மன்னிப்பு கேட்க மறுத்த ராகுல் காந்தி, ‘‘மன்னிப்பு கேட்க எனது பெயர் ராகுல் சாவர்கர் அல்ல, ராகுல் காந்தி’’ என்று பேசினார். அந்தமான் சிறையில் இருந்து விடுதலையாக பிரிட்டிஷாருக்கு சாவர்கர் மன்னிப்பு கடிதம் எழுதியதாக கூறப்படுவதை குறிப்பிடும் வகையில்தான் ராகுல் காந்தி மேற்கண்டவாறு பேசியதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

ராகுலின் இந்த பேச்சுக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவுத்தும் ராகுலின் இந்த பேச்சுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். ‘‘நேரு, இந்திரா காந்தி போன்ற தலைவர்களை நாங்கள் மதிப்பதைபோல நாங்கள் மதிக்கும் தலைவர்களை நீங்கள்(காங்கிரசார்) இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும்’’ என்று சஞ்சய் ராவுத் கூறியிருந்தார்.இப்போது, இதே சாவர்கர் பிரச்னையை மீண்டும் கையிலெடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் சஞ்சய் ராவுத். நேற்று அவர் கூறுகையில், ‘‘நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட வீர் சாவர்கருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். சாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க எதிர்ப்பு தெரிவிப்பவர்களை இரண்டு நாளாவது அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் சாவர்கர் பட்ட கஷ்டம் அவர்களுக்கு தெரியவரும்’’ என்றார்.ராகுல் காந்தியை மனதில் வைத்துதான் சஞ்சய் ராவுத் இவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது. சஞ்சய் ராவுத்தின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆதித்ய தாக்கரே கண்டனம்
இன்னும் எத்தனை காலம்தான் பழைய வரலாற்றையே பேசிக் கொண்டிருப்பீர்கள் என்று சஞ்சய் ராவுத்துக்கு அமைச்சரும் யுவசேனா தலைவருமான ஆதித்ய தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். சஞ்சய் ராவுத்தின் பேச்சு குறித்து கேட்டதற்கு ஆதித்ய தாக்கரே கூறுகையில், ‘‘இன்னும் எத்தனை காலம்தான் பழையவற்றையே பேசிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? கட்சியின் எந்த பொறுப்பிலிருந்து அவர் இப்படிப் பேசுகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. மாநில மக்களின் வளர்ச்சி பற்றி மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி பேசிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ்-சிவசேனா இடையே இன்னும் பிரச்னை ஏற்படவில்லையே என பலர் கவலைப்பட்டு கொண்டிருக்கும்போது இப்படி ஒரு பேச்சு தேவையற்றது’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

 • bogi13

  பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

 • 13-01-2021

  13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்