SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரியில் சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தீவிரவாதிகள் சதி திட்டம்: மர்ம பையில் இருந்தது வெடிகுண்டா? திடுக்கிடும் தகவல்கள்

2020-01-14@ 03:23:13

நாகர்கோவில்: குமரி எஸ்.ஐ. சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் போலீஸ் தேடி வரும் தீவிரவாதிகள் நெய்யாற்றின்கரை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. இவர்கள் கையில் வைத்திருந்த பையில் இருந்தது வெடிகுண்டா? என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் (57) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டிஜிபி திரிபாதியும் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். சம்பவ இடத்தின் அருகே உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் (32), நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பகுதியை சேர்ந்த தவுபிக் (28) ஆகியோர்தான் எஸ்எஸ்ஐயை சுட்டு கொன்றவர்கள் என தெரிய வந்தது.

இந்து இயக்க தலைவர்களை கொல்ல முயன்றதாக இவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன. இவர்கள் கேரளாவில் தலைமறைவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை பிடிக்க குமரி மாவட்ட எஸ்.பி. நாத் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 6 நாட்களில் 100 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்தும் கொலையாளிகள் சிக்கவில்லை. இந்நிலையில், களியக்காவிளை அடுத்த கேரள மாநிலம் பாறசாலை முதல் திருவனந்தபுரம் வரை பல்வேறு இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் கொலையாளிகள் இருவரும் குமரி - கேரள எல்லையான நெய்யாற்றின்கரை பகுதியில் சுற்றி திரிந்த வீடியோ காட்சிகள் சிக்கின. கடந்த 8ம் தேதி இரவு எஸ்எஸ்ஐ வில்சனை சுட்டு கொன்றனர். அதற்கு முதல் நாள்,  7ம் தேதி நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள கோயில் அருகே சாலையில் இருவரும் நடந்து செல்கின்றனர்.

அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்குள் செல்கின்றனர். இதே போல் 8ம் தேதி காலையிலும் அப்பகுதியில் நடமாடியதற்கான வீடியோ காட்சிகளும் உள்ளன. 8ம் தேதி பொது வேலை நிறுத்தம் என்பதால், கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. பஸ்கள் ஓடாததால் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். இவர்கள் பயணம் செய்த ஆட்டோவை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த ஆட்டோ டிரைவரிடமும் விசாரணை நடந்தது. இதில் நெய்யாற்றின்கரையில் ஒரு குடியிருப்பு பகுதியில் இவர்கள் இறங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் விசாரித்த போது, அப்துல் சமீம் மற்றும் தவுபிக் ஆகியோர் அங்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்துள்ளனர். இவர்களுக்கு திருவனந்தபுரம் விதுரா பகுதியை சேர்ந்த சையது அலி என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்துள்ளார். கடந்த 7, 8 ம் தேதிகளில் இந்த வீட்டில் தான் இருந்துள்ளனர். அப்போது இவர்களின் கூட்டாளிகளுடன் ரகசிய ஆலோசனையும் நடத்தி உள்ளனர்.

கொலைக்கான சதி திட்டத்தை இந்த வீட்டில் இருந்து தான் தீட்டி உள்ளனர் என போலீசார் கூறுகிறார்கள். கொலை செய்து விட்டு எப்படி தப்பி செல்ல வேண்டும். எங்கு தலைமறைவாக இருக்க வேண்டும் என்பது வரை இவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு முடிவு செய்து அதன் பின்னரே கொலை செய்துள்ளனர்.  பெங்களூரில் இவர்களது கூட்டாளிகள் 3 பேரை 6ம் தேதி நள்ளிரவில் தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். 7ம்தேதி இந்த தகவல் தெரிகிறது. இதற்கு பழி வாங்கவே இவர்கள் தமிழகத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரை கொல்ல சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என கூறப்படுகிறது. அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகியோர் வைத்திருந்த மர்ம பையில் இருந்தது வெடிகுண்டாக இருக்கலாமா? அந்த மர்ம பை எங்கு சென்றது என்பதில் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வருகிறது.

திருவனந்தபுரம்: தவுபீக் மற்றும் அப்துல் சமீமிற்கு நெய்யாற்றின்கரையில் வாடகை வீடு எடுத்து ெகாடுத்த செய்யது அலி விதுராவில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அதே பகுதியில் ஒரு வாடகை கட்டிடத்தில் கம்ப்யூட்டர் நிறுவனமும் நடத்தி வந்துள்ளார். பெயருக்கு தான் அந்த நிறுவனத்தை அவர் நடத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவருக்கு அதே வணிக வளாகத்தை சேர்ந்த ஒரு வியாபாரி தான் கடை எடுத்து கொடுத்துள்ளார். மனைவி வீடு அருகில் தான் உள்ளது. இருப்பினும் இவர் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். எஸ்ஐ கொல்லப்பட்ட அன்று இரவு இவர் வீட்டில் இருந்துள்ளார். அன்று அதிகாலை 2 மணிவரை இவர் லேப்டாப் பயன்படுத்தியுள்ளார். இதன் பின்னர் இவர் தலைமறைவாகியுள்ளார். இந்த வீட்டை சோதனையிட்ட தமிழக கியூ பிரிவு போலீசார் லேப்டாப்பை கைப்பற்றி பரிசோதித்து வருகின்றனர். கொலைக்கு இவர்தான் மூளையாக இருந்திருக்கலாம் என்று ேபாலீசார் கருதுகின்றனர்.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கேரள போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஒரு புதிய வீடியோ
சப் இன்ஸ்பெக்டர் கொல்லப்படுவதற்கு சில விநாடிகளுக்கு முன் கொலையாளிகள் நடந்து செல்லும் கேமரா பதிவு தற்போது வெளியாகியுள்ளது. களியக்காவிளை சோதனை சாவடி அருகே முகத்தை மறைக்காமல் இவர்கள் சாதாரணமாக நடந்து செல்கின்றனர். செக்போஸ்ட் அருகில் உள்ள ஒரு சந்துக்குள் சென்று முகத்தை மறைத்துவிட்டு வெளியே வந்து சோதனைசாவடி நோக்கி செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. இது போலீசாருக்கு முக்கிய தடயமாக கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்

Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
  • humanbodies23

    2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

  • jammu23

    ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

  • yamuna23

    இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

  • chadpuja23

    சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

  • isrelviva23

    இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்