SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலைகுனிவு

2020-01-13@ 00:17:59

கிராமங்களே ஒரு நாட்டின் அடையாளம். அவற்றை நிர்வகிக்கும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் அரசு கண்ணாமூச்சி காட்டி வந்தது. உச்சநீதிமன்றம் போட்ட கடிவாளத்தில் கடந்த மாதம் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஓட்டு எண்ணிக்கை முடிந்தவரை நடந்த குளறுபடிகளுக்கு அளவேயில்லை. இதைப்பற்றி எந்த கவலையும் பட்டுக்கொள்ளாத மாநிலதேர்தல் ஆணையம், யூனியன் தலைவர்கள், துணை தலைவர்கள், பஞ்சாயத்து துணை தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களை தேர்வு செய்யும் மறைமுக தேர்தலை கடந்த 11ம் தேதி நடத்தியது. இதிலும் அதிகாரிகள் துணையுடன் தில்லுமுல்லுகள் அரங்கேற வாய்ப்புள்ளதால் தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வீடியோபதிவுகளை மீறியும் முறைகேட்டையும், குளறுபடிகளையும் துணிச்சலாக நிறைவேற்றியுள்ளது ஆளுங்கட்சி தரப்பு.

எதிர்க்கட்சிகள் வெற்றிபெறும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் அதிகாரிகளுக்கு ஏனோ உடல்நலமில்லாமல் போனது. சில இடங்களில் கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதால் கோரம் இல்லை என்று சொல்லி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
தர்மபுரி மொரப்பூரில் தேர்தல் அலுவலர் மயக்கம் அடைந்தார். கோவில்பட்டியில் தேர்தல் அலுவலருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒன்றிய தலைவர் தேர்தலை அதிமுக உறுப்பினர்களே புறக்கணித்தனர்.
திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டில் எந்த உறுப்பினர்களும் மறைமுக தேர்தலில் பங்கேற்காததால் ஒன்றிய தலைவர் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கவுன்சிலர்கள் காத்திருக்க அதிகாரிகள் மட்டும் வரவேயில்லை.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானபோது எதிர்க்கட்சிகளின் கூட்டணியை விட குறைவான இடங்களில் வெற்றி பெற்றிருந்த ஆளுங்கட்சி தரப்பு மறைமுக தேர்தலின்போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளையும், யூனியன் தலைவர் பதவிகளையும் கூடுதலாக கைப்பற்றியதன் மர்மம் கண்ணாடி இன்றியே கைப்புண் போல எல்லோருக்கும் புலப்படும். முறைகேடுகளை தடுக்க வேண்டிய அதிகார வர்க்கம் மட்டும் வாய்மூடி மவுனமாக தேர்தல் முறைகேடுகளுக்கு துணை போயுள்ளது. தேர்தலுக்கு முன்பே வார்டு உறுப்பினர்கள், தலைவர்கள் பதவி பல லட்சத்திற்கு ஏலம் போனது. அரசு தரப்பில் கவுரவ சன்மானமும், அலங்காரமான பதவியும் மட்டுமே கிடைக்கும் நிலையில் இந்த பதவிகள் இப்படி ஏலம் போனதே எதிர்கால முறைகேடுகளுக்கு பிள்ளையார் சுழி போடத்தான் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உலகிற்கே குடவோலை மூலம் தேர்தலை அறிமுகப்படுத்திய தமிழினம் சமீபகால தேர்தல் முறைகேடுகளை கண்டு வெட்கப்பட வேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

 • odisaa_satueesss

  ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

 • 20-01-2021

  20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்