காளையார்கோவிலில் 13ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுப்பு
2019-12-21@ 15:52:09

தஞ்சை : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகளை தஞ்சையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். தஞ்சாவூர் வரலாற்று ஆய்வாளர்களான சரஸ்வதி மகால் நூலக தமிழ் பண்டிதர் மணி.மாறன், ஜம்புலிங்கம், கோவிந்தராஜன் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் 2 பாண்டியர்கால கல்வெட்டுகளை கண்டறிந்தனர். இதுகுறித்து மணி.மாறன் கூறியதாவது: களையார்கோவிலின் பழமையான பெயர் கானப்பேரெயில், திருக்கானப்பேர், தலையிலங்கானம் என அழைக்கப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற தலங்களில் திருக்கானப்பேரும் ஒன்று.
அங்குள்ள சோமேஸ்வரர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள ராஜகோபுரம் மருது சகோதரர்களாலும், சுந்தரேஸ்வரர் கோவில், காளீஸ்வரர் கோவில் கோபுரம் வரகுணபாண்டியனாலும் அமைக்கப்பட்டது. சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் கானப்பேரெயில் என்ற அரண் அமைத்து சிங்களப்படைகளை வென்று ஆட்சி செய்த மன்னன் வேங்கைமார்பன். இம்மன்னன் காலத்தில் ஆழம் நிறைந்த அகழியும், மதில்களும், அடர்ந்த காவற்காட்டையும் உருவாக்கி பகைவர் எளிதில் கைப்பற்ற முடியாத அளவில் காளையார்கோவிலை அமைத்துள்ளார்.
கடைச்சங்க கால பாண்டிய மன்னன் விக்கிரபெருவழுதி, கானப்பேரெயிலை கைப்பற்றினான். கானப்பேரெயிலை சுற்றி இருக்கும் காடுகளின் அடர்த்தி தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வரையிலும், திண்டுக்கல், அழகர்கோயில் வரையிலும் எல்லையாய் அமைந்துள்ளது.அங்குள்ள கண்மாயின் உள்பகுதியில் பிற்காலத்தில் மருதுபாண்டியர்களால் கட்டப்பெற்ற நாணயசாலை கட்டிடம் பழுதடைந்து புதர் மண்டி கிடக்கிறது. அதன் வாயிற்படியில் பாண்டியர் காலத்தை சேர்ந்த உடைந்த நிலையில் உள்ள துண்டு கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டு 13ம் நூற்றாண்டை சேர்ந்தது.
இதேபோன்று மற்றொரு பாண்டியர் காலத்து கல்வெட்டு ஒன்றின் உடைந்த பகுதி கண்டறியப்பட்டது. அதில் பாண்டியர் காலத்தில் வழங்கப்பட்ட திருவிடையாட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வரலாற்று ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் புதிய செய்திகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். மாமன்னன் ராஜராஜனும் ராஜேந்திரனும் தங்களின் பெரும்படையை இவ்வூரின் வழியே வழிநடத்தி ஈழம் சென்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கி.பி.1325ல் வந்த அரபு நாட்டு பயணி திமிஸ்கி என்பவர் இவ்வூரை காய்ன் என்ற பெயரால் குறிப்பிட்டுள்ளார். அவர் தம் பயணக்குறிப்பில் தென்னகத்தின் சிறந்த ஊர்களில் ஓர் ஊராக இவ்வூரை பதிவு செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
கொந்தகை அகழாய்வில் அடுத்தடுத்து கிடைக்கும் முதுமக்கள் தாழிகள்
திருவலம் அருகே பொன்னையாற்றின் குறுக்கே பழுதான இரும்பு பாலம் சீரமைப்பு பணி தீவிரம்
விராலிமலையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்; 800 காளைகள் சீறி பாய்ந்தன
ஓசூர் பகுதியில் மழைநீரில் நனைந்து 50 டன் வெங்காயம் அழுகி சேதம்: பல லட்ச ரூபாய் நஷ்டமானதால் விவசாயிகள் வேதனை
தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலான நகரங்களில் புறவழிச்சாலை அமைக்கப்படும்; அமைச்சர் எ.வ.வேலு தகவல்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் புதிய மதுக்கடை திறக்க இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை ஆணை..!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!