SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களவையில் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்

2019-12-11@ 00:10:37

* அதிமுக உள்ளிட்ட 22 ஆதரவு எம்பி.க்கள் உதவியுடன் நிறைவேற்ற பாஜ திட்டம்

புதுடெல்லி: மக்களவையில் நீண்ட விவாதத்திற்குப் பின் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், அதிமுக உள்ளிட்ட 22 ஆதரவு கட்சி எம்பி.க்கள் உதவியுடன் மசோதாவை நிறைவேற்ற பாஜ திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டு, இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று பா.ஜ தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உருவாக்கி உள்ளது. 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம் என்பதே சட்ட திருத்தமாகும். இந்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தம் சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நீண்ட விளக்கமளித்தார்.

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க 9 மணி நேரம் விவாதம் நடந்தது. பின்னர் நள்ளிரவில் ஓட்டெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்பிக்களும், எதிராக 80 பேரும் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்களவையில் மசோதா நிறைவேறிய நிலையில் அசாம், மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பொதுமக்கள் நேற்று போராட்டங்களில் ஈடுபட்டனர். அசாமில் 144 தடை உத்தரவு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பல பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இங்கும் நீண்ட விவாதம் நடத்தப்பட வாய்ப்புள்ளது. மக்களவையில் பாஜவுக்கு பெரும்பான்மை பலமிருப்பதால் எந்த சிக்கலும் இன்றி மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 2016ல் இந்த மசோதா கொண்டு வரப்பட்ட போது கூட மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் பெரும்பான்மை பலமில்லாததால் பாஜ அரசால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 238. மசோதாவை நிறைவேற்ற 120 எம்பிக்களின் ஆதரவு தேவை. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 105 எம்பிக்கள் உள்ளனர். பாஜவுக்கு மட்டும் 83 உறுப்பினர்களும், அதன் கூட்டணிகளான ஐக்கிய ஜனதா தளத்துக்கு 6, சிரோன்மணி அகாலி தளத்திற்கு 3, எல்ஜேபி மற்றும் ஆர்பிஐ (ஏ) ஆகிய கட்சிகளுக்கு தலா 1 எம்பிக்களும் உள்ளனர். இதர 11 பேர் நியமன எம்பிக்கள் ஆவர். எனவே, இன்னும் 15 எம்பி.க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், அதிமுக உள்ளிட்ட ஆதரவு கட்சிகளிடம் பாஜ பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. அதிமுக 11, பிஜு ஜனதா தளம் 7, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 2, தெலுங்கு தேசம் 2 எம்பி.க்கள் என 22 உறுப்பினர்களை கொண்டுள்ளன. ஏற்கனவே, அதிமுக இம்மசோதாவுக்கு முழு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது. எனவே, ஆதரவு கட்சிகள் உதவினால், பாஜவுக்கு 127 எம்பிக்கள் ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் மாநிலங்களவையிலும் மசோதாவை நிறைவேற்ற முடியும்.

பெரும்பான்மை தந்ததற்காக மக்கள் கொடுக்கும் விலை

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில், ‘திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா, அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றுவது அப்பட்டமான அரசியல் சாசன விதிமீறல். போராட்ட களம் உச்ச நீதிமன்றத்திற்கு மாறி இருக்கிறது. இனி எம்பிக்கள் வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் ஆதரவாக தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். ஒரு கட்சிக்கு அறுதி பெரும்பான்மை தந்ததற்கு நாம் கொடுத்துள்ள விலை இது. அந்த பெரும்பான்மையை வைத்து, நாட்டு மக்களின் விருப்பம் காலில் போட்டு நசுக்கப்படுகிறது,’ என கூறியுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாள் சிறை தண்டனை அனுபவித்து ஜாமீனில் வெளிவந்துள்ளார் ப.சிதம்பரம். அவர் வெளியில் வந்ததுமே, காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். பாஜ அரசின் பொருளாதார கொள்கையை கடுமையாக விமர்சிக்கிறார். எனவே, இன்று மாநிலங்களவையில் அவர் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து கடுமையாக குரல் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு அமித்ஷா எந்த மாதிரியான விளக்கமளிக்க இருக்கிறார் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

லெப்ட் ரைட்.. லெப்ட்ரைட்.. அபோட் டர்ன்

மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா விலகி காங்கிரசுடன் சேர்ந்துள்ளது. இக்கட்சியின் ஆதரவுடன்தான், மகாராஷ்டிராவில் இக்கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இதன் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சிவசேனா மட்டும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளது. இது, காங்கிரசுக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது. இதையடுத்து, ‘மக்களவையில் ஆதரவளித்து விட்டோம், ஆனால், மாநிலங்களவையில் எதிர்ப்போம்’ என அக்கட்சி எம்பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

ஆதார் எண் இல்லாவிட்டால் ரேஷன் பொருள் கிடையாதா?

மக்களவையில் நேற்று மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நாட்டில் மொத்தம் 5.35 லட்சம் ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 4.58 லட்சம் கடைகளில் ஆதார் அட்டைகள் மூலம் பாயின்ட் ஆப் சேல்ஸ் கருவிகளில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 20 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 65 கோடி பயனாளிகள் ஆதார் இணைக்கப்பட்டு பயன்பெறுகின்றனர். ஆனாலும் ஆதார் இணைக்காதவர்களுக்கு உணவு பொருட்களை வழங்க மறுக்க கூடாது என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆதார் அட்டைகள் இல்லாதவர்கள் பெயர்களை ரேஷன் அட்டைகளில் இருந்து நீக்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் மூலம் பயனாளிகள் முழுமையான பலன்களை பெறும் வகையில் தான் ஆதார் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் பேசினார்.

நமது முழு பலத்தையும் திரட்டி போராடுவோம்

மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘மக்களவையில் நேற்று நள்ளிரவு குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலமாக இந்தியாவின் மதவெறியும், குறுகிய மனப்பான்மையும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. நம்முடைய சுதந்திரத்துக்காக முன்னோர்கள் தங்களுடைய ரத்தத்தை சிந்தி, தியாகம் செய்தனர்.

இந்த சுதந்திரமானது சமத்துவ, மதச் சுதந்திரங்களை கொண்டது.   நமது அரசியல் சாசனம், நமது குடியுரிமை, வலிமையான, ஒன்றுபட்ட இந்தியா என்பது நாம் எல்லோருக்கும் சொந்தமானது. நமது அரசியல் சாசனத்தையும், அடிப்படை சுதந்திரங்களையும் திட்டமிட்டு அழிக்கும் இந்த அரசின் கொள்கைகளுக்கு எதிராக நமது முழு பலத்தையும் திரட்டி போராடுவோம்,’ என்று கூறியுள்ளார்.

அடித்தளத்தை அழிக்கும் முயற்சி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,  `குடியுரிமை திருத்த மசோதா இந்திய அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல். இதனை ஆதரிப்பவர்கள் நாட்டின் அடித்தளத்தை தாக்கி அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்,’ என கூறியுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம், வன்முறை

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், அருணாச்சல், மேகாலயா, மிசோரம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், வடகிழக்கு மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பு’ நேற்று காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரையிலான, 11 மணி நேர கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. நாகலாந்தில் டிசம்பர் முதல் வாரத்தில் `ஹார்ன்பில்’ என்று அழைக்கப்படும் பழங்குடியினர் திருவிழா நடைபெறுவதால் அம்மாநிலத்துக்கு மடடும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பினர், வடகிழக்கு மாநிலங்களுக்கு வருகை புரிய அமைச்சர் அமித்ஷாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். கவுகாத்தியில் மாலிகான் பகுதியில் அரசுப் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இருசக்கர வாகனம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது. தலைமை செயலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் கவுகாத்தி, திப்ரூகர் பல்கலைக் கழகங்களில் பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை பாதித்தது. திரிபுராவில் நடந்த போராட்டத்தில் மார்கெட்டுக்கு தீ வைக்கப்பட்டது. 300 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவின் தீய நோக்கம் பாக். அரசு கருத்து

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `மிகவும் பிற்போக்குதனமான, பாரபட்சமான குடியுரிமை திருத்த மசோதாவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அனைத்து மனித உரிமை விதிகளும் சர்வதேச உடன்படிக்கைகளும் இந்தியாவால் மீறப்பட்டுள்ளது. அண்டை நாடுகளின் விவகாரத்தில் மதத்தின் அடிப்படையில் தலையிட விரும்பும் இந்தியாவின் தீய நோக்கத்தை, இந்த மசோதா வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சிறுபான்மையினரின் பாதுகாப்பு, உரிமைகள் குறித்த பல்வேறு ஒப்பந்தங்களுக்கு முற்றிலும் முரணாக இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `சர்வதேச மனித உரிமை சட்டத்தின் அனைத்து விதிகளும், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு ஒப்பந்தங்களும் முற்றிலும் மீறப்பட்டுள்ளன. இந்த மசோதா ஆர்எஸ்எஸ். அமைப்பு, தனது இந்து ராஜ்யத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகும்,’ என்று கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்