SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய மொந்தையில் பழைய கள் ஆன தேர்தல் அறிவிப்பை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-12-08@ 00:41:56

‘‘புதிய மொந்தையில் பழை கள் என்பதற்கு சரியான உதாரணத்தை சொல்லுங்களேன்...’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாநில தேர்தல் ஆணையத்தை சொல்லலாம்... உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை பார்த்தால்... தேதி என்கிற மொந்தை மாறி உள்ளது. ஆனால் வார்டுவரையறை, இடஒதுக்கீடு போன்ற பழைய பிரச்னைகள் என்ற ‘கள்’ அப்படியே தொடர்கிறது... என்கிறார்கள் மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்தவர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘விக்கி நீங்க சொன்ன மாதிரியே இரண்டாவது அறிவிப்பை ஆணையம் வெளியிட்டுள்ளது போல...’’ என்றார் பீட்டர் மாமா.........
‘‘நேற்று முன்தினம் சேலம்காரர் உள்ளாட்சி தொகுதி பங்கீடு குறித்து பேச கூட்டணி கட்சியினரை அழைத்து தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று சொன்னாங்களாம்... இதையடுத்து அவர்களும் அவசரம் அவசரமாக பட்டியல் கொடுத்துவிட்டு வேட்பாளர்களை அறிவிக்க ரெடியாகிட்டாங்க... கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தலில் என்ன செய்யப்போகிறோம் என்பதை சூசகமாகவே சேலம்காரர் தெரிவித்துவிட்டாராம். அதனால் தான் நகர்ப்புற தேர்தல் குறித்து எந்த தலைவரும் இலை தலைவர்களை சந்தித்துவிட்டு வெளியே வந்த பிறகு வாயே திறக்கலையாம். இதன் பிறகே நேற்று முன்தினம் இரவு சேலம்காரரை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் தான் தயாராக வைத்திருந்த இரண்டு அறிவிப்புகளை காட்டினாராம்... இதில் இரண்டாவது அறிக்கை டிக் செய்யப்பட்டதாம். அதை ஒரு வரி மாறாமல் அப்படியே ஒப்பித்துள்ளார் மாநில தேர்தல் ஆணையர்... இப்படி தான் நடக்கும் என்பதை ஜேம்ஸ்பாண்ட் மாதிரி துப்பறிய தேவையில்லை... அவர்கள் தேர்தல் அறிவிப்பாணையை தயாரிக்கும்போதே அனைத்து தகவல்களும் கசிந்துவிட்டது... அதை தான் நான் சொன்னேன்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ அதிமுக எம்எல்ஏக்களை வறுத்தெடுத்த அமைச்சர் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா....
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்று 42 மாதத்தில் 23 மாதம் அரிசியும் போடவில்லை, பணமும் வழங்கவில்லையென எதிர்கட்சிகளான அதிமுக, பாஜ அரசை விமர்சித்து வந்தது. இதையடுத்து காங்கிரஸ் அரசு ₹78 கோடியாக குறைத்து கோப்புகள் அனுப்பப்பட்டு ஒப்புதல் கிடைத்ததாம். உடனே இதையும் அரசியலாக்க முடிவு செய்த அதிமுக எம்எல்ஏக்கள், அரிசிக்கான பணத்தை உடனே வழங்க வேண்டும். தாமதம் செய்யக் கூடாது என்று முதல்வர் அலுவலகம் முன் வரவேண்டும் என்றே தர்ணா நடத்தினர். இதை அப்படியே விட்டால் தங்களால்தான் மக்களுக்கு பணம் கிடைத்தது என்ற மாயையை அதிமுகவினர் உருவாக்கிவிடுவார்கள் என்று நினைத்த புதுச்சேரி அமைச்சர்... அதற்கு பதிலடி கொடுக்க காத்திருந்தார். அந்த நாளும் வந்தது... அதாவது அதிமுக எம்எல்ஏக்கள் பங்கு கொண்ட நிகழ்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். மேடையில் வைத்தே அதிமுகவை சகட்டு மேனிக்கு போட்டுத்தாக்கினார். டிராமா போராட்டத்தை அதிமுகவும், பாஜகவும் நடத்தியதாகவும், உங்கள் படம் எல்லாம் ரொம்ப நாளைக்கு ஓடாது. மக்களுக்கு எல்லாம் தெரியும். பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்ட வேண்டாம் என ரவுண்டு கட்டினார். அமைச்சர் பேச்சால் மேடையிலேயே அதிமுக எம்எல்ஏக்கள் நெளிந்தனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குழந்தையே பிறக்கலை... அதுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று இலை தரப்பு யோசிக்கிறது போல...’’ என்றார் பீட்டர் மாமா....
‘‘சேலம்காரர் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சி சமீபத்தில் ஈரோட்டில் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொள்ள சேலம்காரர் வந்தார். இவரை வரவேற்க, ராமன்-சிவன் பெயரை கொண்ட முன்னாள் அமைச்சர் ஒருவர் மண்டபத்தின் முன்பு காத்திருந்தனர். இதையறிந்த, சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த இலை கட்சியின் செயலாளரும், முன்னாள் துணை மேயருமான மாநில தேர்தல் ஆணையரின் பெயரை கொண்டவரும், முதல்வரை வரவேற்பதில் முந்திக்கொள்ள வேண்டும் என, தனது ஆட்களுடன் அங்கு திரண்டார்.  இதற்கிடையில், மண்டபத்துக்கு சேலம்காரர் வருகை தந்ததும், அவரை, ரகசியமாக மண்டபத்தின் உள்ளே அழைத்துச்சென்றார் தேர்தல் ஆணையர் பெயரை கொண்டவர். இதனால், கோபம் அடைந்த ராமன்-சிவன் பெயரை கொண்டவர் வெளியே நின்றுகொண்டார். அவர்,  நீண்ட நேரமாக வெளியே காத்திருப்பது குறித்து சேலம்காரரின் கவனத்திற்கு  கொண்டுசெல்லப்பட்டதாம். உடனடியாக அவரை உள்ளே அழைத்து வரும்படி சேலம்காரர் கூறினாராம்.  அவரின் பாதுகாவலர்கள், ராமன்-லிங்கத்தை சமாதானம் செய்து, உள்ளே அழைத்துச்சென்றனர். அங்கு, சேலம்காரர் முன்னிலையில்,  யார் பெரியவர் என்று பெரிய பட்டிமன்றமே நடந்ததாம். இது எல்லாம் ஈரோடு மேயர் சீட் யாருக்கு என்பதில் தான் பிரச்னையாம். மாநகராட்சி தேர்தலே அறிவிக்கல அதற்குள் மேயர் பதவி எனக்கு என்று கேட்பது பிறக்காத குழந்தைக்கு பெயர் வைப்பது போன்றது என்று ஈரோடு இலை கட்சி தொண்டர்கள் சிரித்தபடியே பேசிக் கொண்டனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தர்மபுரியில் தர்மம் தவறியதா என்ன...’’ என்று கிண்டலாக கேட்டார் பீட்டர் மாமா....
‘‘தர்மபுரி நகர் மற்றும் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னரும், புழக்கத்தில் இருந்து கொண்டு தான் உள்ளது. அதிகாரிகள் சில்லரை கடைகளை மட்டும் குறி வைத்து சோதனை செய்து, டன் கணக்கில் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அழித்து வர்றாங்க.. ஆனால் குடோன்களில் பதுக்கி வைத்து, பிளாஸ்டிக் பைகள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதிகாரிகளுக்கு தெரிந்த மொத்த விற்பனை கடையில் சோதனை செய்வதில்லை. இப்படி பாரபட்சத்துடன் சோதனை செய்வது மற்றும் பறிமுதல் செய்வதாக தர்மபுரியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத்தான் ேநர்மையான ஊழியர்கள் தர்மபுரியில் தர்மம் தவறிவிட்டது என்று வேதனையோடு பேசி வருகிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-09-2020

  26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்