SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலையுடன் கூட்டணி பங்கீடு பேச வந்த தலைவர்கள் எஸ்கேப் ஆனதை சொல்கிறார் : wiki யானந்தா

2019-12-07@ 01:48:20

‘‘உள்ளாட்சி தேர்தலை பற்றி என்ன நினைக்கிறீங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘திருப்பியும் முதல்ல இருந்தா என்று காமெடி நடிகர் பாணியில தான் கேட்க வேண்டும் போல... தேர்தல் ஆணையம் இரண்டுக்கும் மேற்பட்ட தேர்தல் அறிவிப்பாணைகளை தயார் செய்து வைத்துள்ளதாம். வழக்குகள் மூலம் தாங்கள் நினைத்த உத்தரவுகள் வராவிட்டால் பழைய அறிவிப்புகளில் சில ஜிக் ஜாக்குகளை செய்து வைத்துள்ளதாம். அதனால்தான் 9 மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று நெற்றி பொட்டில் அடித்த மாதிரி மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இப்படி கேள்வி கேட்டால் எப்படி தப்பிக்கலாம் என்பதுதான் அவர்களின் எண்ணம்... அவர்கள் நினைத்ததுபோலவே உத்தரவுகள் வந்ததால், இலை தலைமை குஷியாக இருக்கிறதாம்... 9 மாவட்டங்களில் உள்ள இலையின் முக்கிய நிர்வாகிகளை உள்ளாட்சி தேர்தல் களத்தில் இறக்க முடிவு செய்துள்ளதாம்... இதனால் கூடுதல் கவுன்சிலர்களை பெற முடியும் என்பதுதானாம். குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் ஒரு பெரும் படையே வெளி மாவட்டத்தில் இருந்து போய் இறங்கப்போகிறதாம்... இவர்கள் வாக்காளர்களை கணக்கிட்டு ‘மணி மழை பொழியப்போறாங்களா அல்லது அவர்களின் ஓட்டை இவர்கள் போடப்போகிறார்களா என்பதுதான் அந்த கட்சியின் அடிமட்ட தொண்டன் பேசிக் கொள்வது... ஆனால் தேர்தல் ஆணையமோ எதை பற்றியும் கவலைப்படாமல் திங்கள் கிழமை ஓசைப்படாமல் ஒரு அறிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாங்கனி மாவட்டத்துல எல்லா துறைகளிலும் தலைகளின் ஆட்டத்தை தாங்க முடியலையாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு தென் பகுதியில் இருந்து வந்த ஒரு டீன் புதியதாக பொறுப்பேற்றார். அவர் சில நாட்களாக அதிரடியாக மாற்றங்களை எடுத்து வருகிறார். மருத்துவமனையில் நடக்கும் ஆபரேஷனால ஒரு சிலர் இறப்பதும் நடக்கிறது. இறப்பு சம்பந்தமாக நடக்கும் மீட்டிங்ல பல்வேறு கேள்விகள்,  துறை தலைவர்களிடம் கேட்கிறார். இதனால் துறை தலைவர்கள் என்ன பதில் சொல்றதுனு தெரியாமல் தவிக்கிறாங்களாம். மேலும் டீனை பார்க்க வரும் மூத்த பேராசிரியர்களை முறையாக அமர வைத்து பேச அனுமதிப்பதும் இல்லையாம். மருத்துவர்கள் அடையாள அட்டை போடாமல் இருந்தாலும் டீன் கண்டிக்கிறாராம். அடையாள அட்டைக்கு போயி தொந்தரவு செய்றதான்னு மருத்துவர்கள் புலம்பி தள்ளுகின்றனர்.  இதனால் ஒரு சில துறை தலைவர்கள், மருத்துவர்கள் டீனுக்கு எதிராக ஒரு அணியாக உருவாகி வருகிறார்களாம். தரமான சிகிச்சை அளித்து ேநாயாளிகளை சந்தோஷமாக அனுப்பி வைப்பதை விட்டு எங்களை குடைவது நியாயமா என்று வேதனை தெரிவித்தனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அல்வா மாவட்டத்துல அல்வா வாங்கவும் கியூவா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘அல்வா மாவட்டத்துல இலை தரப்பு வக்கீல்கள் அணி சமீபகாலமாக கொதித்து போயிருக்கிறதாம். கட்சியில் உழைப்பவர்களுக்கு, வழக்குகளில் நேர்மையாக வாதாடுபவர்களுக்கு அரசு வக்கீல்கள் பதவிகளை வழங்காமல், மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு இப்பதவிகள் வழங்கப்படுவதாக புகார்கள் அதிகமாக மேலிடத்திற்கு பறக்கிறதாம். நாங்குநேரி இடைத்தேர்தலுக்காக வக்கீல் அணி ஆலோசனை கூட்டத்திலேயே கட்சிக்கு உழைத்தவர்களுக்கு உரிய பதவிகளை தாருங்கள் என முணுமுணுப்போடு சிலர் பேசினர். நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்ற பின்பும் அரசு வழக்கறிஞர்கள் பதவி இலை தரப்புக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. சமீபத்தில் நெல்லையில் புதியதாக உருவாக்கப்பட்ட கோர்ட்டுக்கான, அரசு வக்கீல் பதவி கூட மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவருக்கு வழங்கப்பட்டு விட்டதாம். காலங்காலமாக கட்சிக்கு உழைத்த எங்களுக்கு எப்போது பதவி தருவீர்கள் என வக்கீல் அணியில் ஒரு குழுவினர் மாவட்ட நிர்வாகிகளிடம் மல்லுக்கட்டி வருகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அணியில இருந்தா போதாது அரசியல்ல சூதும் பழகணும்... அது தெரியாததால இலைக்கு அரசு வழக்கறிஞர் பதவி கிடைக்காம போயிருக்கலாம்... நாகர்கோவில்ல என்ன மேட்டர்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கேட்டா நீயே சிரிப்பே, நாகர்கோவிலில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வந்த பஸ் ஸ்டாப் ஒன்றை போக்குவரத்து நெரிசல் என்று கூறி அதிகாரிகள் 100 அடி தள்ளி இடமாற்றம் செய்தனர். பின்னர் அங்கு 5 லட்சம் செலவில் நிழற்குடை ஒன்றை புதிதாக அமைத்தனர். அதில் கலெக்டர், மாநகராட்சி ஆணையர், பொறியாளர்கள் பெயர்களை மட்டும் போட்டு கல்வெட்டு அமைத்து திறந்து வைத்துள்ளனர். அதுவும் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கப்போகும் கல்வெட்டு திறப்பு விழாவை இப்போதே திறந்து வைத்துள்ளனர். இதனை பார்த்து செல்கின்ற பொதுமக்களோ இப்போது அதிகாரிகள், அரசியல்வாதிகளையே மிஞ்சிவிட்டனர் என்று கூறி செல்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘இலை தலைமை கூட்டணி கட்சிகள் கொடுத்த பட்டியலை பார்த்து ஷாக் ஆகிட்டாங்களாமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலை தலைமை திடீரென கூட்டணி கட்சிகளை அழைத்து பட்டியலை கேட்டதாம்... இதில் அவர்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளை தர வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளதாம். அவர்களுக்கு கொடுத்தால் பேரவை தேர்தலில் கட்சிக்கு பலத்த அடி ஏற்படும் என்று பெருந்தலைகள் பேசிக் கொண்டார்களாம். கூட்டணி கேட்காத தொகுதிகளில் இலை தன் சொந்த செல்வாக்கால்தான் ஜெயிக்க வேண்டிய நிலையாம்... அங்கு கூட்டணி கட்சிகளால் எந்த பலனும் இல்லையாம். இதனால இரண்டு பேருக்கும் செல்வாக்குள்ள ஏரியாவுல பங்கீடு செய்வதில் பிரச்னை இல்லை. எங்களுக்கு செல்வாக்கு இல்லாத ஏரியாவுல நீங்க போட்டியிடுங்க... வெற்றி தோல்விகளை சமமாக பார்க்கணும்... வெற்றி பெறும் தொகுதி வேண்டும். கடுமையாக தேர்தல் பணியாற்றினால் ஜெயிக்கலாம் என்கிற தொகுதி வேண்டாம் என்று சொல்லக் கூடாது என்று இரு பெருந்தலைகள் கேட்டுக் கொண்டார்களாம்... எங்கள் தலைவர்களிடம் கேட்டு சொல்கிறோம் என்று கூட்டணி பேச வந்த 2ம் கட்ட தலைவர்கள் அப்போதைக்கு அங்கிருந்து எஸ்கேப் ஆனார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-09-2020

  26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்