SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பினாயிலில் கமிஷன் பார்க்கும் அதிகாரிகளின் கதையை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

2019-12-06@ 00:10:15

‘‘தேர்தல் நடக்குமா... நடக்காதா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சினிமா பாணியில சொன்னா... நடக்கும்.. ஆனா நடக்காது என்பது மாதிரிதான் மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இருக்கு... தயிர் பச்சடியில தயிர் மட்டும் இருக்கு... விலை அதிகமாக இருப்பதால் அதுல வெங்காயம் இல்லை என்றால் எப்படியோ அதுபோல தான் தேர்தல் கமிஷன் அறிவிப்பு... ஊரகத்துக்கு முதலில் தேர்தல் நகரத்துக்கு பிறகு என்பதும் தயிர் பச்சடி கதை தான். என்னவென்று விசாரித்தால்... நகரப்பகுதிகளில் இலைக்கு செல்வாக்கு பயங்கர சரிவாம்... இந்நிலையில மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட மாநகர பகுதிகளில் எவ்வளவு செலவு செய்தாலும் இலைக்கு டாட்டா காட்ட மக்கள் தயாராக இருக்காங்க... நடந்து முடிந்த 2 சட்டசபை இடைத் தேர்தலிலும் இலை வெற்றி ெபற்றவை கிராமங்கள் அதிகம் உள்ள தொகுதியாகவே இருந்தன... கரன்சியை காட்டி வெற்றிபெற்றுவிட்டார்கள்... அது நகரத்தில் எடுபடாது என்று உளவுத்துறை அறிக்கை உறுதி செய்ததாம்.. அதுமட்டுமில்லாமல் கூட்டணி கட்சிகளை சமாளிக்க மாவட்டத்தில் எந்த கட்சி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுகிறதோ... அங்கு நகராட்சி, மாநகராட்சி தலைவர் பதவிகளை வழங்கலாம் என்பதுதான் இலையின் தலைமை முடிவு... அதை கனகச்சிதமாக நிறைவேற்றி இருக்கிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘டாய்லெட் கிளீன் செய்யும் பினாயிலிலும் கமிஷன் அடிப்பதை நிறுத்தவில்லை போல...’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘கோவை மதுக்கரை வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி பணிகளுக்கு டாய்லெட் கிளீன் செய்ய தேவையான பெனாயில் வாங்குவதில் இருந்து பைல்கள் வாங்குவது வரை எல்லாவற்றிலும் கமிஷன்... கமிஷன் என்று ஒரே பேச்சுதான். டெண்டர் கோரி, குறைவான விலைக்கு தரும் நபர்களிடமிருந்து பொருட்கள் வாங்க வேண்டும். ஆனால், இங்கு, குறைந்த விலையில் பொருட்களை வாங்கிவிட்டு, இரண்டு மடங்கு பில் போட்டு பணத்தை வாரி சுருட்டுகிறார்களாம். இந்த சுருட்டல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறதாம். குறிப்பாக மலுமிச்சம்பட்டி, அரிசிபாளையம் போன்ற ஊராட்சிகளில் சுண்ணாம்பு பவுடர், மோட்டார் பிட்டிங்ஸ் போன்ற சுகாதார பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய பொருள்கள் வாங்குவதிலும் கோடிக்கணக்கிலான அரசு பணம் அதிகாரிகளின் பாக்கெட்டிற்கு போய் இருக்கிறதாம். பினாயில் முதல் தெருவிளக்கு பிட்டிங்ஸ் வரை அத்தனை பொருட்கள் கொள்முதலிலும் 50 சதவீதம் கமிஷனாம். இது குறித்து கோவை கலெக்டர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆகியோரிடம் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. அரசியல் கட்சிகள் அமைக்கும் கூட்டணியைவிட, அதிகாரிகள் அமைக்கும் கூட்டணி வலுவாக இருப்பதால்தான் அரசியல்வாதிகளே இவர்களிடம் ஊழல் செய்து பணம் சேர்ப்பது எப்படி என்று பாடம் படிக்கலாம் என்கின்றனர் அடிமட்ட ஊழியர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கஞ்சா செடி பயிரிட்டதை கண்டுபிடித்த போலீஸ் அதிகாரியை தூக்கி அடிச்சுட்டாங்களாமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குளித்தலை அடுத்த தென்னிலை கிராம பகுதியில் உள்ள மாமரத்துப்பட்டியில் ரகசியமாக கஞ்சா சாகுபடி செய்யப்படுவதாக திருவெறும்பூர் ஏஎஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி போதை பொருள் தடுப்பு போலீஸ்சுக்கு தகவல் அளித்து சோதனை நடத்தினர். சோதனையில் 1 ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.28 லட்சமாகும். தொடர்ந்து கஞ்சா பயிரிட்ட காங்கிரஸ் பிரமுகர் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர். இதில் அன்றைய தினமே இரவு ஏஎஸ்பி பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். காரணம் சிக்கிய நபர் அரசியல் செல்வாக்கு உள்ளவராம். தமிழகத்தின் இரண்டு அதிகார மையங்களில் ஒன்றுக்கு வேண்டப்பட்டவராம். கஞ்சாவை பிடித்த அதிகாரியை கிண்டிக்காரர் மாளிகைக்கு மாற்றிட்டாங்க... மாற்றப்பட்ட ஏஎஸ்பி நேர்மையானவர் எனவும், பயிற்சி முடிக்க சிலநாட்களே உள்ள நிலையில் கஞ்சா வழக்கில் துணிவுடன் செயல்பட்டதற்கு கிடைத்த பரிசா என சகபோலீஸ் அதிகாரிகளே தலையில் அடித்து கொண்டனர். மேலும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஏஎஸ்பி, கிண்டி மாளிகைக்கு செல்ல விரும்பாமல் மனம் நொந்து போய் இருக்கிறாராம். இதற்கு அரசியல்வாதிகளின் தூண்டுதலே காரணம் என்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குமரியில ஈகோ மோதல் உச்சகட்டம் போல...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குமரியில குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வருடத்தில் மட்டும் 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக குழந்தைகள் நல அலுவலகத்துக்கும், சைல்டு லைன் அமைப்புக்கும் ஈகோ பிரச்னையாம். இதனால குழந்தைகளின் பிரச்னைகளை யாரும் கண்டுகொள்வதில்லையாம். இதனாலதான் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சமூக நல ஆர்வலர்கள் மற்றும் இரண்டு துறைகளில் உள்ள நேர்மையான ஊழியர்கள் பேசிக்கிறாங்க... இது குறித்து மாவட்ட தலைமைக்கு தகவல் சென்றும்... அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் பிசியாகிவிட்டதால் இந்த ஈகோ பஞ்சாயத்தை தள்ளிபோட்டிருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colum_ellaiii1

  எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி

 • chinaaa_scieen11

  உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை

 • marathon_dogggg1

  482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

 • 29-01-2020

  29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • coronaa_chinnnaa1

  ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்