SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊரக தேர்தலில் இலையை கவிழ்க்க மாம்பழம் தலைமை போட்டுள்ள திட்டத்தை சொல்கிறார்: wiki யானந்தா

2019-12-04@ 00:14:39

‘‘என்ன விக்கி மழைநீர் ஏரிக்கும், குட்டை, குளங்களுக்கு போகாமல் வீட்டிற்குள் நுழைந்த மர்மம் என்ன...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘உள்ளாட்சி தேர்தலில் ஜெயிப்போமோ இல்லையோ என்ற பயம்... பொதுக்குழு அமைதியாக நடக்குமா என்ற பயம்... வருமான வரித்துறையின் கரம் நீண்டு முக்கியஸ்தர்கள் பிடிபடுவார்களோ என்ற பயம்... இரண்டு இடைத்தேர்தலில் ஜெயிப்போமோ என்ற பயம்... இப்படி தினம் தினம் பயத்தில் சிக்கி தடுமாறியதால் வடகிழக்கு பருவமழையை கையாள்வதில் சிக்கல்... காரணம் முன்கூட்டியே ஏரி, குளம், குட்டை, நீர் வரத்து கால்வாய்களை தூர்வாரவில்லை. சில இடங்களில் கண்துடைப்புக்கு வாரினார்கள்... மழை வெளுக்கத் தொடங்கி உள்ள நிலையில் இப்போது குடிமராமத்து பணிகளை செய்து என்ன பயன்... இதனால் வீடுகள் நீரில் மூழ்கியது... பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் வெள்ள நீர் புகுந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ளது. ஆனால் பல நூறு கோடி ரூபாய் இதற்காக செலவு செய்து இருக்கிறோம் என்று அரசு தெரிவிக்கிறது. அந்த பல நூறு கோடி ரூபாய் மூலம் மழைநீர் வரத்து கால்வாய்கள், பாசன கால்வாய்களை சரி செய்து இருந்தால் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்பட்டு இருக்காது... ஆனால் பல நூறு கோடி ரூபாய் எங்கே போனது... அது யார் பாக்கெட்டுக்குள் போனது... டெண்டர் எடுத்தவர் ஏன் பணிகளை முடிக்கவில்லை போன்ற கேள்விக்கு பதில்தான் இல்லை... தாமிரபரணியாகட்டும், வடமாவட்டத்தில் பாயும் பாலாறு ஆகட்டும் வெள்ள நீர் எல்லாம் வீணாக கடலில் கலப்பதை இன்னும் தடுக்க முடியவில்லை... அரசு அறிவித்து பல மாதங்கள் கடந்தும் காஞ்சிபுரத்தில் தடுப்பணை கட்டவே இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம் என்றனர் சமூக ஆர்வலர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘போலீஸ்ல என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சிலை தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல், உச்ச நீதிமன்ற உத்தரவால் விடுவிக்கப்பட்டார். அந்த பதவிக்கு உடனடியாக ஐஜி அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சென்னையில் பூக்கடை துணை கமிஷனர், வடசென்னை இணை கமிஷனராக பணியாற்றியவர். இவர் வேலை செய்த பகுதியில்தான் சென்னை உயர் நீதிமன்றம் வருகிறது. இதனால் நீதிபதிகள், அரசு வக்கீல்கள், மூத்த வக்கீல்கள் அனைவருக்கும் தெரிந்தவராக உள்ளவர். நீதிமன்றம் பற்றிய அனுபவம் உள்ளவர். இதனால் இவர்தான் சிலை தடுப்புப் பிரிவுக்கு சரியான ஆள். மேலும், பொன்.மாணிக்கவேலுவை சட்ட ரீதியாக சந்திக்க இவர்தான் பொருத்தமானவர் என்று உயர் அதிகாரிகளும், அரசும் கருதுகிறதாம். இதனால்தான் இவரை தேர்ந்தெடுத்து சிலை தடுப்புப் பிரிவுக்கு போட்டுள்ளார்களாம். இனிமேல், பொன்.மாணிக்கவேல் போன்று அன்புவும் அதிரடியாக செயல்பட்டு பரபரப்பு கிளப்புவார் என்று உயர் அதிகாரிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கிராம உள்ளாட்சி தேர்தல்ல கிப்ட் நிற்குமா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஏதோ மாநகராட்சி, நகராட்சி அளவில் கிப்ட் பக்கம் சிலர் இருந்தாங்க... ஆனால் கிராம அளவில் சொல்லிக் கொள்ளும்படி கிப்ட்டுக்கு கட்சி உறுப்பினர்களை எடுத்துக் கொண்டால் அத்திபூத்தாற்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருக்காம்... இப்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் அவர் அதிர்ச்சியில் இருக்கிறாராம்... எந்த கிராமத்துக்கு போய் உறுப்பினர்களை பிடித்து தேர்தலில் நிற்க வைத்து ெஜயிப்பது என்று நினைக்கிறாராம். பஞ்சாயத்தை பொறுத்தவரை சொந்த செல்வாக்குதான் முக்கியம் என்பதால் கட்சியை உறுப்பினர்களே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்களோ என்று நினைக்கிறாராம்... இருந்தாலும் கவுரவத்துக்கு தன் பாக்கெட் மணியை கொடுத்து சிலரை நிற்க வைக்க முயற்சி செய்வதாக தகவல்... இவரே சீட் கொடுத்தாலும் வேண்டாம்டா சாமினு ஓடுறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கூட்டணியில ஒரு ஒற்றுமையை கவனிச்சீங்களா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை தலைமைக்கு எதிராக ஒன்று திரண்டு போராட கூட முடியாத நிலை. காரணம் மாங்கனிக்கு கோயம்பேடுகாரரை பிடிக்காது... இலைக்கு தாமரையின் மாநில தலைமை பிடிக்காது... இப்படி திடீரென ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவித்தும் கூட இந்த கூட்டணி தலைமைகள் ஒன்று கூடி இலைக்கு எதிராக எதுவும் செய்ய முடியாமல் இருக்காங்களாம்... இலை தலைமை கூட கேட்டதற்கு மழுப்பலாக பதிலை சொல்லி இதெல்லாம் எதிர் தரப்புக்கு வைச்ச செக் என்று சொல்கிறார்களாம்... ஆனால் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு அதிகளவு செல்வாக்கு இருக்கோ... அவங்களுக்கு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் அல்லது துணை தலைவர் பதவியாம்... இல்லாவிட்டால் கவுன்சிலர் பதவியோடு போக வேண்டியது தானாம்... அதனால இலை கூட்டணியில் உள்ளவர்கள் கட்சி சின்னத்தோடு ஒருவரையும் செல்வாக்குள்ள நபர்களை இலை கட்சி போட்டியிடும் வார்டிலும் நிறுத்தி தலைவர் பதவியை கைப்பற்ற முடிவு ெசய்து இருக்காங்க... குறிப்பாக இதில் மாம்பழ தலைவர் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி இருக்காராம்... அதே பாணியை கோயம்பேடுகாரரும் எடுக்க வேண்டும் என்று தொண்டர்களும் நிர்வாகிகளும் கேட்கிறாங்களாம்... நம்ம வலிமையை நாம் ஆளுங்கட்சிக்கு உணர்த்த வேண்டும் என்கிறார்களாம்...’’ என சிரித்தபடி சொன்னார் விக்கியானந்தா.
‘‘மஞ்சள் மாவட்டத்துல என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி பகுதியில் ராமாபுரம் கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு தனியார் பள்ளி எதிரில், தனி நபர் ஒருவருக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தை ஒட்டி அரசு புறம்போக்கு நிலம் 3 ஏக்கர் இருக்காம். இதையும், அந்த தனி நபர் சுவாகா செய்து, பயன்படுத்தி வருகிறார். இந்த விவகாரம் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. காரணம், அந்த இடத்தில் பயிர்செய்து, விளைபொருட்களை எடுத்துக்கொண்டு, மாதம்தோறும் மாமூல் கொடுத்துவிட வேண்டும் என்பது எழுதப்படாத உத்தரவு. அதனாலேயே, மேற்கண்ட ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முன்வரவில்லை...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அரசு பணத்தை எப்படி எல்லாம் சாப்பிடுகிறார்கள்... இவர்களை எல்லாம் என்ன செய்யலாம் என்பதை மக்களிடமே விட்டுவிட வேண்டும்...’’ என்றார் பீட்டர் மாமா    


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colum_ellaiii1

  எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி

 • chinaaa_scieen11

  உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை

 • marathon_dogggg1

  482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

 • 29-01-2020

  29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • coronaa_chinnnaa1

  ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்