SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 டன் செம்மரக்கட்டை மர்மத்தை பற்றி வாய் திறக்க மறுக்கும் காவல்துறையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-12-03@ 00:05:17

‘‘மின்வாரிய கட்டணத்தை இஷ்டம்போல வசூலிப்பதால, மக்கள் போராட தயாராகுற மேட்டர் தெரியுமா’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அப்படியா எங்கே’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சொல்றேன்... ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ் மங்கலம் மின்வாரியத்துல, புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு அரசு ஒரு தொகையை கட்டணமாக நிர்ணயித்துள்ளதாம்... ஆனால், இங்கு புதிய இணைப்புக்காக இரு மடங்கிற்கும் அதிகமாக தொகை வசூல் செய்து, பெரும் வருவாய் பார்த்து வருகின்றனராம் அதிகாரிகள்... கேட்ட பணம் கொடுக்கும் வரை இணைப்பு வழங்காமல் அலைய வைத்து மக்களை ரொம்பவே இவர்கள் அலைக்கழிக்கின்றனராம்... இந்த வசூல் வேட்டைக்கு ‘பழநி ஆண்டவர்’ பெயர் கொண்ட அதிகாரி உடந்தையாக இருக்கிறாராம்... இவரது தலைமையில் இருக்கிற பணியாளர்கள் ‘வசூல்’ ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வலம் வருகிறார்களாம்.
மின் கணக்கெடுப்பு பணியை முறையாகச் செய்யாமல், ‘இருக்கையில் அமர்ந்தபடி’ இஷ்டத்திற்கு ஒரு தொகையை பதிவிடுகிறார்களாம். ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பூட்டிக்கிடக்கிற வீடுகளுக்கும் கூட, பல ஆயிரம் ரூபாய் கட்டணம் விதித்து, மின் நுகர்வோர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளனராம். இதுதவிர, ஒரு சிலர் கிராமங்களில் வீடுகளுக்கு கணக்கெடுக்கப் போவோர், ‘மீட்டரில் ஓடிய கட்டணத்தை விட குறைத்துப்போடுகிறேன்’ எனக்கூறி, கிராம மக்களை ஏமாற்றி, கமிஷனாக ஒரு தொகையை வருவாயாக பார்த்து வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அதிகாரியும், அவரது சேனையும் களமிறங்கி வசூல் நடத்துவதைக் கண்டித்து, பொதுமக்கள் போராட்டத்தில் குதிக்க முடிவெடுத்திருக்கிறார்களாம்....’’ என்றார் விக்கியானந்தா.
‘‘2 டன் செம்மரக்கட்டை மாயமானது புதிராவே இருக்காமே... விளக்கமா சொல்லும்..’’ என்று ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டை கடத்தி வந்த லாரி, தர்மபுரி மாட்டுக்காரனூர் அருகே முன்னால் சென்ற லாரியில் மோதி சில நாட்களுக்கு முன் விபத்தில் சிக்கிச்சு. இந்த லாரியில வந்த 20 பேர் தப்பி ஓடினாங்க. அதுல 4 பேரை போலீசார் துரத்தி பிடிச்சாங்க. 2 பேரை மட்டும் கைது காட்டி சிறையில அடைச்சிட்டாங்க. மீதமிருந்த 2 பேரை பத்தி எதுவும் யாருக்கும் தெரியாம மறச்சிட்டாங்க. தப்பிய ஓடின 16 பேரை பற்றியும் எந்த தகவலும் இல்ல. முக்கியமா பறிமுதல் செஞ்ச 2 டன் எடைகொண்ட, 34 செம்மரக்கட்டைய வனத்துறையிடம் ஒப்படைக்கல. அத போலீசார் எங்கே வச்சிருக்காங்கனும் தெரியல. மர்மம் நீடிக்குது. ஆட்டய போட்டுட்டாங்கன்னு வேற, ஒரு பக்கம் தகவல் ஓடிட்டு இருக்கு. தப்பியோடின, 16 பேரை பிடிக்க இரண்டு தனிப்படை அமைச்சாங்க. தனிப்படை போலீசார், தப்பியோடியவர்களை பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடினாங்க. தேடுறாங்க. தேடிக்கிட்டே இருக்காங்க. தேடுதல் வேட்டை என்ன ஆனது என்பதும் மர்மமாவே இருக்கு. அதப்பத்தி கேட்டால் மூச் விடுறதில்ல. எல்லாமே மர்மமாதான் இருக்கு.
‘‘போலி பில்போட்டு மணல் கொள்ளை நடக்குதாமே..’’
‘‘வேலூர் அடுத்த மேல்மொணவூர் பகுதியில் பாலாற்று பகுதியில் பொதுமக்களின் மணல் தேவைக்கு ஏற்ப கடந்த சில 2 மாதங்களுக்கு முன்பு புதிய மணல் குவாரி தொடங்கப்பட்டது. இந்த குவாரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிக்கு மாட்டு வண்டிக்கு மணல் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் போலி பில்லை வைத்து கொண்டு தினந்தோறும் அருகே உள்ள பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசாரும் இதற்கு உடந்தையாக இருக்கிறார்களாம். இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்டத்தில் ஒரே குவாரி மட்டும் இயங்கும் நிலையில் 24 மணி நேரமும் மணல் கொள்ளை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோருகின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுச்சேரி நிலவரம் என்ன..’’
 ‘‘புதுச்சேரி மாநிலத்தில் கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையிலான அதிகார சண்டை ஓய்ந்தபாடில்லை. தினமும் அதிகாரிகள் அல்லோலப்படும் நிலையில் சமீபத்திய மழையால் முக்கிய சாலைகள் கூட குண்டும் குழியுமாகி மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி சம்பள பிரச்னை, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து அரசு சார்பு நிறுவன ஊழியர்களும் ஒவ்வொருவராக போராட்டங்களில் குதித்து வருகின்றனர்.
இந்த பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் ஆளும்தரப்பு திணறி வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவரான ரங்கசாமி நிசப்தம் காத்து வருகிறார். தனது ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக அவரது கட்சி சார்பில் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லாதது கட்சிக்காரர்களையே சலிப்படைய செய்துள்ளது.
அதுவும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் எந்தவொரு அசைவுமின்றி மாஜி முதல்வர் அமைதியாக இருப்பது கட்சிக்குள் சலசலப்பை உருவாக்க தொடங்கி உள்ளன. பிரச்னையின்போது மக்களுக்கு துணை நிற்காமல் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் அவர்களை சந்தித்தால் எப்படி கட்சியின் செல்வாக்கு உயரும் என முணுமுணுக்கும் நிர்வாகிகளில் சிலர் தங்களை காத்துக் கொள்ள மாற்றுக் கட்சியில் சேருவதற்கான நடவடிக்கையை இப்போதே தொடங்கியிருப்பதாக தகவல் கசிகிறது..’’ என்றார் விக்கியானந்தா.     

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்