SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய மாவட்ட இளம் கலெக்டர் பரிதவிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-11-26@ 01:32:19

‘‘மதுரை கிரானைட் குவாரி விவகார பின்னணியில் முக்கிய அதிகாரி அதிரடியாக சென்னைக்கு தூக்கியடிக்கப்பட்டு இருக்கிறாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘விஷயத்தை விரிவா சொல்றேன்.. திருப்பதி ஏழுமலையான் பெயரை கொண்ட அந்த அதிகாரி, மதுரை மாவட்ட கலெக்டரின் சட்ட ஆலோசகராக உதவி கலெக்டர் அந்தஸ்தில் இருந்தார். 2013ம் ஆண்டு இந்த மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு விவகாரம் பூதாகரமாகி குவாரிகளை மூடியது முதல், 6 ஆண்டுகளாக அதுதொடர்பான வழக்குகளில் சட்ட ஆலோசனை வழங்கி வந்தாராம்.

கிரானைட் முறைகேட்டில் சிக்கிய ஊழல் பெருச்சாளிகள் சட்டத்தின் ஓட்டைகளில் நுழைந்து தப்பமுடியாமல் அடைப்பதில் இவர் கில்லாடியாம். 6 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் கிரானைட் குவாரிகள், ஆலையை மீண்டும் திறக்க முட்டிமோதும் குவாரி உரிமதாரர்களின் முயற்சியும் அதற்கான ரகசிய பேரங்களும் கசிந்துள்ளன. இந்த முயற்சி பலிக்க சட்டரீதியான சிக்கல்களை தீர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறதாம்.

இந்த பின்னணியில் கிரானைட் குவாரிகள், ஆலையை மூடி திறக்க முடியாமல் சட்ட ஆலோசனை வழங்கிய அதிகாரி இங்கு பணியில் தொடர்ந்தால், மீண்டும் அவற்றை திறப்பதற்கான ஆலோசனை வழங்க சரிப்பட்டு வரமாட்டார் என்று கருதி, மதுரையில் இருந்து அவரை சென்னை கோட்டைக்கு தூக்கியடித்து விட்டார்களாம். அதுவும் கிரானைட், ஆலை, குவாரிகளை திறக்க முயற்சி என சிறப்பு செய்தி வெளியான நாளில் மேலிடத்தில் இருந்து மதுரை கலெக்டருக்கு இமெயில் மூலம் அவசரமாக உத்தரவு அனுப்பி, மறுநிமிடமே  பொறுப்பில் இருந்து விடுவித்து அனுப்பி விட்டார்களாம். நேர்மையாக பணியாற்றியதற்கு இதுதான் பரிசா, கிரானைட் குவாரி விவகாரத்தில் பழிவாங்கி விட்டார்களே, என்று மனம் நொந்து போனாராம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தமிழகத்தின் 33வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமாகி விட்டது. புதிய மாவட்டத்திற்கு முதல் கலெக்டராக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டார். புதிய மாவட்டத்திற்கு கலெக்டர் அலுவலக வளாகம் கட்டுவது, வருவாய் துறை ஊழியர்களை பிரிப்பது என புதிய மாவட்ட நிர்வாகத்தை உருவாக்கும் பணிகள் ஏராளம் இருக்கிறது. புதிய கலெக்டர் இளம் ஐஏஎஸ் அதிகாரி என்றாலும் அவருக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருக்க வேண்டிய முக்கிய பணியிடமான மாவட்ட வருவாய் அலுவலரை நியமிப்பதில் தமிழக அரசு சொதப்பி விட்டதாம்.

சென்னைக்கு அருகில் இருக்கும் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் அதிகாரியை அந்த பதவிக்கு நியமித்தனராம். அவரோ ஓய்வுபெறும் தருவாயில் இருக்கிறாராம். அது மட்டுமல்லாது உடல் சுகவீனம் காரணமாக பல்வேறு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறாராம். அவரை புதிய மாவட்டத்தின் முக்கிய பொறுப்பில் நியமித்து விட்டனராம். உத்தரவு போட்ட உடனேயே புதிய மாவட்டம் துவக்க விழா என்பதால் பொறுப்பில் வந்து சேர்ந்து விட்டாராம். இவரை வைத்துக் கொண்டு நான் எப்படி புதிய மாவட்டத்தை வளர்த்தெடுப்பேன் என்கிறாராம் அந்த மாவட்டத்தின் கலெக்டர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புதுவை நிலவரம் ஏதாவது..’’
‘‘புதுவை காவல்துறையில் 2 வருடத்திற்கும் மேலாக காவலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். இதனால் காலி பணியிடங்கள் அதிகமாகி குறைந்த எண்ணிக்கையிலான காவலர்களை கொண்டு பணிகளை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பதவி உயர்வு காரணமாக காலியான பணியிடங்களில் புதிய அதிகாரிகளும் நியமிக்கப்படாமல் உள்ளனர். முக்கிய காவல் நிலையங்களில் எஸ்ஐக்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில் அதுவும் குறைக்கப்பட்டு விட்டது.

இதனிடையே நெட்டப்பாக்கம் எஸ்ஐ விபல்குமார் தற்கொலை சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிகாரி டார்ச்சர், பணிச்சுமை விவகாரத்தால் அதிகாரி முதல் காவலர்கள் வரை அனைவரும் மனஉளைச்சலில் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் ஓய்வுபெற்ற காவலர்களுடன் டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவா 2 நாட்களுக்கு முன்பு ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பல்வேறு குறைகளை அவர்கள் எடுத்துக் கூறி நிவர்த்தி செய்ய வேண்டுமென முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் புதுச்சேரி காவல்துறை தலைமையகம் சார்பில் போலீஸ் துறையின் சிறப்பு பணி அதிகாரி சேகர் அனைத்து எஸ்பிக்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், புதுச்சேரி காவல்துறையில் பணி புரிபவர்களுக்கு எமர்ஜென்சியை தவிர்த்து மற்ற தேவைப்படும் நேரத்தில் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தால் அதற்கு ஒப்புதல் தரப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறை மேலிடத்தின் இத்தகைய அறிவிப்பு போலீசாரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், ஏற்கனவே ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆட்கள் பற்றாக்குறையால் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ள அன்றாட பணிகளை செய்து முடிப்பதிலே பல்வேறு சிக்கல் உள்ளன. காவலர்களுக்கு லீவு கொடுத்தால் காவல்நிலையத்தை மூடிவிட்டு போக வேண்டும் என புலம்புகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colum_ellaiii1

  எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி

 • chinaaa_scieen11

  உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை

 • marathon_dogggg1

  482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

 • 29-01-2020

  29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • coronaa_chinnnaa1

  ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்