SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் நடந்த கொலை வழக்கில் தேடப்படும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி: தமிழக மக்கள், மீனவர்கள் அதிர்ச்சி

2019-11-23@ 01:14:29

ராமேஸ்வரம்: இலங்கை அமைச்சரவையில், கொலை வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட தமிழகத்தில் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா, கடல்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதால் தமிழக மக்கள், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலங்கையில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையின் எட்டாவது அதிபராக நேற்று முன்தினம் அவர் பதவியேற்றதை தொடர்ந்து, பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, புதிய பிரதமராக மஹிந்தா ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கை அதிபரின் செயல் அலுவலகத்தில் மஹிந்தா தலைமையில் 16 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது. அமைச்சரவையில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஆறுமுகம் தொண்டமான், கடல்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா ஆகிய 2 தமிழர்கள் உள்ளனர். இவர்களில், டக்ளஸ் தேவானந்தா மீது சென்னையில் கொலை வழக்கு உள்ளது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) தலைவரான டக்ளஸ் தேவானந்தா, சென்னை, சூளைமேடு பகுதியில் கடந்த 1986ல் தங்கியிருந்தார். அப்போது அப்பகுதியில் தீபாவளி திருநாளையொட்டி பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆனால், டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவரது இயக்கத்தினர் சிலர், பட்டாசு வெடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பொதுமக்கள் - தேவானந்தா தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்தவேளையில், டக்ளஸ் தேவானந்தா தரப்பினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். இதுதொடர்பாக, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட சிலர் மீது சூளைமேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சென்னை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. 1993ல் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் தலைமறைவானதால், இவர்கள் அனைவரும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

இலங்கையில் ஏற்கனவே சந்திரிகா குமாரதுங்கா, மஹிந்தா ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் பல ஆண்டுகளாக அமைச்சர் பதவி வகித்த டக்ளஸ் தேவானந்தா, இம்முறையும் ராஜபக்சே அமைச்சரவையில் கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். கொலை வழக்கும் நிலுவையில் உள்ள நிலையில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா, மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்றுள்ளது தமிழர்கள், மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்களது மீன்பிடித்தொழிலுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகுமென மீனவர்கள் அச்சம் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்