SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன்வாருங்கள் முரசொலி நிலம் பஞ்சமி நிலம் என்று புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

2019-11-20@ 00:35:40

சென்னை: முரசொலி நிலம் பஞ்சமி நிலம் என்று புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு போடுவோம் என்றும், ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன்வாருங்கள் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலரும், திமுக அமைப்புச் செயலாளருமான  ஆர்.எஸ்.பாரதி எம்பி, நேற்று மாலை, சென்னை சாஸ்திரி பவனில் உள்ள ‘தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின்’ துணைத் தலைவர் முருகன் முன்பு ஆஜராகி, அரசியல் உள்நோக்கத்தோடு, பாஜக மாநில செயலாளர் டாக்டர் ஆர்.சீனிவாசன் அளித்த புகார் குறித்து தனது ஆட்சேபணையை எழுத்துப்பூர்வமாக அளித்தார். அப்போது திமுக தலைமை கழக சட்ட ஆலோசகர், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தலைமை கழக வழக்கறிஞர்கள் ஆர்.நீலகண்டன், ப.கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் செயலாளர் என்று கூறப்படும் டாக்டர் ஆர்.சீனிவாசனிடமிருந்து ஆணையம் ஒரு புகாரைப் பெற்றிருப்பதாக தோன்றுகிறது. எந்த டாக்குமென்ட் ஆதாரங்களும் அந்த புகாருடன் அளிக்கப்படவில்லை.  புகார்தாரர் அரசியல் கட்சியான பாஜகவை சேர்ந்தவர்.  பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர் அல்ல. ஆகவே இது அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்ட புகார். புகார்தாரர் பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்தால் கூட, இப்பிரச்னையில் தீர்ப்பளிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு தான் இருக்கிறது. தீர்ப்பளிக்கும் அதிகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு இல்லை-அதிலும் குறிப்பாக நில உரிமை பற்றி தீர்ப்பளிக்கும் எந்த அதிகாரமும் இல்லை” என்று நீதிமன்றங்கள் அவ்வப்போது பல்வேறு தீர்ப்புகளை அளித்துள்ளன.

இப்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள புகாரைப் பொறுத்தமட்டில் முரசொலி அலுவலகம் உள்ள நிலம், அதன் உரிமையாளர்களால் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரங்கள் மூலம் வாங்கப்பட்டு-அந்த நிலத்தின் மீது கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 83 வருடங்களுக்கான சொத்துப் பத்திரங்கள் உள்ளன. இந்த டாக்குமென்டுகளின் செல்லுபடியாகும் தன்மை குறித்து விசாரிக்கும் அதிகார வரம்பு சிவில் நீதிமன்றங்களுக்குத்தான் இருக்கிறதே தவிர- ஆணையத்திடம் இல்லை-அதுவும் “தலையிடும் உரிமை” இல்லாத ஒருவரின் புகாரின் அடிப்படையில். புகார் முறைப்படி இல்லை. ஆகவே புகார் விசாரணைக்கு ஏற்றது அல்ல. புகார் உள்நோக்கம் கொண்டது. இந்த புகார், ஆணையத்தை பயன்படுத்தி திமுக மீது சேற்றை வாரி இறைக்கவும், அவதூறு பரப்புவதற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது  தெளிவாக தெரிகிறது.  இந்த புகார் ஆதாரமற்றது எந்த அடிப்படை உண்மைகளும், சட்டரீதியான வேண்டுகோள்களும், புகாருக்கு தேவையான ஆதாரங்களும் இல்லாதது. இந்த காரணங்களின் அடிப்படையிலும் புகார் தள்ளுபடி செய்யப்படவேண்டும். பஞ்சமி நிலமாக வகைப்படுத்தப்படவும் இல்லை என்பதை அந்த நீதிமன்றத்தின்  முன்போ அல்லது அதிகாரி முன்போ- முறைப்படியும், சட்டப்படியும் புகார் ஏதேனும் கொடுக்கப்பட்டால், நிரூபிக்க தயாராக இருக்கிறார்கள் என்று சமர்ப்பிக்கப்படுகிறது. புகாரை டிஸ்மிஸ் செய்து, அந்த புகாரை அளித்தவர் மீது கூடுதல் செலவு தொகையை அபராதமாக விதிக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தொடர்ந்து அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையர் சார்பாக முரசொலி நிலம் சம்பந்தமாக சமன் அனுப்பப்பட்டு இன்று(நேற்று) ஆஜராகும்படி சொல்லியிருந்தார்கள். அதனை  ஏற்று தகுந்த ஆதாரங்களுடன் ஆணையத்தின் முன்பு ஆஜரானோம்.  ஆனால் புகார் கொடுத்த டாக்டர்  சீனிவாசன் காலஅவகாசம் வேண்டும்  என்று கேட்டிருக்கிறார். அதற்கு அடுத்து வந்த தலைமைச் செயலாளரும் எனக்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிக்கிறார். ஆக அவர்கள் வாய்தா வாங்குவது எதை காட்டுகிறது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். ஆக, இன்றே இந்த வழக்கு முடிந்துவிட்டதாக நான் கருதுகிறேன். இதில் திமுக மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. திமுக மீது யார் பழி சுமத்தினாலும் அந்தப் பழியை போக்குவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டத்துறை வலிவோடு இருக்கிறது.    எங்கள் மீதான குற்றச்சாட்டில் சீனிவாசன் மீது நாளைய தினம்(இன்று) அவதூறு வழக்கு போட போகிறோம். இந்த பிரச்னையை முதன் முதலாக கிளப்பிய டாக்டர் ராமதாஸ் மீதும் அவதூறு வழக்கு போட இருக்கிறோம். அவருடைய ஆயிரம் ஏக்கர் நிலம் யார் யார் பெயரில் இருக்கிறது என்பது வழக்கு போடும் போது தெரியும். அவதூறு வழக்கு போடும் போது இவையெல்லாம் வெளிச்சத்திற்கு வரும். என்னுடைய 42 ஆண்டு கால வழக்கறிஞர் தொழில் அனுபவத்தில் சொல்கிறேன்.  ஆணையருடைய முகத்தைப் பார்த்தாலே, எங்கள் மீது குற்றம் சாட்டியவர்கள் பொய்யாகவே புகார் தந்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் ஆதாரம் கொடுத்தால் எந்த நேரத்திலும் வரத் தயராக இருக்கிறோம் என்று ஆணையரிடம் சொல்லிவிட்டு வந்தோம். எப்போதும் வரத் தயார் எந்த இடத்திற்கும் வரத் தயார். சென்னை அல்ல டெல்லிக்கு கூப்பிட்டாலும் வரத் தயார் எனக் கூறிவிட்டு வந்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

* புகார் கொடுத்த டாக்டர்  சீனிவாசன் காலஅவகாசம் வேண்டும்  என்று கேட்டிருக்கிறார். அதற்கு அடுத்து வந்த தலைமைச் செயலாளரும் எனக்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிக்கிறார். ஆக அவர்கள் வாய்தா வாங்குவது எதை காட்டுகிறது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

* பிரதமர் வாழ்கிற வீடு பஞ்சமி நிலத்திலே இருக்கிறது என்று வழியில் போகிற யார் வேண்டுமானாலும் புகார் கொடுத்தால் நீங்கள் விசாரித்து விடுவீர்களா?

* தமிழ்நாட்டின் முதல்வர் வசிக்கிற இடம் பஞ்சமி நிலம் என்று சொன்னால் நீங்கள் விசாரிப்பீர்களா? தமிழக பாஜக தலைமை அலுவலகம் இருக்கிற கமலாலயம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்றால் அதை நீங்கள் விசாரிப்பீர்களா?

* உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், தைரியம் இருந்தால், ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன் வாருங்கள். நாங்கள் உங்களைச் சந்திப்பதற்கு தயராக இருக்கிறோம்.

* முரசாலி பஞ்சமி நிலத்தில் இருக்கிறதா? இல்லையா? என்று தேடுவதற்கு அரசாங்கத்திற்கு ஒரே ஒரு மணி நேரம் போதும். ஆனால் நீங்கள் சம்மன் அனுப்பி எத்தனை நாட்கள் ஆகிறது. தேடுகிறார்கள் தேடுகிறார்கள் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்