SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உனக்கு தெற்கு; எனக்கு வடக்கு என்று எல்லைகளை பிரித்து கொண்ட இலையின் தலைமை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

2019-11-19@ 00:53:45

‘‘பார்முலா மாறியதால இலை கட்சி நிர்வாகிகள் விரக்தியில இருக்காங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘பொதுக்குழு, செயற்குழுவில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட மாவட்ட செயலாளர்களின் தயவு தேவை என்பதால உள்ளாட்சி தேர்தலில் அவர்களையே மாவட்ட அளவில் வேட்பாளர்களை தேர்வு செய்ய சொல்லி இருக்காங்களாம்...’’ என்று இழுத்தார் விக்கியானந்தா. ‘‘அப்ப, மாவட்ட செயலாளர்கள் கரன்சியில் குளிப்பார்கள்.. தங்கள் உண்மை விசுவாசிகளுக்கு மட்டுமே சீட் கொடுப்பாங்க.. உண்மை தொண்டர்கள் வழக்கம்போல எடுபிடியாக இருந்துட்டு போகணுமா என்று எல்லா மாவட்டத்திலேயும் எதிர்ப்பு கிளம்பி இருக்குமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ம். கோவை இலை கட்சியில கோஷ்டிபூசல் இப்போதே தலை தூக்கி விட்டதாம். இலையை பொறுத்தவரை, இம்முறை, வேட்பாளர் தேர்வில், மாவட்ட செயலாளர் முடிவே இறுதியானது. மாவட்ட செயலாளர்கள் கொடுக்கும் பட்டியலை, தலைமை கழகம் அங்கீகரித்து, மீண்டும் மாவட்டத்துக்கே அனுப்பும். இந்த அறிவிப்பு மேலிடத்தில் இருந்து சமீபத்தில் வந்துள்ளது.

கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கோவை மாநகராட்சி 100 வார்டுகளில், தனது எல்லைக்கு உட்பட்ட வார்டுகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளார். கிட்டத்தட்ட தனக்கு வேண்டிய ஆதரவாளர்கள் சுமார் 45 பேரை ஒருங்கிணைத்து பட்டியல் தயாரித்து விட்டார். ஆனால், இப்பட்டியலில், அம்மன் பெயர்கொண்ட எம்எல்ஏவின் விசுவாசிகள் 10 பேர் பெயர் இடம்பெறவில்லை. இதனால், அவர், மா.செ.வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகிறார். தனது ஆதரவாளர்களை உசுப்பிவிட்டு, மா.செ.வுக்கு எதிராக தலைமைக்கு கடிதம் எழுதும்படி வற்புறுத்தி வருகிறார். அதன்படி, கடந்த ஒரு வாரமாக, தலைமைக்கு கடிதங்கள் பறக்கின்றன. இலை பிளவுபட்டபோது குமரமானவர் தேனி பக்கம் சாய்ந்துட்டார்.  அந்த 8 மாத காலம், இந்த எம்எல்ஏதான் இடைக்கால மா.செ.வாக இருந்தார். அந்த சமயத்தில் தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்து வைத்துக்கொண்டார். அந்த விசுவாசிகளுக்கு இப்போது சீட் இல்லை. அதனால், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னே குடுமிப்பிடி சண்டை துவங்கிவிட்டது... இதைவிட மாட்டேன்... அந்த அம்மா இருந்தவரை ஏழைக்கும் சீட் கிடைத்தது... இப்போது மாவட்ட செயலாளர் சொல்பவருக்கு சீட் என்றால்... கட்சியே காணாமல் போகுமே...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வடக்கு உனக்கு, தெற்கு எனக்கு என்று விவிஐபிக்கள் பிரித்துக் கொண்டது தெரியுமா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘உள்ளாட்சி தேர்தலில் தெற்கு மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கான வேட்பாளர்களை தேனிகாரரும், கொங்குமண்டலம் மற்றும் வட மாவட்டங்களில் சேலம்காரரும் வேட்பாளர்களை நியமிக்க ஒப்புக் கொண்டார்களாம்... அதன்படி இவர் ஏரியாவில் அவர் தலையிட மாட்டார்... அவர் ஏரியாவில் இவர் தலையிட மாட்டாராம்... அப்புறம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களாக இருப்பவர்கள் கண்டிப்பாக அவர்கள் இருக்கும் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகளை எப்படியும் ஆளுங்கட்சி கைப்பற்ற வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் நீங்கள் வெறும் எம்எல்ஏவாக மட்டுமே இருக்க முடியும்... புதியவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று டார்கெட் கொடுத்து இருக்காங்களாம். அப்புறம் சாம,பேத, தண்டம் எடுக்க தயங்காத நபர்களை உள்ளாட்சி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு போட்டு இருக்காங்களாம்... இதையே காரணம் காட்டி மாவட்ட செயலாளர்கள் பெரும் அளவு கரன்சி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நாகர்கோவில்ல என்ன விசேஷம்...’’

‘‘நாகர்கோவில் மாநகராட்சியாக மாறிய பின் முதல் முறையாக உள்ளாட்சி தேர்தல் நடக்குது. எனவே மேயர் பதவியை பிடிக்க இலை புள்ளிகள் தீவிரமாக களத்தில் உள்ளனர். பலர் போட்டி போட்டு விருப்ப மனு கொடுத்து இருக்காங்களாம். ஆனால் இலை கூட்டணியில் பாஜ உள்ளது. ஏற்கனவே நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது, பாஜவை சேர்ந்தவர் தான் நகராட்சி தலைவராக இருந்தார். மாநகராட்சியாக மாறி இருந்தாலும், எப்படியும் மீண்டும் பாஜதான் மேயர் பதவிக்கு போட்டியிடும் நிலை உள்ளது. அப்படி இருக்க, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஒவ்வொரு நிகழ்ச்சியில் பேசும் போது, மேயர் வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. தான் என்று கூறி வருகிறாராம். முன்னாள் எம்எல்ஏவை மட்டும் எப்படி கூற முடியும் என மாவட்ட செயலாளர் ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்துள்ளனர். இவருக்கு தான் சீட், அவருக்கு தான் சீட் என இப்போது கூறலாம். மொத்தத்தில் தாமரைக்கு தான் நாகர்கோவில் இலைக்கு கிடைக்காது என்று அடித்து சொல்கிறார்கள் டெல்லி தகவல்களை அறிந்தவர்கள் என்கின்றனர் இலை கட்சியின் முக்கிய பிரமுகர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்தல் நெருங்குவதால் அரசியல்வாதிகள் வீட்டு முன்பு தவமிருக்கும் அதிகாரிகளை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி 11 யூனியன் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பிடிஓக்கள் 28 பேர், வெவ்வேறு இடங்களுக்கு  மாற்றம் செய்யப்பட்டனராம்... ஆனால் மண்டல துணை பிடிஓக்கள், யூனியன் அலுவலகத்தில் பணியாற்றி வரும் துணை பிடிஓக்களை பணியிட மாற்றம் செய்யலையாம். இதில் பெரும்பாலானோர் விதிமுறைகளை மீறி 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்து செம வசூல் பார்க்கிறவங்களாம். சிலர் உள்ளாட்சி தேர்தல் மூலம் வருமானத்தை பெருக்கும் நோக்கிலும், பணியிட மாற்றம் செய்து விடக்கூடாது என்பதற்காகவும், மாவட்ட ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் கடந்த 3 நாட்களாக தவம் கிடக்கின்றனராம்...’’ என்றார் விக்கியானந்தா.      

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்