SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோயம்பேடு, மாங்கனிக்கு இடையே சேலத்துல நடக்கும் போட்டியை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

2019-11-17@ 01:16:42

‘‘மாங்கனி மாவட்டத்துல தேர்தல் திருவிழா களைகட்டிடுச்சு போல...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘களை மட்டும் கட்டல... கலாட்டாவும் சேர்ந்து வரப்போகுது...’’‘‘எப்டி...’’‘‘மாங்கனி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட இலை கட்சி சார்பில் விருப்பமனு பெறப்பட்டதில், கடும் போட்டியாம். புதிய நிர்வாகிகள் சமீபத்தில் நியமிக்கப்பட்டதால், ஆளாளுக்கு விருப்ப மனுக்களை கொண்டு வந்து கொடுத்தாங்களாம். ஒவ்வொரு வார்டில் இருந்தும் குறைந்தது 10 பேர், கவுன்சிலர் சீட் கேட்டிருக்காங்களாம். இப்படி எல்லோரும் விருப்ப மனு கொடுக்க காரணம், தமிழக விவிஐபிதானாம். கடந்த முறை மாங்கனி மாவட்டத்திற்கு வந்த அவர், எல்லோரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்கலாம் என ஓபனாக நிர்வாகிகள் கூட்டத்தில் சொல்லிட்டாராம். இதனால ஒவ்வொருவரும் தங்களுக்கு வாய்ப்பு இருக்குனு கருதி, பணத்தை கட்டி விருப்பமனுக்களை கொடுத்து முடிச்சிருக்காங்க.
மற்றொரு புறம், கடந்த முறை உள்ளாட்சி தேர்தலுக்கு ஏற்பாடு நடந்தபோது, இலை கட்சி வேட்பாளர்கள் 60 வார்டுக்கும் அறிவிக்கப்பட்டாங்க. அந்த வேட்பாளர்கள் எல்லாம், இந்த முறை தங்களுக்குத்தான் சீட்டுன்னு நம்பிக்கையோடு இருந்த நிலையில், தற்போது அதிகப்படியானோர் சீட் கேட்டிருப்பதால் பீதியில் இருக்காங்களாம். இருந்தாலும், முக்கிய நிர்வாகிகள் அந்த பழைய வேட்பாளர்களை சமாதானப்படுத்தி வராங்களாம்.

இதுல கலாட்டா எப்டினு சொன்னா, கூட்டணி வைத்திருப்பதால் அதே மாவட்டத்தில் மாங்கனி கட்சியும், கோயம்பேடுகாரர் கட்சியும் சேலத்துல தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்த எக்கச்சக்கமாக வார்டுகளை கேட்க முடிவு செய்து இருக்காங்களாம்... விவிஐபி மாவட்டம்னு தெரிஞ்சும் இரண்டு கட்சிகளும் மேயர் பதவியை கேட்கிறாங்களாம்... அதனால கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து முடிவதே பெரிய கலாட்டாவாக இருக்கும் என்கிறார்கள் இலை கட்சியினர். இதை தான் சாக்கு என்று நினைத்து இரண்டு பேருக்கும் மேயர் கிடையாது... நாங்களே நிற்க போறோம்னு சொல்ல திட்டம் வைத்து இருக்காராம், சேலம் விவிஐபி...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நெல்லையில் ஏதோ மாட்டு பிரச்னையாமே..’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெல்லையில் ₹2 லட்சம் மதிப்பிலான 2 மாடுகளை காணவில்லை என பெண் ஒருவர் புகார் கொடுக்க அந்த புகாரில் மாநகராட்சி ஊழியர்கள் சிலர் சிக்கியுள்ளனர் என்பதுதான் அதிர்ச்சி தகவல். அதாவது நெல்லையில் சாலைகளில் மாடுகள் திரிவதாக அடிக்கடி மாநகராட்சிக்கு புகார் வந்தது. இதை தான் அந்த மாநகராட்சி ஊழியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஒரு பெரிய தொகையை அடித்துவிட்டதாக பேச்சு ஓடுகிறது.

மாநகராட்சிக்கு வந்த புகாரையடுத்து சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோசாலைகளில் ஒப்படைக்க நெல்லை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதில் விலை உயர்ந்த 2 மாடுகளை மட்டும் மாநகராட்சி ஊழியர்கள் சிலர் கோசாலையில் அடைக்காமல் நாங்குநேரி, கோவில்பட்டி பகுதியில் விற்பனை செய்து காசாக்கி பங்கு போட்டுக் கொண்டனர். இந்த தகவல் குற்றப்பிரிவு போலீசாரின் காதுகளையும் எட்ட திருட்டு வழக்கில் மாநகராட்சி ஊழியர்கள் 4 பேரை கொத்தாக அமுக்கிப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த மாடுகளை மட்டும் தான் விற்றனரா, இதற்கு முன்பேயும் இதுபோல விற்பனை செய்துள்ளனரா என போலீசார் அவர்களிடம் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படியே வேலியே பயிரை மேய்ந்து விட்டால் என்ன செய்வது என இந்த வழக்கில் போலீசார் திக்கு முக்காடி வருகின்றனர்... ’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்னாச்சு...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டி 10 மாதங்களாகியும் பணிகளே துவங்காம இருக்கு. ஏற்கனவே 2015 மத்திய பட்ஜெட்ல அறிவிச்சு, பயங்கர இழுபறி, கோர்ட் உத்தரவுக்கு பிறகுதான் தோப்பூரை செலக்ட் பண்ணி, கடந்த ஜனவரியில் அடிக்கல் நாட்டி முடிச்சாங்க... 1,264 கோடி செலவாகும்... 4 ஆண்டில் பணிகள் முடிக்கப்படும் என பரபரப்பாக அறிவிச்சாங்க... கூடுதலாக கேட்ட இடத்தையும், தமிழக அரசு தரப்புல கொடுத்துட்டாங்களாம்... ஆனா 10 மாதமாகியும் இன்னும் எய்ம்ஸ் தொடர்பாக எந்த வேலையும் துவங்கலை... மத்திய அரசு ஒரு பைசாவையும் ஒதுக்கல. நிதி பிரச்னையை உலக வங்கி பக்கம் தள்ளி விட்டிருச்சாம்... உலக வங்கி குழு பார்வையிட்டு 5 மாதமாகியும், பணிகள் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்குது... அந்த குழு கடனுக்கு விதிக்கும் நிபந்தனை கடுமையா இருக்குதுனு சொல்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கார் மூலம் 2 லட்சம் வசூலித்த அதிகாரி யாராக இருப்பாங்க.. அதுல எக்ஸ்ட்ரா பணத்தை ஆட்டையை போட்டவர் குறித்து சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘வேலூரில்  சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து செம்மரம் வெட்டி எடுத்து வர கடத்தல் ஆசாமி ஒருவர் இனோவா கார் ஒன்றை பதிவு செய்யாமல் தனது கிராமத்துக்கு எடுத்து வந்து வைத்திருந்தாராம். இந்த கார் குறித்து அப்பகுதி மூன்று ஸ்டார் அதிகாரிக்கு ஜெயமானவர் ரகசிய தகவல் கொடுத்து விட்டாராம். இதையடுத்து காரை கைப்பற்றி ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தாராம் காக்கி அதிகாரி. இந்த தகவல் எப்படி காக்கிக்கு தெரிந்தது என்பது தெரியாமல் அதிர்ச்சியடைந்த காருக்கு சொந்தமானவர், தகவல் கொடுத்த ஜெயமானவரிடமே போய் தஞ்சமடைந்தாராம். அவர் மூலம் ஸ்டேஷனிலேயே பஞ்சாயத்து நடந்து ₹2 லட்சம் காருக்கு உரியவரிடம் இருந்து கறக்கப்பட்டு, அதில் 50 ஆயிரத்தை ஜெயமானவர் காக்கியிடம் இருந்து பெற்றுக் கொண்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

 • monkey_thaayklannn1

  குரங்குகளுக்கு உணவு வழங்கும் திருவிழா : தாய்லாந்தில் வினோதம்!!

 • eelephanttt11

  35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை வாழ்ந்த உலகின் தனிமையான காவன் யானைக்கு புதிய வாழ்க்கை : துதிக்கையை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது

 • muskes_ambani11

  27 தளங்கள், 3 ஹெலிகாப்டர் இறங்கு தளம், 168 கார் பார்க்கிங், 9 விரைவு லிப்டுகள்,600 ஊழியர்கள்... உலகின் 2வது பிரமாண்டம் மிகுந்த முகேஷ் அம்பானியின் வீடு!!

 • delhi_farmnmmmeee

  திறந்தவெளியில் சமைத்து, கடும் குளிர் சாலையில் உறங்கியபடி, 7ம் நாளாக தொடர் போராட்டம் :டெல்லியில் மிரளவைக்கும் வைக்கும் விவசாயிகளின் கிளர்ச்சி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்