SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனு கொடுக்க வருபவர்களிடம் 10 தட்டு மணல், ஒரு வண்டி ஜல்லி கேட்கும் நகராட்சி அதிகாரியை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

2019-11-16@ 00:25:31

‘‘உள்ளாட்சி ேதர்தல் நிலவரம் எப்படி இருக்கு..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தேர்தலை விடு... அதுக்குள்ளே உள்ளாட்சி நிர்வாகங்கள்ல சுருட்டல் வேலைகள் சூடுபிடிச்சுருச்சு... சிவகங்கை நகராட்சியில் பணம் கொடுக்காமல் நியாயமான வேலையைக் கூட செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டிருக்கு... நகராட்சியில எந்த  வளர்ச்சித்திட்டங்களுமே செயல்படுத்தப்படாமல், பல மாதங்களாக முடங்கி கிடக்கிறதா மக்கள் செம டென்ஷனில் இருக்கிறார்கள். சாலை, தெருவிளக்கு, குடிநீர் என போதிய எந்த அடிப்படை வசதிகளுமே நகராட்சியில் இல்லாதது, மக்களை கொதிப்பிற்கு ஆளாக்கியுள்ளது. எது கேட்டாலும் நகராட்சியில் நிதியில்லை என அதிகாரிகள், ஊழியர்களிடமிருந்து பதில் வருகிறது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஆங்.. அப்புறம்...’’ ‘‘யாராவது மனுக்களோடு சென்றால், ‘தெருவிளக்கு எரியலையா... தேவையான பொருட்களை எல்லாமே நீங்களே பணம் வசூலித்து வாங்கிட்டு வந்திடுங்க... சாலை மோசமா? பத்து தட்டு மணலு, ஒரு வண்டி ஜல்லி வாங்கிட்டு வாங்க... வேணும்னா ஆட்களை வச்சு வேலை பார்க்க சொல்கிறோம்’ என நகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்களாம்.. அது மட்டுமல்ல... நகராட்சியில் வசிப்பவர்களிடம் ஏதாவது அனுமதிக்கான காரணத்தைக் கூறி, ‘கலெக்‌ஷன்’ மட்டும் கறாராக நடக்கிறதாம்... வரி விதிப்பு, பிளான் அப்ரூவல், இடம், வீடு ரசீது பெயர் மாற்றங்கள் என எல்லாத்துக்கும் பல மடங்கு தொகை நிர்ணயித்து, ‘வசூல் வேட்டையில்’ அதிகாரிகள் அதிரடியாக களமிறங்குகிறார்களாம்... நகராட்சியில் பணியிலிருக்கும் ‘உயரதிகாரி’ விரைவில் பணி ஓய்வு பெற இருக்கிறாராம்... அதற்குள் முடிந்த அளவு ‘வசூல்’ நடத்தி ‘வருவாய்’ பார்ப்பதில் கூடுதல் அக்கறையுடன் செயல்படுவதும், நகராட்சி மக்களை ரொம்பவே அவதிக்கு ஆளாக்கி வருகிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எம்எல்ஏவின் கோபத்தால் குறைதீர்ப்பு முகாமே ரத்தானதாமே..’’‘‘கோவை ஆனைகட்டி பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு  சில தினங்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகள், தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்த சென்றனர். தங்கள் பகுதி பிரச்னை தொடர்பாக ஏதேனும் குறை இருந்தால், புகார் மனுவாக எழுதிக்கொடுங்கள் என ஊர் மக்களிடம் கூறினர். இதைக்கேட்டதும் ஆளும்கட்சி கரைவேட்டிகள் சிலர் கொதித்து விட்டனர். ‘எங்கள் தொகுதி எம்எல்ஏ அனுமதி கேட்காமல் எப்படி குறைதீர்ப்பு முகாம் நடத்தலாம்'''' என எகிற, அதிகாரிகள் பதில்சொல்ல முடியாமல் திணறினர். ‘மக்கள் குறைகளை தீர்க்க யாரிடமும் அனுமதி வாங்கவேண்டியது இல்லையே..’ என ஒரு அதிகாரி கூற, எம்எல்ஏவின் விசுவாசி ஒருவர், டெலிபோனில் எம்எல்ஏவிடம் விஷயத்தை கூறிவிட்டார். அவர், மறுமுனையில் வந்துவிட்டார். ெடலிபோனில், அந்த அதிகாரியை வறுத்து எடுத்துவிட்டார். கடைசியில வருவாய்த்துறை அதிகாரிகள், சிறப்பு முகாமை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டனர்.  தனது பெயருக்கு பின்னால் குட்டி என பெயர் கொண்ட இதே எம்எல்ஏ, கோவை மாநகராட்சி மேயராக செ.ம.வேலுசாமி இருந்தபோது, அவரிடமும் முட்டிக்கொண்டார். அந்த சமயத்தில், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த முனுசாமி இத்தொகுதிக்குள் வர, ‘என்னை கேட்காமல் எப்படி உள்ளே வந்தீர்கள்’ என அமைச்சரையே இந்த எம்எல்ஏ துரத்தியடித்துவிட்டார். இப்படியாக, எம்எல்ஏவின் தர்பார் தொடந்து கொண்டிருக்கிறது.

‘டாக்டர்களின் அதிருப்தி இன்னும் தீரவில்லையாமே..’’ ‘‘தமிழ்நாடு அரசு டாக்டர்களுக்கு தகுதிக்கு ஏற்ப காலம் சார்ந்த ஊதிய உயர்வு மற்றும் படிகள் வழங்கிட வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியிடங்களை குறைக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். 7 நாட்களுக்கு பின், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அளித்த உறுதிமொழியை ஏற்று, போராட்டத்தை கைவிட்டனர். கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் தீவிரமாக போராட்டம் நடந்தது. போராட்டம் கைவிடப்பட்ட மறுநாளே, டாக்டர் முரளிதரன் என்பவரை, பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.  இந்த இடமாற்றம் ஒட்டுமொத்த டாக்டர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. உரிமைக்காக போராடியதற்காக டாக்டர் ஒருவரை இடமாற்றம் செய்வதா என கேள்வி எழுப்பி உள்ள டாக்டர்கள், அடுத்த கட்டமாக இதை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். மாநில அளவில் இதை டாக்டர்கள் சங்கங்கள் கண்டுகொள்ளாமல் குமரி மாவட்டத்தை ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்ற வேதனையும் குமரி டாக்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே டாக்டர் முரளிதரனுக்கு பதில், இதயவியல் துறைக்கு புதிய டாக்டர் ஒருவரையும் அவசரஅவசரமாக நியமித்து, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.’ என்றார் விக்கியானந்தா.

‘‘அணையை தூர்வார ஒதுக்கிய நிதியை அதிமுகவினரே ஒதுக்கிட்டாங்களோன்னு, மக்கள் புலம்புறாங்களாமே..’’ ‘‘திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகர் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக பரப்பலாறு அணை இருக்கு... இந்த அணையை பல ஆண்டுகளாக தூர்வாராததால, வண்டல் மண் சுமார் 25 அடி வரையிலும் தேங்கிக் கிடக்கிறதாம்... ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பரப்பலாறு அணையை தூர்வாருவதற்காக சட்டமன்றத்தில், 110 விதியின் கீழ் ₹20 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாம்.... ஒதுக்கப்பட்டிருந்த இந்த நிதியிலிருந்து அணையை தூர்வாரி இருந்தால், ஒட்டன்சத்திரம் பகுதி மக்களுக்கு தற்போது பெய்த மழையால் நீரை தேக்கி வைத்திருக்க முடியும்... ஆனால், அதிமுக கண்துடைப்பாக பகட்டான அறிவிப்பாக இத்திட்டத்தையும் அறிவித்து, மக்களிடம் ஆர்வத்தை மட்டுமே கிளப்பி விட்டு கண்டுகொள்ளாமல் இருந்து விட்டதாம்... அப்போது ஒதுக்கப்பட்ட நிதி எங்கே, ஆளுங்கட்சியினரே சுட்டுட்டாங்களா என்ற எதுவுமே தெரியாமல் பொதுமக்கள் புலம்பித் தவித்து வருகின்றனராம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

 • monkey_thaayklannn1

  குரங்குகளுக்கு உணவு வழங்கும் திருவிழா : தாய்லாந்தில் வினோதம்!!

 • eelephanttt11

  35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை வாழ்ந்த உலகின் தனிமையான காவன் யானைக்கு புதிய வாழ்க்கை : துதிக்கையை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது

 • muskes_ambani11

  27 தளங்கள், 3 ஹெலிகாப்டர் இறங்கு தளம், 168 கார் பார்க்கிங், 9 விரைவு லிப்டுகள்,600 ஊழியர்கள்... உலகின் 2வது பிரமாண்டம் மிகுந்த முகேஷ் அம்பானியின் வீடு!!

 • delhi_farmnmmmeee

  திறந்தவெளியில் சமைத்து, கடும் குளிர் சாலையில் உறங்கியபடி, 7ம் நாளாக தொடர் போராட்டம் :டெல்லியில் மிரளவைக்கும் வைக்கும் விவசாயிகளின் கிளர்ச்சி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்