15 ஆண்டுக்கு மேலாக இயங்கும் வாகனங்களை உடைக்க முடிவு மத்திய அரசின் புதிய திட்டத்தால் 2 லட்சம் லாரி அதிபர்கள் கலக்கம்
2019-11-14@ 00:15:33

* சிறப்பு செய்தி
பழைய வாகனங்களை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு புதிய கொள்கை முடிவை வெளியிட உள்ளது. இதனால், தமிழகத்தில் 2 லட்சம் லாரி உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல், சென்னை உள்ளிட்ட இதர நகரங்களில் காற்று மாசு ஏற்படுகிறதா என மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். காற்று மாசுவை குறைக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்கள் 2 கோடிக்கும் அதிக அளவில் இயங்குகின்றன. இவை தற்போது உள்ள வாகனங்களை விட, 25 மடங்கு அதிக அளவு புகையை வெளியிடுகின்றன. வாகனங்களை நல்ல முறையில் பராமரித்து வந்தாலும், அவை வெளிப்படுத்தும் புகை, சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே 2005க்கு முன்பு வாங்கிய வாகனங்களை ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பழைய வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்களை வாங்க வைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். பழைய வாகனங்களை ஒப்படைப்போருக்கு புதிய வாகனம் வாங்குவதில் சிறப்பு சலுகைகளை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான புதிய கொள்கை முடிவு ஒன்றை மத்திய அரசு தயாரித்து, 15ம் தேதி (நாளை) வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதில் பழைய வாகனங்களை உடைத்து, அதிலிருந்து கிடைக்கும் மூலப்பொருட்களை பயன்படுத்தி, புதிய வாகனங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பல பகுதிகளில் ஸ்கிராப்பிங் மையங்கள் திறக்கப்படவுள்ளது. பழைய வாகனங்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படமாட்டாது.
பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு, கலால் வரியில் 50 சதவீதம் சலுகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மறு சுழற்சி முறைவசதி கொண்ட 5 ஸ்கிராப்பிங் மையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், நாடு முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் 2 கோடி வாகனங்களில் 25 லட்சத்துக்கு மேற்பட்டவை லாரிகள்தான். தமிழகத்தில் மட்டும் 2லட்சத்துக்கும் மேற்பட்ட பழைய லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களை ஒழிக்கும் புதிய கொள்கை முடிவை அரசு அறிவித்தால், ஒரு லாரி மட்டும் வைத்துள்ள உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அவர்களே டிரைவர்களாகவும் உள்ளனர். அந்த லாரியை கொடுத்து ₹30 லட்சமும் கொடுத்து புதிய லாரி வாங்கும் நிலையில் தாங்கள் இல்லை என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் இந்த புதிய கொள்கை முடிவால் லாரி உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் கூறுகையில், ‘‘காற்று மாசு அடைவதை தவிர்க்கும் வகையில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை உடைக்கும் (ஸ்கிராப்பிங்) முயற்சியில் மத்திய அரசு புதிய கொள்கை முடிவை 15ம் தேதி (நாளை) வெளியிடவுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள லாரிகளை 40 ஆயிரம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். பின்னர் அந்த லாரியை 6 மாதத்திற்கு ஒரு முறை தகுதிச்சான்று (எப்.சி) பெற வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்களில் தமிழகத்தில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட லாரிகள் இயங்கி வருகின்றன. இந்த லாரியை வைத்துள்ளவர்கள், டிரைவர்களாகவும், உரிமையாளர்களாகவும் உள்ளனர். இந்த லாரியின் மதிப்பு 5 லட்சமாக இருந்தால், அந்த லாரியை உடைக்க கொடுத்து விட்டு, ₹30 லட்சம் கொடுத்து புதிய லாரியை வாங்க வேண்டிய நிலை உள்ளது. பெரிய நிறுவனங்கள் வேண்டுமானால் இந்த திட்டத்தில் பலன் அடையும். ஆனால், ஒரு லாரியை வைத்து குடும்பம் நடத்தும் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். அவர்களுக்கு எந்த மாதிரியான சலுகையை மத்திய அரசு வழங்கவுள்ளது என லாரி உரிமையாளர்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ளனர்,’’ என்றார்.
மேலும் செய்திகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை தைத் தேரோட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டரில் ஊர்வலமாக வந்த மணமக்கள்
அவன் இவன் பட வழக்கு: அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜர்
அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா: திருப்பூர் மருத்துவமனையில் அனுமதி
திருவாரூர் நகரில் தெருவிளக்குகள் சரிவர எரியாததால் மக்கள் தவிப்பு-வழிப்பறி சம்பவங்களால் அச்சம், பீதி
தமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி..போலீசார்- விவசாயிகள் இடையே மோதல்,, போலீசார் தடியடி, வழக்குப்பதிவு!!
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!