SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொளத்தூர், பாடி, மயிலாப்பூரில் பயங்கரம்: அதிமுக பிரமுகர் உள்பட3 பேர் வெட்டி படுகொலை: ஒரே நாளில் நடந்த சம்பவங்களால் பரபரப்பு: கொலை நகரமாக மாறும் சென்னை

2019-10-29@ 01:01:29

சென்னை: கொளத்தூர், பாடி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். சென்னை வில்லிவாக்கம், ராஜமங்கலம் 7வது தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (58),  ஐசிஎப் எலக்ட்ரீஷியன். அங்குள்ள அண்ணா தொழிற்சங்க பொருளாளராகவும், ஐசிஎப் கூட்டுறவு சங்க இயக்குனராகவும் இருந்தார். இவருக்கு மனைவி சசிகலா, தினேஷ்குமார், நந்தகுமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு நண்பருடன் கொளத்தூர் ஜிகேஎம் காலனி 31வது தெரு வழியாக பைக்கில் வீட்டுக்கு சென்றபோது அங்கே வந்த மர்மமனிதர்கள் 3 பேர், ஜானகிராமன் பைக் மீது மோதினர். அவர் தடுமாறி கீழே விழுந்ததும் ஜானகிராமனை சரமாரியாக  வெட்டிவிட்டு கும்பல் தப்பிச் சென்றது. ஜானகிராமனுடன் வந்த நண்பர் லேசான காயங்களுடன் ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜானகிராமனை மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பெரவள்ளூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனையில் ஜானகிராமன் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த புளியந்தோப்பு சரக துணை ஆணையர் சாய்சரண் தேஜஸ்வி மற்றும் உதவி ஆணையர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட ஜானகிராமன், வில்லிவாக்கத்தில் உள்ள இளங்காளியம்மன் கோயிலில் செயலாளராக பணியாற்றினார். கோயிலில் 3 ஊழியர்கள் சரிவர வேலை செய்யவில்லை என்று கூறி அவர்களை ஜானகிராமன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள், ஜானகிராமனை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாப்பூரில் 2வது கொலை: மயிலாப்பூர் மாயாண்டி காலனியில் வசித்தவர் கார்த்திக் (24). இவர் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையையொட்டி தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் கலங்கரை விளக்கம் அருகிலுள்ள நொச்சி நகருக்கு சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பூபாலன், கார்த்திக்கிடம் தகராறு செய்துள்ளார். பின்னர், அவர்கள் கார்த்திக்கின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டுள்ளனர். அக்கம் பக்கத்தினர் எதுவும் பிரச்னை வேண்டாம் என கார்த்திக்கை மறுநாள் வந்து செல்போனை வாங்கிக்கொள்ளச் சொல்லி அனுப்பியுள்ளனர்.

இதனால் தனது செல்போனை வாங்குவதற்காக நொச்சி நகருக்கு நேற்று காலையில் சென்ற கார்த்திக், பூபாலனைச் சந்தித்து செல்போனை தரும்படி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், பூபாலன் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திகை சரமாரியாகக் குத்தியுள்ளார். ரத்தவெள்ளத்தில் கார்த்திக் கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கார்த்திகை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தக் கொலை குறித்து, மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபாலனைத் தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை:சென்னை ஜெ. ஜெ.நகர் பாடி புதுநகர் 13வது தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி அழகுமுருகன் (27). இவர், 2014ம் ஆண்டில் சிவலிங்கம் என்பவரை கொலை செய்த வழக்கு ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நேற்று பகல் 12:30 மணி அளவில் அழகுமுருகன் மற்றும் இவருடைய நண்பர் இருவரும் பாடி புதுநகர் 11வது தெரு வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்துகொண்டு அழகுமுருகனை வழி மடக்கி சரமாரியாக வெட்டியது. இவருடைய நண்பரையும் சரமாரியாக வெட்டியபோது, அவர் தப்பி ஓடிவிட்டார். வெட்டு வாங்கிய அழகுமுருகன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

அப்போதும் விடாத அந்த கும்பல் அழகுமுருகனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து இறந்தார். பட்டப்பகலில் முகமூடி அணிந்துகொண்டு ரவுடியை வெட்டியபோது இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து ஜெஜெ நகர் காவல் நிலைய போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணா நகர் துணை ஆணையர் முத்துசாமி, உதவி கமிஷனர் சிவகுமார், விசாரணை மேற்கொண்டு சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என விசாரணை நடத்தினர். மேலும், ரத்த வெள்ளத்தில் இருந்த அழகுமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலை குறித்து இன்ஸ்பெக்டர் பெருந்துறைமுருகன் மற்றும் இன்ஸ்பெக்டர் சத்தியலிங்கம் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், பட்டப்பகலில் பட்டாக்கத்தியுடன் ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார். சென்னையில் நேற்று ஒரே நாளில் 3 பேர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


2 கொலையில் துப்பு இல்லை

வேளச்சேரியில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் டாஸ்மாக் பாரில் வைத்து, மது அருந்திக் கொண்டிருந்த ரவுடி ஸ்டீபன் உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகளை பள்ளிக்கரணை போலீசார் கைது செய்யவில்லை. இந்த பள்ளிக்கரணை எல்லைக்குள்தான் பெண் இன்ஜினியர் சுப, அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்து இறந்தார். அதில் அதிமுக பிரமுகர் மீது சட்டம் ஒழுங்கு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேனர் வைத்தது குறித்து வழக்குப்பதிவு செய்யவில்லை.

தற்போது கொலையிலும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. தொடர்ந்து பள்ளிக்கரணையில் குற்றங்கள் அதிகரித்து வந்தாலும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. பள்ளிக்கரனை பகுதியில்தான் பெரிய அளவில் நில அபகரிப்பு, போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை கையப்படுத்துதல் போன்ற வற்றில் ரவுடிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு போலீஸ் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். இதனால்தான் குற்றவாளிகளை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. குற்றங்களும் அதிகரிக்கின்றன என்கின்றனர் பொதுமக்கள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

 • ast23

  ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்