SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

100 வெட்டாததால் டிரைவிங் லைசென்ஸ் நிறுத்தி வைத்துள்ள அமைச்சரின் பினாமி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-10-15@ 02:50:37

‘‘டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம் கிடைப்பதில் செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ம். செயற்கை தட்டுப்பாடு தான். வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி புக் ஆகியவற்றை விநியோகம் செய்யும் பணியை தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது. சமீபகாலமாக  புதிதாக ஆர்.சி புக், டிரைவிங் லைசென்ஸ் போன்றவைகளுக்கு  விண்ணப்பிக்கின்றவர்களுக்கு புகைப்படம் எடுத்து சான்றிதழ் தயாரித்தல் தொடர்பான பணிகள் நிறைவுபெற்றாலும் ஆவணங்கள் வழங்கப்படுவது இல்லை. காகிதம் தட்டுப்பாடு,  கார்டு தட்டுப்பாடு என்று ஏதாவது காரணத்தை கூறுகின்றனர். ஆனால் வட்டார போக்குவரத்து அலுவலக தரப்பில் ஒவ்வொரு ஆர்.சி புக், டிரைவிங் லைசென்சு ஆகியவற்றுக்கு தனியாக ₹100 வீதம் கப்பம் கட்ட வேண்டும் என்று கேட்டு  டெண்டர் எடுத்துள்ள அமைச்சரின் பினாமி சொல்கிறாராம். அப்போதுதான் எல்லாம் கிடைக்கும் என்று செக் வைத்துள்ளாராம். ஆனால் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் அதிர்ச்சியில் இருக்காங்க...’’ என்றார்  விக்கியானந்தா.
‘‘தமிழகத்தில் இப்போது ஆய்வு என்ற பெயரை கலெக்‌ஷன் என்று பல துறைகளின் அதிகாரிகள் மாற்றிவிட்டார்கள் போல இருக்கே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இப்போது சம்பாதிக்காவிட்டால் இனி எப்போதும் சம்பாதிக்க முடியாது என்ற மனநிலைக்கு பெரும்பாலான அதிகாரிகள் மாறிட்டாங்க... அதன் எதிரொலிதான் அதிகாரிகளின் கலெக்‌ஷன் வேட்டை. அதாவது மாங்கனி மாவட்ட சத்துணவு பிரிவு  உயரதிகாரி, தினமும் ஒரு பகுதிக்கு ஆய்வு என்ற பெயரில் சென்று கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகிறாராம். மாவட்டத்தில் உள்ள சுமார் 1900 பள்ளி சத்துணவு மையங்களையும் தனது கன்ட்ரோலில் வைத்திருக்கும் அந்த அதிகாரி, ஒவ்வொரு  பள்ளிக்கும் சென்று சத்துணவு அமைப்பாளரிடம் தனது டிரைவரின் மூலம் 2ஆயிரம் வீதம் வசூலித்துக் கொண்டு அலுவலகம் திரும்பி வருகிறாராம். கையில் பணம் இல்லை எனக்கூறும் அமைப்பாளர்களை மாநகரை ஒட்டிச் செல்லும் சென்னை  பை-பாஸ் சாலைக்கு மாலை நேரத்தில் வரவழைத்து வசூல் செய்கிறாராம். தினமும் வீட்டுக்கு செல்லும்போது, கையில் 10ஆயிரம் இல்லாமல் போவதில்லை என்ற தகவலும் பரவுகிறது. இதுதொடர்பாக சத்துணவு அமைப்பாளர்கள் எல்லாம்  ஒன்று சேர்ந்து, சென்னையில் இருக்கும் செயலர் வரைக்கும் புகாராக கொடுத்தும், அந்த அதிகாரியை அசைக்க முடியவில்லையாம். இதனால் தற்போது, விஜிலென்ஸ் பக்கம் தகவலை கொடுத்துட்டாங்களாம். விரைவில் அந்த அதிகாரி,  விஜிலென்ஸ் பிடியில் சிக்குவார் என்ற தகவலும் ஊழியர்கள் தரப்பில் பலமாக அடிபடுகிறது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குழந்தைகள் சாப்பாட்டில் கமிஷன் அடிப்பதெல்லாம் ஒரு பிழைப்பா... சரி தூங்கா நகரம் போலீசை உண்மையிலேயே தூங்க விடுவதில்லை போலிருக்கே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ம்.. ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கிற முதுகுளத்தூருல சத்தமின்றி ஒரு சமாச்சாரம் அரங்கேறி வருகிறதாம். நெல்லை உள்ளிட்ட பிற மாவட்டங்கள், கேரளா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து கள்ளநோட்டுக் கும்பல் சமீபகாலமாக  முதுகுளத்தூரை மையமாக கொண்டு இயங்கி வருகிறதாம். ரெகுலராக காரில் வரும் இக்கும்பலை, வேறொரு இடத்திலிருந்து வரும் மற்றைய ஏஜென்ட் கும்பல் சந்திக்கிறதாம். இவர்களுக்குள் பெரிய அளவில் கள்ளநோட்டுகள்  பரிமாறப்பட்டதும், இருதரப்பும் கிளம்பிப் போகிறதாம். உள்ளூரில் ஆளுங்கட்சியில் அதிகார பலமிக்க சிலரும், இந்த ‘நோட்டு மாற்றுவதற்கு’ உதவி வருவதாகவும், இதனை போலீசும், அதிகாரிகளும் கண்டுகொள்ளாமலே இருந்து விடுவதாகவும்  பேசிக்கிறாங்கப்பா. லட்சத்திற்கு இவ்வளவு என கமிஷன் வருவாயில் பலருக்கும் பங்கு போவதால், இந்த நோட்டுக் கும்பல் சர்வ தைரியத்துடனேயே தொழில் நடத்துவது தொடர்கிறதாம்.’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சூட்கேஸ் தூக்கிய அதிகாரிகள் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் மாவட்டத்தை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என்று 3 ஆக பிரித்து அரசு அறிவித்தது. வேலூருக்கு கலெக்டர் அலுவலகம் இருக்கும் நிலையில் ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் அனைத்து அலுவலகங்களையும் தனியாக  அமைக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கலெக்டர் அலுவலகங்கள் அமைக்க இடம் தேர்வு செய்வது தொடர்பாக பொதுமக்கள் ஆலோசனைகளுடன், கோரிக்கை மனுக்களை அளித்து  வருகின்றனர். வேலூரை ஒட்டியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் எங்களை வேலூரில் இணைத்து விடுங்கள் என்றும் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் கலெக்டர் அலுவலகத்துக்கு இடம்  தேர்வு செய்யப்படுவதில் பொதுமக்களை விட அதிகாரிகள் மத்தியில்தான் அதிகளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாம். மேலும் கலெக்டர் அலுவலகங்களுக்கு எந்த இடம் தேர்வு செய்யப்படுகிறது என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கிறார்களாம்.
கலெக்டர் அலுவலக கட்டிடங்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, அந்த இடத்தை சுற்றியுள்ள நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி குவித்துவிட வேண்டும் என்பதே அதிகாரிகளின் இந்த எதிர்பார்ப்புக்கு  காரணம். இதற்காக, கலெக்டர் அலுவலகங்கள் அமையும் இடங்கள் குறித்து அறிந்து கொள்வதில் அதிகாரிகள் தூக்கத்தை தொலைத்துவிட்டார்களாம்.
மேலும் குறிப்பிட்ட இடங்களில் கலெக்டர் அலுவலக கட்டிடங்கள் அமையலாம் என்று தகவல் பரவியதும், அதைச்சுற்றியுள்ள இடங்களை வாங்க பேரம் பேசவும் சிலர் சூட்கேஸ்களுடன் கிளம்பிவிடுகிறார்களாம். வேலூர் மாவட்டம் 3 ஆக  பிரித்தது மக்களுக்கு சாதகமா, இல்லையா? என்பது தெரிய வில்லை. சரளமாக பணம் புரளும் துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு 100 சதவீதம் சாதகம் என்று அதிகாரிகள் வட்டாரத்திலேயே பரபரப்பாக பேசப்படுகிறது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோட்டை விவகாரம் ஏதும் உண்டா..’’
 ‘‘தமிழகத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ள அரசுத்துறை பெண் செயலாளர் மீது, மத்திய பெண் அமைச்சர் கடுமையான அதிருப்தியில் உள்ளாராம். இதனால் அவரை மாற்றுங்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளாராம்.  முதல்வரும் இது குறித்து உளவுத்துறை மூலம் விசாரித்தாராம். பின்னர் மாற்றும் முடிவுக்கு வந்தாராம். இதனால் விரைவில் அந்த பெண் செயலாளர் மீது நடவடிக்கை பாயும் என்கின்றனர் அதிகாரிகள்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்