SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காடுகளில் மரங்கள் வெட்டி கடத்தல் விவகாரம் குமரி வனத்துறை அதிகாரிகள் உடந்தையா?: திடுக்கிடும் தகவல்கள்

2019-10-05@ 21:08:37

குலசேகரம்: குமரி மாவட்ட வன பகுதிகளில் உள்ள காடுகளில் மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவத்தில், வனத்துறை அதிகாரிகளிடம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.குமரி மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு நவம்பரில் வீசிய ஓகி புயலால், இங்குள்ள காடுகளில் இருந்த லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாமல் இருந்ததால், அடர்ந்த காடுகளுக்குள் விழுந்த மரங்கள் அப்படியே கிடந்தன. குறிப்பாக குலசேகரம் அருகே உள்ள பெருஞ்சாணி, செல்லந்திருத்தி, காயல்கரை பகுதிகளில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில், ஓகியின் போது விழுந்த மரங்கள் நீண்ட நாட்களாக அப்படியே கிடந்தன. வனத்துறை இதை கண்டு கொள்ளாததால், கடத்தல் கும்பலின் பார்வை இந்த மரங்கள் மீது விழுந்தன. குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரள மற்றும் வெளி மாநில கும்பல்கள் இந்த பகுதிக்குள் நுழைந்து முறிந்து விழுந்த மரங்களை மட்டுமில்லாமல், காடுகளில் நின்ற மற்ற மரங்களையும் வெட்டி கடத்தினர். கடத்தப்பட்ட மரங்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போது குமரி மாவட்ட வன பகுதியில், வனத்துறை அதிகாரிகள் கொண்ட உயர் மட்ட குழு ஆய்வு நடத்தி வருகிறது. கடந்த 2ம் தேதி  தொடங்கிய இந்த ஆய்வு நேற்று 3 வது நாளாக நடந்தது. காயல்கரை, செல்லந்திருத்தி, பெருஞ்சாணி மட்டுமின்றி குமரி மாவட்ட வன பகுதிகள் முழுவதும் இவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த ஆய்வில் பல்வேறு இடங்களில் விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது உறுதியாகி உள்ளது. குறிப்பாக குலசேகரம், வேளிமலை வன சரக பகுதிகளில் அதிகளவில் மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன. மரங்களை வெட்டி கடத்திய பின், அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க அந்த பகுதியில் மண் நிரப்பி மூடி உள்ளனர். ஒரு சில வன பகுதிகளில் மரங்கள் அடுத்தடுத்து வெட்டப்பட்டு அந்த இடமே தரிசு நிலமாக காட்சி அளிக்கிறது. இதை கண்டு ஆய்வு நடத்திய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது காடுகளில் வெட்டப்பட்டு கிடந்த மரங்களின் கிளைகளை கைப்பற்றி, வேளிமலை வன சரக அலுவலகத்துக்கு டெம்போவில் கொண்டு வந்துள்ளனர். 3 டெம்போக்கள் வந்துள்ளன. இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என்று வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிகாரிகள் உடந்தை இல்லாமல் இவ்வளவு பெரிய கடத்தல் நடந்து இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே வனத்துறையில் உள்ள அதிகாரிகளையும் இதில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வழக்கமாக குமரி மாவட்ட வன பகுதியில் இருந்து ரப்பர் மர கழிவுகள், செங்கல் சூளைக்காக ஆரல்வாய்மொழி, தோவாளை பகுதிக்கு கொண்டு செல்லப்படும். ஆனால் தடி என்ற பெயரில் வெளி மாவட்டங்களுக்கு அதிக தொலைவுக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கின்றன. எனவே விலை உயர்ந்த மரங்களை வெட்டி தான் வெளி மாவட்டத்துக்கு கொண்டு சென்று இருப்பார்கள் என கூறப்படுகிறது. மேலும் வாழை குலைகளில் பதுக்கியும் மரங்களை கடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் பின்னணியில் கண்டிப்பாக வனத்துறை அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம் உள்ளதால், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

 • ast23

  ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

 • chinacrob23

  சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்