SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக பொதுக்கூட்டத்தில் பாஜவுக்கு விழுந்த அர்ச்சனையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-09-19@ 00:06:32

‘‘உள்ளூர் அமைச்சருக்கே உதார் காட்டிட்டாங்களாமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்களின் பணியிடங்களுக்கு பல மாதங்களுக்கு முன்பு நேர்காணல் நடத்தப்பட்டது. பின்னர் நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த வாரம் பணி நியமன உத்தரவு 200க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த சம்பவம்தான் வேலூர் மாவட்ட அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் அமைச்சரான கே.சி.வீரமணி தான் கொடுக்கும் பட்டியல் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கூறி தன்னுடைய பட்டியலை அதிகாரிகளிடம் வழங்கினார். இதை கேள்விப்பட்ட கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு மிக நெருக்குமான பெண் கூட்டுறவு சங்க தலைவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே துறை அமைச்சருக்கு தகவலை தெரிவித்து  தான் தெரிவிக்கும் நபர்களுக்கே பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளூர் அமைச்சருக்கு செக் வைத்தார்.
அதாவது உள்ளூர் அமைச்சர் கொடுத்த பட்டியலில் சரிபாதியாக பிரித்தார். பெண் கூட்டுறவு சங்க தலைவர் தனியாக பட்டியல் தயாரித்து அதிகாரிகளிடம் கொடுத்தார். உள்ளூர் அமைச்சருக்கு பாதி, பெண் கூட்டுறவு சங்க தலைவருக்கும் பாதி என்று அதிகாரிகள் பணி நியமனம் வழங்கினர். யாருமே எதிர்பார்க்க முடியாத இடத்தில் பெண் தலைவர் இருப்பதால், அதிகாரிகளும் துறை அமைச்சர் சொல்லும் உத்தரவுக்கு தான் கட்டுப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால் உள்ளூர் அமைச்சருக்கு அவ்வளவு தான் பவர் உள்ளதா என அதிமுகவினர் மத்தியில் முணுமுணுப்பு எழுந்துள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அதிமுக பொதுக்கூட்டத்தில் பாஜவுக்கு அர்ச்சனை விழுந்ததாமே..’’
‘‘நெல்லையில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் மைக் பிடித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மத்தியில் ஆளும் பாஜவை ஒரு பிடி பிடித்தாராம். ஏற்கெனவே ஒரே தேசம், ஒரே மொழி என்ற பாஜ தலைவர் அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் கே.பி.முனுசாமியும் தன் பங்குக்கு பாஜவை சாடினார். வட மாநிலத்தவருக்கு நாம் அடிமையாகக் கூடாது என்பதற்காக தனி தமிழ்நாடு கோரிக்கையை முதல் முதலாக எழுப்பியவர் அண்ணா. 1965ல் மத்திய அரசு இந்தியை ஆட்சிமொழியாக அறிவித்தது. மாணவர்கள், இளைஞர்கள் அணி திரண்டு மொழி போராட்டம் வெடித்ததால், மத்திய அரசு அறிவித்த இந்தி ஆட்சி மொழியை ரத்து செய்தது. தற்போது அமித்ஷா ஒரே நாடு, ஒரே மொழி எனவும், இந்தியை ஆட்சி ெமாழியாக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார். பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களை வரவேற்கிறோம். ஆனால் ஒரு மாநில மக்களின் உணர்வு, மொழி, கலாச்சாரத்தில் பாஜக கை வைத்தால் வீழ்ச்சியடையும். அதிகாரம் உள்ளது என்பதற்காக மற்றவர்களின் உணர்வு, சிந்தனை, எண்ணங்களை உதாசீனம் செய்தால் வீழ்ச்சிக்கு வித்திடும் என்று நேரடியாகவே சீறினார்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அலம்பல், அடாவடி என்று அதிகாரமையமா செயல்படுகிற கணவரை பற்றி சொல்றேன்னியே.. அது என்ன விவகாரம்’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அரசியல் பதவிகள் மட்டுமல்ல, அதிகாரி பதவி பெண்களுக்கு கிடைத்தால் கூட, அதையும் பார்ப்பது கணவன்மார்கள் தான் என்ற புலம்பல் மாங்கனி மாவட்ட அறநிலையத்துறையில் கொஞ்ச நாட்களாக ஓங்கி ஒலிக்குதாம். புகழ் பெற்ற போர்ட் மாரியம்மன் கோயிலில் உயர்பதவியில் இருக்கும் பெண் அதிகாரியின் கணவர், ஒரு எல்ஐசி ஏஜெண்டாம். ஆனால் கோயில் வளாகத்தை பொறுத்தவரை அனைத்துமே அவரது கையசைவில் தான் நடக்குதாம். அங்கிருக்கும் கடைக்காரர்களை காலி பண்ணச் சொல்லி, மிரட்டுவாராம். அப்புறம் ஒரு குறிப்பிட்ட அமவுண்ட் பார்த்ததும், பிரச்னை பண்ணாம போயிடுவாராம். இதனால நாளுக்கு நாள், ஆக்கிரமிப்பு கடைகளின் எண்ணிக்கை அதிகமாகி கிட்டே போகுதாம். அதுமட்டுமல்ல அறங்காவலர் போஸ்டிங் வாங்கித்தாரேன், கோயிலில் வேலை வாங்கித்தர்றேன் என்றும் கல்லாகட்டுறாராம். எப்ப இந்த அலம்பலுக்கும், அடாவடிக்கும் முடிவு வருமோ என்று பாதிக்கப்பட்டவர்கள் தினமும் அம்மனிடம் புலம்புவது சீரியல் மாதிரி தொடர்ந்துகிட்டே இருக்காம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘காவல் துறை சேதி எதுவும் உண்டா..’’
 ‘‘காவல் துறையில் தொழில்நுட்ப பிரிவு இயங்கி வருகிறது. அதில் அரசர் பெயர் கொண்ட சிங் என்பவர் பல வருடங்களாக ஒரே இடத்தில் கலக்கி வருகிறாராம். அண்மையில் பணியிட மாற்றம் நடந்தது. அப்போது, அரசர் பெயர் கொண்ட சிங்... தனக்கு அடிபணியாத பெண் காவலர்களை பணியிட மாற்றம் செய்தாராம். தனது தோழியான பெண் இன்ஸ்பெக்டர் மூலம் நேரில் அழைத்து, ‘அனுசரித்து சென்றால் இங்கே பணியில் நீடிக்கலாம், இல்லாவிட்டால் வெளி மாவட்டங்களுக்கு மாற்றிவிடுவேன்’ என கூறி பணிய வைப்பாராம். இவரது ரகசியங்களை தெரிந்து கொண்ட அதிகாரி ஒருவர், இவரை பற்றி உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க முயன்றார். உடனே தன் பெண் தோழி இன்ஸ்பெக்டரை வைத்து சரிக்கட்டினார். அந்த பெண் இன்ஸ்பெக்டரிடம் அதிகாரி வரம்பு மீறி நடந்ததாக புகார் வாங்கிக்கொண்டார். பிறகு தன் அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு எதிராக விசாகா கமிட்டி புகாரில் சிக்க வைத்திருக்கிறார் அந்த அரசர் பெயர் கொண்ட சிங். இந்த சிங்கின் சிருங்கார லீலைகளால் பெண் அதிகாரிகள் இங்கு படாதபாடுபட்டு வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

 • monkey_thaayklannn1

  குரங்குகளுக்கு உணவு வழங்கும் திருவிழா : தாய்லாந்தில் வினோதம்!!

 • eelephanttt11

  35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை வாழ்ந்த உலகின் தனிமையான காவன் யானைக்கு புதிய வாழ்க்கை : துதிக்கையை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது

 • muskes_ambani11

  27 தளங்கள், 3 ஹெலிகாப்டர் இறங்கு தளம், 168 கார் பார்க்கிங், 9 விரைவு லிப்டுகள்,600 ஊழியர்கள்... உலகின் 2வது பிரமாண்டம் மிகுந்த முகேஷ் அம்பானியின் வீடு!!

 • delhi_farmnmmmeee

  திறந்தவெளியில் சமைத்து, கடும் குளிர் சாலையில் உறங்கியபடி, 7ம் நாளாக தொடர் போராட்டம் :டெல்லியில் மிரளவைக்கும் வைக்கும் விவசாயிகளின் கிளர்ச்சி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்