SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கவலை அளிக்கும் இந்தியாவின் மனநலம்!

2019-09-18@ 13:17:49

நன்றி குங்குமம் முத்தாரம்

இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு சவாலாக இருக்கும் விஷயங்களில் ஒன்று, மனநலம். இது தொடர்பான சட்டங்கள் இன்னும் வலுவாக மாறுவதுதான் பாதிக்கப்பட்டவர்களின் சமூக மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள். கடந்த 2017ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் (WHO) ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில், சுமார் இருபது சதவீத இந்தியர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகித் தவிக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தது. அதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பு பதினான்கு சதவீத இந்தியர்கள் மனநோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று சொன்ன நிமான்ஸ் (National Mental Health and Neuroscience - NIMHANS), இதில் குறைந்தபட்சம் பத்து சதவீதம் பேருக்காவது உடனடியாக மருத்துவ உதவி அவசியம் என்ற நிலையில் இருப்பதாகக் கவலை தெரிவித்திருந்தது.  

போதிய விழிப்புணர்வின்மை, உதாசீனமும் போதாமையும் நிறைந்த மருத்துவ சேவை ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களில் 10 - 12 சதவீதம் பேருக்குத்தான் சரியான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கின்றதாம்.இது ஒருபுறம் என்றால் அரசு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் மருத்துவத்துக்கு என ஒதுக்கும் நிதியில் வெறும் 0.06 சதவீதம்தான் மனநலத்துக்கு என வழங்கப்படுகிறது. அரசு இந்தப் பிரச்னையைக் கண்டுகொள்வதே இல்லை. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய ஆரோக்கியம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர், இந்தியாவில் 3,827 பதிவு செய்யப்பட்ட உளவியல் மருத்துவர்கள் இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், நமக்கு சுமார் 13,500 மருத்துவர்களாவது தேவைப்படுகிறார்கள் என்பதுதான் எதார்த்தம்.மனநலம் நேற்றும் இன்றும்இந்தியாவின் முதல் மனநலச் சட்டத்தை ஆங்கிலேயர்கள்தான் அமலாக்கினார்கள். அதன் பெயர் மனநோயாளிகள் சட்டம் (Lunacy Act).

இதை அவர்கள் 1858ம் ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தினார்கள். ஆங்கிலேயர்கள் பல ஆண்டு காலம் நம்மை ஆண்டாலும், ஏன் குறிப்பாக அந்த ஆண்டில் அவர்கள் மனநலத்துக்கு சிறப்புச் சட்டம் இயற்றினார்கள்? இதற்கு ஏ.கிரண்மாயி, யு.விந்தியா ஆகிய இரு இந்தியவியல் ஆய்வறிஞர்கள் சொல்லும் பதில் சுவாரஸ்யமானது. ‘இயல்பாகவே இந்தியாவின் குடும்ப அமைப்பு மற்றும் சமூக அமைப்பு ஆகிய காரணங்களால் இங்கு மனநலம் பாதிக்கப்பட்டோர் குறைவாகவே இருந்தனர். அப்படியே இருந்தாலும் அது ஒரு மனநல பாதிப்பு என்பதையே அறியாமல் கேலிக்கும் கிண்டலுக்குமிடையே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதனால் அப்போதைய ஆங்கில அரசால் இதை சரியாக மதிப்பிட இயலவில்லை...’ என்கின்றனர்.

வளரும் மற்றும் வளர்ந்துகொண்டிருக்கும் நாடுகளுக்கு இடையே மனநலத்தை மதிப்பிடுவதிலும் அங்கீகரிப்பதிலும் வித்தியாசங்கள் உள்ளன.
உதாரணமாக, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இதனை ஒப்பிட்டால்... இந்தியர்கள் அமெரிக்கர்களைவிட சட்டரீதியாக மனநோயாளிகளை வரையறுப்பதில் மோசமாக உள்ளார்கள். ஆனால், ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரை சமூக வாழ்வில் ஏற்றுக்கொள்வதில் நாம் அமெரிக்கர்களை விட தயாளம் மிக்கவர்களாக உள்ளோம். இதனால்தான் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் மனநலப் பிரச்னைகளோடு போராடிக் கொண்டிருந்தாலும் நம் சமூகத்தில் அதிக வெடிப்புகள் இல்லை. ஒருவகையில் இதுவே பிரச்னையாகவும் உள்ளது.பெண்களும் மனநலமும்கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவில் சுமார் 36 சதவீதம் பேர் மனநலப் பிரச்னைகளால் அவதிப்பட்டதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது.

அதாவது மொத்த மககள் தொகையில் மூன்றில் ஒருபங்குக்கு மேல் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளால் தவித்திருக்கிறார்களாம். இதில், பெண்கள் நிலைதான் மிக மோசம் என்கிறது அவ்வமைப்பு. அதாவது மேஜர் டிப்ரஸிவ் எபிசோட் (MDE) எனப்படும் மன அழுத்தப் பிரச்னைக்கு ஆண்களைவிடவும் பெண்களே அதிகம் இரையாகின்றனர். சுமார் ஐம்பது சதவீத இந்தியப் பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாம். அதாவது பாதிக்குப் பாதி. இந்தியப் பெண்களுக்கு ஏற்படும் சிறிய மனநல பாதிப்புகளை நம் சமூகம் கண்டுகொள்வதே இல்லை. அறியாமை, மருத்துவ சேவையில் காட்டும் அலட்சியம், அரைகுறை மருத்துவம் ஆகியவற்றால் பெண்களின் பிரச்னை மேலும் தீவிரம் அடைகிறது. குறிப்பாக, குழந்தை பிறப்பு மற்றும் அதற்குப் பிறகான நாட்களில் இந்தியப் பெண்கள் கடுமையான மனச்சோர்வும், தனிமை, மன அழுத்தம் ஆகியவற்றுக்கும் ஆளாகிறார்கள். இதில் தொண்ணூறு சதவீதம் பேருக்கு எந்தவிதமான மருத்துவ உதவியோ ஆறுதலோ கிடைப்பதில்லை.

இதனால், குடும்ப, சமூக வாழ்வு சுமுகமாக இல்லாத பெண்கள் சிலர் நீண்ட கால அளவில் மனநலம் பாதிக்கப்படுகிறவர்களாக மாறுகிறார்கள் என்பதுதான் கொடூரம்.இந்தியாவில் பெண்கள் நலனுக்கு எனச் செயல்படும் அமைப்புகள் கூட பெண்களின் மன நலனுக்காகப் பாடுபடுவது குறைவு. பெரும்பாலும் பெண்களின் உடல் சார்ந்த பிரச்னைகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றைப் பற்றித்தான் நாம் திரும்பத் திரும்ப கவலைப்படுகிறோம். பெண்களுக்கான வேலைக்கேற்ற கூலி, பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, மாதவிடாய் கோளாறுகள், பெண்களுக்கான கழிப்பறைகள் ஆகியவற்றுக்கு எல்லாம் மெனக்கெட்டு போராடும், குரல் கொடுக்கும் அமைப்புகள் பெண்களுக்கு குடும்பத்திலும் பணியிடத்திலும் நிகழும் அழுத்தங்களால் ஏற்படும் மனப் பிரச்னைகள் பற்றிப் பேசுவதே இல்லை. முன் சொன்னவற்றைப் பேசுவதைப் போலவே மனநலம் தொடர்பாகவும் பேச வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

மனநலம் என்பது பொது மருத்துவத்தின் ஓர் அங்கம் என்பதாகவே இந்திய சமூகத்தில் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பல மருத்துவர்கள் அதை ஏதோ ஓர் உப மருத்துவத்துறையாகவே கருதுகிறார்கள். உண்மையில் மனநலம் என்பது தனியாக இயங்க வேண்டிய ஒரு மருத்துவத் துறை. இந்நிலை உருவானால்தான் இதற்கென போதுமான நிதி ஒதுக்கீடு உட்பட அடிப்படை கட்டுமானங்கள் மேம்படும். கடந்த 2016ம் ஆண்டு இந்திய மனநலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது, பழைய மனநலச்சட்டங்கள் 1912, 1932 ஆகியவற்றை நீக்கிவிட்டு புதிய ஷரத்துகளை உள்ளடக்கிக் கொண்டுவரப்பட்டது. ஆனால், இதிலும்கூட போதுமான அளவு மனநலக் கோட்பாடுகள் அறிவியல் ரீதியாகப் பின்பற்றப்படவில்லை என்று மருத்துவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இதில் எல்லாம் போதிய மாற்றங்கள் வந்தால் மட்டுமே இந்தியாவில் மனநலம் என்பது கவனிக்கப்படுகிற துறையாக மாறும்.              

இளங்கோ கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்