SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிலத்தடி நீருக்கு வேட்டு: அதிகாரிகள் உடந்தை கோவை புறநகரில் செம்மண் கடத்தல் ஜரூர்

2019-09-15@ 15:18:43

கோவை: கோவை அருகே நிலத்தடி நீருக்கு வேட்டு வைக்கும் அளவுக்கு அதல பாதாளத்துக்கு செம்மண் வெட்டி எடுத்து கடத்தப்படுகிறது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.  கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான கணுவாய், வடவள்ளி, தடாகம், சின்னதடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. கடந்த காலங்களில், செங்கல், கைகளால் வடிவமைக்கப்பட்டது. தற்போது செங்கலின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதால், இயந்திரங்கள் மூலம் செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. செங்கல் அறுக்கும் பணிகளில் அரியலுார், விழுப்புரம், சேலம், கிருஷ்ணகிரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.  ஆனால், கட்டுமான தொழிலாளர்களின் சம்பளத்திற்கு இணையாக செங்கல் சூளைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கூலி கிடைக்கவில்லை. அதனால், பெரும்பகுதி தொழிலாளர்கள் இத்துறையை விட்டு வெளியேறி விட்டனர். அதனால், மாற்று ஏற்பாடாக தற்போது வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர்.  தடாகம் பகுதி செங்கல் சேம்பர்களில் வேலை பார்ப்பவர்களில் 80 சதவீதம் பேர் வடமாநில தொழிலாளர்களாக உள்ளனர். அறுவை ஆட்கள், கலவை கலக்கும் உதவியாளர்கள், டிரைவர்கள், கிளீனர்கள், லோடு மேன்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பகுதியில் பணிபுரிகின்றனர்.

 இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள், கோவை, திருப்பூர், ஈரோடு பகுதி மட்டுமின்றி, தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், அண்டை மாநிலமான கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. தினமும் 700 லோடு செங்கல் இப்பகுதியில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.  செங்கல் உற்பத்திக்கு தேவையான செம்மண் இப்பகுதிகளில் கிடைப்பதால், செங்கல் சூளை உரிமையாளர்கள், பல ஆண்டுகளாக இப்பகுதியில் செம்மண் தோண்டி எடுத்து வருகின்றனர். விளைநிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் மட்டுமின்றி, நீர்நிலைகளையும் விட்டு வைக்காமல் செம்மண் சுரண்டப்படுகிறது.  கனிம வள விதிகளின்படி, அனுமதி பெற்ற அரசு நிலங்களாக இருந்தாலும், தனியார் நிலங்களாக இருந்தாலும் 3 அடி அழத்துக்கு மேல் செம்மண் தோண்டக்கூடாது. ஆனால், இந்த விதிகளை எந்த உரிைமயாளரும் பின்பற்றுவது இல்லை. அதிகபட்சமாக 20 அடி ஆழம் வரை செம்மண் தோண்டி எடுக்கின்றனர். செம்மண் தோண்டி எடுக்க, கனரக வாகனங்களை பயன்படுத்தக்கூடாது, பக்கத்து நிலங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் போதிய இடைவெளியில் மண் எடுக்க வேண்டும், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே மண் எடுக்க வேண்டும் என பல்வேறு சட்டங்கள் உள்ளன. ஆனால், இதையும் மீறி தாராளமாக செம்மண் தோண்டி எடுக்கப்படுகிறது.

 இதை, முறையாக கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது கனிம வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளின் பங்கு ஆகும். ஆனால், அவர்கள் இந்த விவாரம் பற்றி துளி அளவும் கண்டுகொள்வது இல்லை. பெயரளவுக்கு ஆய்வுகூட நடத்துவது இல்லை. காரணம், அவர்கள் நன்றாக ‘கவனி’க்கப்படுகிறார்கள் என்ற பேச்சு பரவலாக எழுகிறது.  அதிகாரிகள் இப்படி உடந்தையாக இருப்பதால் இப்பகுதியில் மழை பெய்தாலும் நிலத்தடி நீர் தேங்குவது இல்லை. காரணம், எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு நிலத்தடி நீர் 1000 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. இந்த கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்தவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பல்வேறு கட்சியினர் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால், உயரதிகாரிகள்
யாரும் கண்டுகொள்ளவில்லை.  இதற்கிடையில், இந்த மணல் கொள்ளையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில்  பெரியநாயக்கன்பாளையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 24 மணி நேர தொடர் பிரச்சாரம் நடந்தது. அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது.  ஆனால், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கனிம வள கொள்ளை உச்சத்திற்கு சென்றுள்ளது.  தொடர் மணல் கொள்ளை காரணமாக, விவசாய நிலங்கள், மிகப்பெரிய பள்ளங்களாக மாறி வருகின்றன. இதனால், நிலத்தடி நீர் வறண்டு, விவசாயம் முடங்கியுள்ளது. நிலம் மற்றும் நீர்வளம் மிகுந்த பகுதியில் 20 அடி முதல் 100 அடி வரை தோண்டி செம்மண் எடுக்கப்படுவதால், இப்பகுதியில் பல இடங்களில் பெரிய பெரிய பள்ளங்களாகவும், குழிகளாகவும் மாறியுள்ளது.  இந்த கனிம வள கொள்ளையை கண்டறிந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இயற்கை வளங்களை பாதுகாக்க முடியாத அவல நிலை ஏற்படும்.

 இதுபற்றி கோவை மாவட்ட வனத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு எழுதியுள்ள கடிதம்:கணுவாய்-ஆனைகட்டி வழியோர கிராமங்களான  தடாகம் சுற்றுவட்டார பகுதியில் 20-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன. வனப்பகுதியை ஒட்டி சுமார் 3 முதல் 8 மீட்டர் ஆழத்திற்கு குழிகள் தோண்டி செம்மண் எடுக்கப்பட்டு வருகிறது. தடாகம் பள்ளத்தாக்கினை சுற்றி அமைந்துள்ள காப்புக்காடானது அதிக சரிவுப்பகுதிகளாகவும், சரிவு பகுதி முடிந்தவுடன் பட்டா நிலங்களும், வருவாய் நிலங்களும் அமைந்துள்ளது. இப்பட்டா நிலங்களில் சூளைகள் அமைத்து ஆழமான குழி தோண்டி செம்மண் எடுக்கப்பட்டு வருவதால் வனப்பகுதியில் ஓர் இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு செல்லும் யானைகள் சரிவுப்பகுதியில் செல்ல முடியாத காரணத்தினால் ஊருக்குள் செல்கிறது.  இக்குழிகளுக்குள் யானைகள் விழுந்து காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கிராமங்களுக்குள் புகுந்து யானை - மனித மோதல்கள் ஏற்பட்டு பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் சேதம் ஏற்படுத்தி வருகிறது. இதனால் தடாகம் பள்ளத்தாக்கு பகுதிகளில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆழத்தினைவிட அதிகமான ஆழத்திற்கு செம்மண் எடுக்கும் செங்கல் சூளைகள் மீது உரிய நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

மனிதர்கள் வாழ தகுதியற்ற இடம்
தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 60 நாட்களில் 4 யானைகள் உயிரிழந்துள்ளன. இவற்றின் இறப்புக்கான முழுமையான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும், விதிமுறைகளை மீறி நடைபெறும் கனிம வளக்கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்பகுதியில், தொடர்ந்து செம்மண் கொள்ளை நடக்கும்பட்சத்தில், இப்பகுதி, வெறும் பாறை பிரதேசமாக மாறி, கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்
ஏற்படும். எதிர்வரும் காலங்களில் மனிதர்கள் வாழத்தகுதியற்ற இடமாக இப்பகுதி மாறும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மின் இணைப்பு இல்லை
இந்த விவகாரம் தொடர்பாக சமூக நல ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, மேற்கூறிய செங்கல் சூளைகள் எதுவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறவில்லை எனவும், இரும்பு செட் அமைத்து இயங்கும் சூளைகளுக்கு மின் இணைப்புகள் வழங்கவில்லை எனவும் பதில் வந்துள்ளது. அறிக்கை என்ன ஆச்சு...? இதுகுறித்து கோவை வடக்கு தாசில்தார் தணிக்கை  மேற்கொண்டு அறிக்கை அனுப்புமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், தாசில்தார் எந்த அறிக்கையையும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பவில்லை. மேலும், அனுமதியில்லாமல் இயங்கும் செங்கல் சூளைகளாலும், விதிமுறைகளை மீறி மண் எடுக்கப்படுவதாலும் மனிதர்களுக்கும், வனவிலங் களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்