SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தின் ஒரே வற்றாத ஜீவநதி தாமிரபரணி பாய்ந்தும் தண்ணீருக்கு தவிக்கும் மக்கள்

2019-06-26@ 12:12:22

நெல்லை: தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ள போதிலும் நெல்லை, தூத்துக்குடியில் ஆண்டுதோறும் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்கி வருகிறது. குடிநீர் பிரச்னையை முழுமையாக தீர்க்க போதிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கு முக்கிய நீர் ஆதாரம் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளாகும். பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக 130 கி.மீ., தூரம் பயணித்து நெல்லை, ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆத்தூர் வழியாக புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான உறைகிணறுகள் அமைத்து நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு விதிகளின் படி ஊரக பகுதிகளான கிராம பஞ்சாயத்து பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒருவருக்கு 55 லிட்டர் குடிநீரும், பேரூராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 70 லிட்டர் குடிநீரும், நகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 110 லிட்டர் குடிநீரும், மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 135 லிட்டர் குடிநீரும் நாளொன்றுக்கு வழங்க வேண்டும். கடந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் நல்ல மழை கிடைத்த போதிலும் கடும் வறட்சியால் கடந்த மார்ச் மாதமே பாபநாசம் அணை வறண்டது. இதனால் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய நான்கு மாதங்களாக நெல்லை, தூத்துக்குடியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 11 அணைகளும், மாவட்டம் முழுவதும் 2518 குளங்களும் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்களும், கண்மாய்களும் உள்ளன. பல ஆண்டுகளாக இவை தூர்வாரப்படாததால் மண் மேடாகி நீர் தேங்கும் அளவு குறைந்து கொண்ேட வருகிறது. கடந்த ஆண்டு தமிழக அரசின் சிறப்பு திட்டமாக குடிமராமத்து பணிகள் துவங்கப்பட்டது. இதன்மூலம் குறிப்பிட்ட குளங்களை தேர்வு செய்து பல கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணி, கரைகளை பலப்படுத்தும் பணி, கால்வாய்கள், மதகுகள் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த பணிகள் அனைத்தும் சிலர் பணம் கொழிப்பதற்கே பயன்பட்டது. ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டும் குடிமராமத்து பணிகள் கண் துடைப்பாக மாறிப்போனது. இதனால் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து விட்டது.

தூத்துக்குடியில் 10 நாட்கள் காத்திருக்கனும்: தூத்துக்குடி மாநகரில் 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தூத்துக்குடிக்கு ஆரம்ப நாட்களில் கோரம்பள்ளம் குளத்திலிருந்து குடிநீர் எடுத்து குழாய்கள் மூலம் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டு அங்கு ராட்சத கிணறுகளில் தண்ணீரை நிரப்பி பின்னர் மேல்நிலை தொட்டிக்கு கொண்டு சென்று குடிநீர் விநியோகித்து வந்தனர். குரூஸ் பர்னாந்து நகராட்சி தலைவராக இருந்தபோது வல்லநாடு தாமிரபரணி ஆற்றிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு குழாய் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு வந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றி வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து 2வது, 3வது, 4வது பைப்லைன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வல்லநாடு பகுதி ஆற்றிலிருந்து குடிநீர் எடுத்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. நகரம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து இன்று 60 வார்டுகளுடன் மாநகராட்சியாக மாறிவிட்டது. மாநகர் பகுதியில் சுமார் 1.75 லட்சம் குடியிருப்புகள் உள்ளது. இங்கு சுமார் 6 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. தற்போது தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் குறைந்து அங்கிருந்து தூத்துக்குடிக்கு கொண்டுவரப்படும் குடிநீரின் அளவும் குறைந்துவிட்டதால் தற்போது 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகித்தபோது மக்களுக்கு போதுமானதாக இருந்தது. தற்போது குடிநீர் தட்டுப்பாட்டால் மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் குடிநீருக்கு அதிகவிலை கொடுக்க வேண்டியுள்ளது. கேன் குடிநீரின் விலையும் அதிகரித்துள்ளது.

குடம் நிறைய 7 நாட்கள் ஆகும்: காயல்பட்டினம், புன்னக்காயல் பகுதிகளில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீரை 7 நாட்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இப்பகுதிகளில் தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டால் குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. சுத்திகரிப்பே கிடையாது: ஏரல் தேர்வு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தாமிரபரணி ஆற்று குடிநீர் சுத்திகரிப்பு செய்யாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இனியாவது சுத்திகரிப்பு செய்து ஏரல் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழாயான கேட் வால்வு: கழுகுமலை பேரூராட்சி பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒரு முறை அரைமணி நேரம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கேட் வால்வு குழாயில் கசியும் தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஒரு குடம் குடிநீர் ரூ.10க்கு வாங்கி குடிக்க வேண்டியுள்ளது. கூலித் தொழில் செய்பவர்கள் தினமும் 1 குடம் ரூ10க்கு வாங்க முடியாமல் சீவலப்பேரி குடிநீர் திறந்து விடும் கேட் வால்வு குழாயில் குடிநீரை எடுத்து குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளத்தில் நேரம் குறைப்பு: சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் இரு நாள்களுக்கு ஒருமுறை 3 மணி நேரம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. உள்ளாட்சி ேதர்தல் நடத்தப்படாத நிலையில் தனி அதிகாரிகள் பொறுப்புக்கு வந்தவுடன் ஒன்றரை மணி நேரமாக குறைக்கப்பட்டது. தற்போது ஒருமணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தட்டுப்பாடு காரணமாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஊற்றுகளுக்கு படையெடுப்பு: விளாத்திகுளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் கடந்த 2 ஆண்டுகளாக விளாத்திகுளம் பேரூராட்சியில் கடும் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வைப்பாற்று காரை ஓரத்தில் உள்ள குடிநீர் அடிபம்பு, சின்டெக்ஸ் டேங்க் மற்றும் விளாத்திகுளம் வைப்பாற்றில் உள்ள ஊற்றுகளுக்கு குடிநீரை தேடி அலைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு பெய்த மழையின் மூலம் கிடைத்த நீரை முறையாக விளாத்திகுளம் கண்மாயில் தேக்கி வைக்காத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. வரும் காலங்களில் மழை நீரை சேமிப்பதற்கு விளாத்திகுளம் கண்மாய்க்கு வரும் நீர் வழித்தடத்தை சீரமைக்க வேண்டும். அப்போது தான் மழை நீரை கண்மாயில் சேமித்து வை க்க முடியும்.

நாசரேத்தில் ரூ.4க்கு விற்பனை: நாசரேத் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 2 அல்லது 3 நாளுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஞானராஜ் நகர், திருமறையூர் பகுதியிலிருந்து லாரி மூலம் வரும் குடிநீரை பொதுமக்கள், வியாபாரிகள் ஒரு குடம் தண்ணீர் ரூபாய் 4க்கு வாங்கி வருகின்றனர். அணை அருகில் இருந்தும் 4 நாட்கள் ஆகிறது: பாபநாசம் அணையில் இருந்து தான் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு குடிநீர் செல்கிறது. ஆனால் அணையின் கீழ் அமைந்துள்ள வி.கே.புரம் நகராட்சியில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வி.கே.புரம் அருகே உள்ள சிவந்திபுரம் ஊராட்சி, நெல்லை மாவட்டத்திலேயே பெரிய ஊராட்சி ஆகும். இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 4 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

ஆற்று குடிநீர் கிடையாது: கடையம் பகுதியில் ராமநதி ஆற்றில் உள்ள உறைகிணறுகளில் தண்ணீர் வந்து 20 நாட்கள் ஆகின்றன. இதனால் தனியார் இடத்தில் உள்ள கிணற்றில் இருந்து தற்போது தெற்கு கடையம் ஊராட்சி மக்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான கிராமங்களில் ஆற்று குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. . இதனால் மக்கள் குடிநீருக்காக தினந்தோறும் அல்லல்பட்டு வருகின்றனர். கிராம சபையை புறக்கணிக்க முடிவு: பணகுடி பகுதியில் 7 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதுவும் 15 நிமிடங்கள் அல்லது 30 நிமிடங்கள் தான் குடிநீர் வருகிறது. காவல்கிணறு பகுதியில் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இங்கு அரசு நிதியில் போடப்பட்ட பல ஆழ்துளை குழாய்களில் தண்ணீர் வராததால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை கண்டித்து கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குடங்களுடன் அலையும் மக்கள்: வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராமநாதபுரம் ஊராட்சியில் கடும் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. இங்குள்ள இந்திரா காலனி மற்றும் அப்துல்கலாம் காலனியில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் தினமும் 2 மணி நேரம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் தடைபட்டு உள்ளதால், குடங்களுடன் தண்ணீர் தேடி பொதுமக்கள் அலைந்து திரிகின்றனர். ரேஷன் போல குடிநீர்: தென்காசி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக 8 அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் செய்யக்கூடிய சூழல் உள்ளது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் காசு கொடுத்து டேங்கர் லாரிகளில் தண்ணீர் பிடிக்கும் சூழல் உள்ளது. நகராட்சி மூலம் டேங்கர் லாரிகளை வைத்து விநியோகிக்கப்படும் குடிநீரை, ரேஷனில் பொருட்கள் வாங்குவதுபோல் ஒன்று அல்லது இரண்டு குடங்கள் மட்டுமே கிடைக்கிறது.

முறைகேடான இணைப்புகள்: நாங்குநேரி பேருராட்சியில் வீடுகளுக்கு வாரம் ஒருநாள் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. வீடுகளில் மின்மோட்டார் பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சுதல் மற்றும் முறையற்ற குடிநீர் இணைப்புகளால் அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் கேன் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. நெல்லை மாநகராட்சியாக 1994ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. அப்போது பாளை. மேலப்பாளையம், நெல்லை நகராட்சிகளை இணைத்தும், தச்சநல்லூர் பேரூராட்சியை இணைத்தும் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. முதன்முதலாக கடந்த 1996ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிந்தது. கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகம் இல்லை. இந்நிலையில் நெல்லை மாநகராட்சியில் பல பகுதிகளில் குடிநீர் திண்டாட்டம் உள்ளது.

நெல்லை மாநகராட்சியை பொறுத்தவரை பாளையங்கோட்டை, நெல்லை, மேலப்பாளையம், தச்சநல்லூர் ஆகிய நான்கு மண்டலங்கள் அமைந்துள்ளன. இதற்கு உட்பட்ட 55 வார்டுகளில் சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நெல்லை மாநகராட்சிக்கு தாமிரபரணி ஆற்றில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் உள்ளன. தாமிரபரணி கரையில் வசித்த போதிலும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்கதையாகவே உள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம் பகுதிகளுக்கு கூட முழுமையான குடிநீர் விநியோகம் இல்லை. புறநகர் பகுதியான கேடிசி நகர், என்ஜிஓ காலனி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ெதாடர் கதையாக உள்ளது. தினமும் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் என்பது நெல்லை மாநகராட்சியில் இன்று வரை கனவாகவே உள்ளது. நெல்லை மாநகராட்சிக்கு பாபநாசம் ஆற்றில் இருந்து நேரடியாக குடிநீர் கொண்டு வர நெல்லை மாநகராட்சி மேயராக மறைந்த ஏஎல் சுப்பிரமணியன் பதவி வகித்த போது திட்டம் தீட்டினர். பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த திட்டம் அரியநாயகிபுரம் குடிநீர் திட்டமாக மாற்றப்பட்டது.

தவிக்குது நெல்லை: நெல்லை மாநகராட்சியின் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.185 கோடியில் அரியநாயகிபுரம் தாமிரபரணி ஆற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு 5 கோடி லிட்டர் குடிநீர் கொண்டு வரும் திட்டம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தீட்டப்பட்டது. இந்த குடிநீர் திட்டம் இன்று வரை ஈடறேவில்லை. இந்த குடிநீர் திட்டத்திற்காக பேட்டை காமராஜர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் மாநகரில் நடந்து வருகிறது. அதற்காக நெல்லை மாநகரத்தில் கடந்த மே மாதம் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தற்போது நெல்லை டவுன் காட்சி மண்டபம் முதல் ஆர்ச் வரை பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் அடுத்த கட்டமாக ஆர்ச் முதல் ஈரடுக்கு மேம்பாலம் வரையிலும், அதற்கு அடுத்த கட்டமாக வண்ணார்பேட்டை முதல் முருகன்குறிச்சி வரையிலும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த அனைத்துப் பணிகளும் முடிந்த பின்னரே நெல்லை மாநகரத்தில் உள்ள 76 குடிநீர் டேங்குகளுக்கும் குடிநீர் ஏற்றி அரியநாயகிபுரம் குடிநீர் வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நிறைவேறிய பிறகாவது நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நெல்லைக்கு இன்று வரும் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அரியநாயகிபுரம் குடிநீர் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் விவாதித்து திட்டத்தை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதுடன், மாநகராட்சி மக்களுக்கு தினமும் 135 லிட்டர் குடிநீர் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

 • korona-death19

  கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!

 • tn-school19

  தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!

 • jesee_chrrr1

  3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!

 • 19-01-2021

  19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்