SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக எல்லையில் சொட்டுநீர் எட்டி பார்க்க வழியில்லை: ஆந்திரா கட்டிய 50 தடுப்பணைகளால் அழிந்துபோன விவசாயம்

2019-06-16@ 16:52:02

வாணியம்பாடி: ஆந்திரா கட்டிய 50 தடுப்பணைகளால் தமிழக எல்லையில் சொட்டுநீரும் வந்துசேராத நிலையில் நீராதாரமின்றி மாற்றுத்தொழிலை தேடி செல்லும் அவலத்துக்கு வேலூர் மாவட்ட விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வடதமிழகத்தின் 5 மாவட்டங்களின் நீராதாரமாக விளங்கக் கூடிய பாலாறு, கர்நாடக மாநிலம் நந்திதுர்க்கம் மலையில் உற்பத்தியாகி, ஆந்திர மாநிலத்தில் 48 கிலோ மீட்டர் பயணித்து, தமிழக எல்லையான புல்லூரில் நுழைகிறது. தொடர்ந்து வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், காஞ்சிபுரம் வழியாக 222 கிலோமீட்டர் தூரம் பயணித்து சதுரங்கபட்டினம் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. பாலாற்றை நம்பி வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 6,17,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் 48 கிலோ மீட்டர் தூரம் பாயும் பாலாற்றின் குறுக்கே அம்மாநில அரசு கடந்த 1996-2000ம் ஆண்டு வரை, சுமார் 29 இடங்களில் தடுப்பணைகள் கட்டியுள்ளது.

இந்த தடுப்பணைகள் 5 அடி உயரம் முதல் சுமார் 7 அடி உயரம் வரை கட்டப்பட்டு இருந்தது. இதனை கடந்த 2014ம் ஆண்டு முதல் 12-40அடி வரை உயர்த்தி அணைகளாக மாற்றியது. ஏற்கனவே பாலாற்றில் மணல் கொள்ளை, ஆக்கிரமிப்பு ஆகியவற்றுடன் போதிய மழையின்மையும், பாலாற்றை பாலைவனமாக மாற்றியுள்ளது. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் குடிநீருக்கு திண்டாடும் நிலையை சந்தித்து வருகின்றனர். தமிழக மக்களின் இத்தகைய இக்கட்டான நிலையில் கூட, தனது அத்துமீறலை ஆந்திரா தொடர்ந்து வருகிறது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 21 தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தவும், பராமரிப்பு மற்றும் மராமத்துப்பணிகள் மேற்கொள்ளவும் ரூ41.70 கோடியை ஒதுக்கீடு செய்து பணி ஆணை வழங்கியுள்ளது.

அதோடு எதிர்காலத்தில் 500 மீட்டருக்கு ஒரு தடுப்பணை என்கிற விகிதத்தில் 30 தடுப்பணைகள் கட்டவும் திட்டமிட்டுள்ளது ஆந்திரா. இதனால் பாலாற்றை நம்பியிருந்த 6 லட்சத்து 17 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவு புன்செய் மற்றும் நன்செய்  நிலங்கள் பொட்டல்காடாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் காலம் காலமாக மண்ணை நம்பி வாழ்ந்த விவசாயிகளும் அண்டை மாநிலமான கர்நாடகம், மகாராஷ்டிரம், கேரளா போன்ற மாநிலங்களில் கட்டிட வேலைக்கும், செக்யூரிட்டி, சுமைத்தூக்கும் தொழில்,  செல்போன் டவர் அமைக்கும் பணிகள், மின்சார டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும்  பணிகள் என குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் என்றால் மாவட்டத்தில் பாலாற்றின் வடிநில பகுதியான வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் நிலத்தடி நீராதாரம் அதலபாதாளத்துக்கு சென்று குடிநீருக்கும் பொதுமக்களை அல்லாட வைத்துள்ளது. எனவே, இனியாவது தமிழக அரசு தனது தூக்கத்தை கலைத்து பாலாறு உட்பட நதிநீர் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துவதுடன், நீர்மேலாண்மை திட்டங்களை மேற்கொண்டு விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்க்கிறனர்.

விவசாயி லூர்துநாயகம்
   
பாலாற்றை ஒட்டியுள்ள எனது 3.5 ஏக்கர் நிலம் விவசாயம் செய்யமுடியாத நிலைக்கு உள்ளது. இனி மழை பெய்தால் மட்டுமே எனக்கு விடிவு. இல்லையென்றால் நானும் வெளிமாநிலத்துக்கு கம்பி  வேலை செய்ய சென்று விடுவேன்.

தன்னார்வலர் வேதாசலம்
   
மழைக்காலங்களில் கிடைக்கும் நீர்வரத்தையும் தடுத்து பாலாற்றை பாலைவனமாக்கிய ஆந்திர அரசு, மேலும் பல தடுப்பணைகளை கட்டி, தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளது. இதன் காரணமாக தமிழக மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வெளிமாநிலங்களுக்கு பிழைப்புத்தேடி ஓடும் அவலத்துக்கு காரணமாகியுள்ளது. இனியும் தமிழக அரசு இவ்விஷயத்தில் அண்டை மாநிலத்தின் அராஜகத்தை வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுப்பதுடன், மண்ணின் மைந்தர்களை அவர்களது மண்ணில் கவுரவத்துடன் வாழ வகை செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்