SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏரிகளின் மாவட்டங்களில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு வந்த சோதனை: நீர்நிலைகளை அரசு பராமரிக்காததால் மக்கள் கடும் பாதிப்பு

2019-06-16@ 04:57:21

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் ஏரிகள் அனைத்துமே முற்றிலும் காய்ந்து விட்டதால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.தமிழகத்தில் உள்ள 14,000 ஏரிகளில் அனைத்து ஏரிகளும் முற்றிலும் வறண்டு விட்டதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன. பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், வீராணம் என தமிழ்நாடு முழுவதும் 39,202 ஏரிகள் உள்ளன.  அவற்றில் 13,699 ஏரிகள் பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் உள்ளன. இருந்தாலும், இதில், 3,701 ஏரிகள் மட்டுமே முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளதாக அத்துறையே ஒப்புக்கொள்கிறது. தமிழகத்தில் கிணறுகளில் எண்ணிக்கை 18 லட்சம். அவற்றில் பாதிக்குமேல் பாழாகிக் கிடக்கின்றன.தமிழகத்தில் 2016ல் சராசரி வடகிழக்குப் பருவ மழை அளவான 440 மி.மீ.க்கு பதிலாக 168 மி.மீ. மழை மட்டுமே பெய்தது. தென்மேற்குப் பருவ மழையும் குறைவாகவே பெய்தது. ஆனால், இந்த குறைவான மழைநீரை கூட முறையாக சேமிக்க  முடியாதவாறு நீர்நிலை தூர்ந்தும், ஆக்கிரமிக்கப்பட்டும் கிடந்தது. நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 4.45 மீட்டர் ஆழத்திலிருந்து 7.85 மீட்டருக்கு சென்றுவிட்டது.இந்த ஆண்டு பருவகாலத்தின் முதல் பெருமழை கூட சேமிக்கப்படாமல் நேராக  கடலுக்கு செல்லவே நேர்ந்தது. எனவே, ஏரிகளை தூர்வாரியும், மழைநீரை சேமித்தும் வைத்தால் மட்டுமே சாகுபடி நீரையல்ல, குடிநீரை கூட காணமுடியும் என்ற பரிதாப நிலையே இன்னமும் நீடிக்கிறது.

2015ல் நிதி இல்லை எனக்கூறி பெரும்பாலான ஏரிகள் மற்றும் அணைகளை தூர்வாராமல் விட்டதால் மழை நீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவற்றுக்கு வரும் நீர்வரத்து ஓடைகள், கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்றாததால்  தெருக்களிலும், சாலைகளிலும் ஓடி நீர் வீணானது.ஆறுகள் நிலையோ மேலும் அவலம். அளவுக்கதிகமான மணல் கொள்ளையால், பருவ காலத்தில் நீரை உறிஞ்சி, கோடை காலத்தில் கொடுக்க முடியாமல் ஆறுகள் தவித்தன. வெள்ளமாக விரயமாகி தமது வேதனையை வெளிப்படுத்தின.  இந்நிலையில் நீர்நிலைகளை பராமரித்து, தேவையான தண்ணீரை தேக்க வேண்டுமென்றால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மாசு, குப்பையை கலக்காமல் தடுக்க வேண்டும்.சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான  புறநகர் குடியிருப்புகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்தே கட்டப்பட்டுள்ளன. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகமே ஏரியில்தான் கட்டப்பட்டு உள்ளது. கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டும் தொட்டியாகவே ஆறுகள், குளங்களை பொதுமக்கள்  கருதுகின்றனர்.
ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மற்றொரு வழக்கில், நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதற்காக, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2015ம் ஆண்டு சென்னையைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தைத் தொடர்ந்து, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் நீர்நிலைகளில் எவ்வித  கட்டுமானப் பணிகளும் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்தது. பொதுப் பயன்பாட்டுக்காக கட்டப்படும் அரசு கட்டடங்கள் கூட நீர்நிலைகளை தூர்த்து கட்டக்கூடாது என்று 1997ம் ஆண்டே உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.நீர்நிலைகளில் கட்டடம் கட்ட அனுமதிக்க கூடாது. இதை அதிகாரிகள் சுற்றறிக்கை மூலம் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தெரிவிக்க வேண்டும். நீர் நிலைகளில் கட்டடங்கள் கட்ட அதிகாரிகள் யாரேனும் அனுமதி  கொடுத்தால் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.நீர் நிலைகளுக்கு பட்டா வழங்கக்கூடாது. கட்டட வரைபட அனுமதி வழங்கக்கூடாது. கட்டடங்கள் நீர் நிலைகளில் கட்டப்படுவதாக சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்களிடம் அந்த இடம் நீர் நிலை இல்லை என்று வருவாய்த்துறை  அலுவலரின் சான்றிதழ் பெற்று வர அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். அதன்பின்பு தான் கட்டட வரைபட அனுமதி வழங்க வேண்டும்’என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.இவ்வளவு பாதுகாப்பான சட்டங்கள் இருந்தும்,  நீர்நிலைகளை மீட்பதில் அரசு மெத்தனமாக இருப்பதால்தான், தற்போது குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு கள ஆய்வு செய்வார்களா விஏஓக்கள்?
அரசு நிலங்களில் ஏற்படும் ஆக்கிரமிப்புகளின் பேரில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 1905ஆம் ஆண்டின் தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் மற்றும் வருவாய் நிலை ஆணை எண் 26ல் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு மாதமும் பயிராய்வுப் பணியை மேற்கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர், புறம்போக்கு நிலங்களில் ஏதேனும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை கண்டறிந்தால், உடனடியாக அடங்கலில் அதனைப் பதிவு செய்து, அதன் அடிப்படையில் ‘பி’  மெமோ இரு நகல்கள் எழுதி பிரிவு-7 நோட்டீஸையும், இரு நகல்களையும் வருவாய் ஆய்வாளருக்கு அனுப்ப வேண்டும்.நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களில் ஏற்படும் ஆக்கிரமிப்புகளை, அந்தந்த துறையே அகற்றிக் கொள்ளலாம். உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நிலங்களில் ஏற்படும் ஆக்கிரமிப்புகளையும்  அவர்களே அகற்றலாம்.

கிராமங்களில் கால்வாய், மழைநீர் செல்லும் பாதை, நடைபாதை மற்றும் வண்டிப்பாதை விவரங்கள் கிராம வரைபடத்தில் குறிக்கப்பட்டிருக்கும். பட்டா நிலங்களில் குறிப்பிடப்பட்ட பாதைகளை எவ்வித காரணத்திற்காகவும் பட்டாதாரர் தடுக்க  இயலாது. தடுத்தால் தமிழ்நாடு நில ஆக்கிரப்பு சட்டம் 1905 விதிமுறைகளை அனுசரித்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.இவ்வளவு விதிகள் இருந்தும், விஏஓக்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதை  தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால்தான் அரசு நிலங்களின் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காப்பீட்டு தொகை செலுத்தியும் நிவாரணம் வழங்காத அரசு
ஏரிகளின் மாவட்டங்கள் என்று பெருமையாக அழைக்கப்படும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சிறிதும், பெரிதுமாக 3,800 ஏரிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில், 1,900 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த ஏரிகள்  அனைத்திலுமே தண்ணீர் இல்லை. முற்றிலும் வறண்டு தான் காணப்படுகிறது. இதனால் இம்மாவட்ட விவசாயிகள், மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு தங்களுக்கு உரிய நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல் பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ₹25,000, கரும்பு பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹60,000, வேர்கடலை மற்றும் காய்கறிகள் பயிர் செய்தவர்களுக்கும் தகுந்த  நிவாரணத்தை அரசு அறிவிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
கொளுத்தும் கோடை வெயிலால் வறண்டு கிடக்கும் ஏரிகளை தற்போதே உரிய முறையில் தூர்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த கொடும் வறட்சி பாதிப்புகளில் இருந்து விவசாயிகளை  பாதுகாக்க தவறினால், அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து விடும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்