SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலை கட்சியில் வாரிசு அரசியலை கொண்டு வருவது பற்றி செல்லமானவர் பேசியதை சொல்கிறார்: wiki யானந்தா

2019-06-11@ 00:48:13

‘‘உள்ளாட்சி தேர்தல் நடக்குதோ இல்லையோ... இலை கட்சியில உட்கட்சி பூசல் பெரிசா வெடிச்சிட்டு வருது போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மதுரையை சேர்ந்த செல்லமானவர் இப்போது இன்னொரு குண்டை தூக்கி போட்டு இலை தலைமையில் இடியை இறக்கி இருக்கிறார். சீனியர்களின் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்து இருக்கிறார். அதாவது அவரது பையனுக்கு மதுரை மாநகராட்சி மேயர் பதவி. அதேபோல எம்எல்ஏ, எம்பி, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் கொடுக்க வேண்டும் என்று புது டிமாண்டை வைத்துள்ளார். வாரிசு அரசியலை வெறுத்தவர் ஜெயலலிதா. இப்போது வாரிசு அரசியல் இல்லாவிட்டால் கட்சியே சிதறி விடும். பலர் பல கட்சிக்கு ஓடி விடுவார்கள் என்று இரண்டாவது மிரட்டலை விடுத்து இருக்கிறாராம். முதல் மிரட்டல் ஒற்றை தலைமை... இவற்றை எல்லாம் யார் பின்னாடி இருந்து சொல்லி கொடுத்து செல்லமானவர் பேசுகிறார் என்பதை சேலம்காரர் கண்டுபிடித்துவிட்டதாக சொல்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இவ்வளவு நடந்த பிறகும் வெறும் அறிக்கை மட்டும்தானே வந்து இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கவலைப்படாதே சேலம்காரர் இப்போது புது கணக்கு ஒன்றை போட்டு இருக்காரு... ஜெகன்மோகன் ரெட்டி பாணியில் ஒரு மண்டலத்துக்கும் மக்கள் தொகை அதிகம் உள்ள சமுதாயத்துக்கும் அமைச்சர் சீட்டு தந்து சமாளிக்க போகிறாராம். அது மட்டுமில்ல பொதுக்குழுவில் எந்த சமுதாயத்தினர் அதிகம் இருக்காங்களோ அவங்களுக்கு இரண்டு அமைச்சர் தர முடிவு செய்து இருக்காராம். மற்ற சமுதாயத்தினருக்கு வாரியம் தர முடிவு செய்து இருக்காராம். இது எல்லாம் இன்னும் இரண்டு வாரத்துக்குள் நடக்குமாம். அதனால பதவி பெற்றவர்கள் எல்லோரும் சேலம்காரரின் வாரிசாக இருப்பார்கள் என்பது கணக்கு. உளவுத்துறையும் அதையே சொல்கிறது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இதெல்லாம் நடக்குமா...’’
‘‘சேலம்காரர் தன் வலது கரம் இடது கரம் என்று நான்கு பேரை வைத்துள்ளாராம். அவர்கள் மூலமாகவே காய்களை நகர்த்தி வர்றாராம். அவர்கள் தான் அதிருப்தி எம்எல்ஏ, அமைச்சர்களை சந்தித்து பேசுகிறார்களாம். சேலம்காரர் சொன்னதை அப்படியே சொல்கிறார்களாம். அதன் பின்னர் அங்கிருந்தே செல்போன் மூலம் முதல்வரிடம் பேச வைத்து பணிய வைக்கிறார்களாம். அதே பாணியைதான் தேனிகாரர் கடைபிடித்தாலும் பதவி போடும் அளவுக்கு செல்வாக்கு இல்லாதால் அடிமட்ட தொண்டர்களிடமும், பொதுக்குழு உறுப்பினர்களையும் தன் பக்கம் சேர்க்கும் பணியை ரத்த உறவு ஒருவரிடம் அளித்துள்ளாராம்...’’ என்றார் விக்கியனந்தா.

‘‘சட்டசபை கூடுமா கூடாதா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கிண்டிக்காரர், உள்துறை அமைச்சரை சந்திக்கிற சாக்கில் சட்டசபை கூட்டம் குறித்து பேச உள்ளாராம். அத்தோடு ஏழு பேர் விடுதலை பற்றியும் பேச உள்ளாராம். அத்துடன் உயர்கல்வித்துறைகாரர் ஆளுங்கட்சி தன்னையும் தன்னால் நியமிக்கப்பட்டவர்களையும் அசிங்கப்படுத்துகிறார். இதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் கூற உள்ளாராம். மேலும் இப்போது இருக்கும் ஆட்சி கவிழாமல் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுங்க... மற்றவர்களுக்கு சான்ஸ் கொடுத்துவிடாதீர்கள் என்று மேலிடத்தில் இருந்து பிரஷராம்.

அதனால சபையின் நாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் என்ன ஆகும் என்பது தெரியவில்லை. மானியக்கோரிக்கை முடிந்த பிறகா அல்லது அதற்கு முன்பா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும். ஆனால் இலை கட்சியை இரண்டு ஆண்டுகள் பக்கத்தில் வைத்து கொண்டே தாமரையை வளர்க்க வேண்டும் என்பதுதான் ஷாவின் திட்டம். அதற்கான ஸ்கெட்ச்தான் இப்போது டெல்லியில் தீட்டப்படுகிறதாம். அதற்காகவே கிண்டிக்காரர் டெல்லிக்கு சென்று இருக்கிறார்.’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கிப்ட்பாக்ஸ் கட்சிக்குள்ள என்ன நடக்குது...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கிப்ட்பாக்ஸ்காரர் தேர்தலுக்கு பிறகு காணாமல் போனார். அவரது டிவிட், அறிக்கைகள்தான் வந்து ெகாண்டு இருக்கிறது. இந்நிலையில் இலையில் ஏற்பட்டுள்ள பிளவை சரியாக பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான் ஒற்றை தலைமை. அதாவது அந்த ஒற்றை தலைமை தேனி, சேலம் கிடையாது. சிறைபறவை தானாம். அவரைதான் ஒற்றை தலைமையாக அறிவிக்க வேண்டும் என்று சிலர் குரல் கொடுத்து இருக்கிறார்கள். இல்லை. இல்லை. கிப்ட்பாக்ஸ்காரர்தான் ஒன்றை தலைமை என்று இன்னொரு பக்கம் குரல் எழும்பி உள்ளது. இதில் இருந்து என்ன தெரிகிறது. கிப்ட் கட்சி தரப்பு சிறையில் இருந்து வந்தாலும் ஷோகேஸ் பொம்மையாக தான் இருக்க வேண்டும். தீவிர அரசியலில் ஈடுபடக் கூடாது என்று கிப்ட்பாக்ஸ் நினைக்கிறது....’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ராஜ்ய சபா சீட்டு விஷயம் பழம், தாமரை, இலை கட்சிகளின் கூட்டணி உறவை சிதைத்துவிடும் அளவில் இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தோற்ற கட்சிகளுக்கு ராஜ்ய சபா சீட்டு தரக்கூடாது என்று கட்சி நிர்வாகிகள் கூறினாலும் திண்டிவனத்தில் வகை வகையான கூட்டு, பொறியல், பாயசம் என்று வெளுத்து கட்டிவிட்டு இப்போது சீட் இல்லையென்றால் நம்மை வெளுத்து கட்டிவிடுவார்கள் என்ற பயம் தேனி, சேலம் தரப்புக்கு இருக்கிறது. இதையடுத்து மைனாரிட்டி கம்யூனிட்டியில் ஒருவருக்கு சீட் கொடுக்க வேண்டும். வடக்கு மற்றும் தெற்கில் இருந்து இரண்டு மூத்த தலைவர்கள் சீட்டு கேட்டு கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒருவருக்கு கன்பார்ம் ஆகி இருக்காம்.

அப்புறம் கொங்கு மண்டலமா கட்சியின் சீனியருக்கா என்பதில் பிரச்னை ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படி போனால் தாமரைக்கு தமிழகத்தில் சீட் கொடுக்க இலைக்கு விருப்பம் இல்லை. தாமரையும் தமிழகத்தில் துடிப்புள்ள இரண்டு பேரை ெவளிமாநிலங்களில் இருந்து ராஜ்ய சபாவில் தேர்வு செய்து விரிவாக்கத்தின்போது அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்துள்ளது. இது எல்லாம் பட்ஜெட் தாக்கலான பிறகே நடைமுறைக்கு வராலாம் என்று தாமரை தரப்பு பேசிக் கொள்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்