முத்தரசன், பேராயர் எஸ்றா சற்குணத்துக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடும் வகையில் பேசுவதா?: ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
2019-05-01@ 01:02:19

சென்னை: “முத்தரசன், பேராயர் எஸ்றா சற்குணத்துக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடும் விதத்தில் பேசுவதா?” என்று ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: பொன்பரப்பி வன்முறையைக் கண்டித்து சென்ற 24ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் விதத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், “பேசாத ஒன்றை பேசியதாக இட்டுக்கட்டி” ஓர் அறிக்கை வெளியிட்டு பதற்றச் சூழ்நிலையை உருவாக்கியிருப்பதற்கு வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தம்மை அரசியலில் இன்னமும் நிலை நிறுத்திக்கொள்ள ஆக்கப்பூர்வமான பல வழிமுறைகள் இருக்கும் போது, டாக்டர் பின்னடைவை ஏற்படுத்தும் வழியை ஏன் தேர்வு செய்கிறார் என்று அவர் மீது அன்பும் அக்கறையும் உள்ள பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
அவரே ஒரு கற்பனைப் பேச்சை மனதில் செயற்கையாகக் கற்பித்து உருவாக்கிக் கொண்டு-அதற்கு பதில் என்ற வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டு-இந்த இரு தலைவர்கள் மீதும் வன்முறையை வீசும் தொலைபேசி மிரட்டல்களுக்கு காரணமாக இருப்பது பொறுப்புள்ள முதிர்ந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு அழகல்ல; உரிய செயலும் அல்ல! தேர்தலில் கூட்டணிகளும், முடிவுகளும் வெற்றி பெறும் வகையில் பாமகவுக்கு அமையாமல் போய் விட்டதே என்ற வருத்தம் இருக்கலாம்.இதுவே அரசியலின் இறுதிக் கட்டம் இல்லை. அரசியலில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தவர் அவர். தேர்தல் அரசியலில் அவற்றை சகஜமாக எடுத்துக் கொள்வதே ராமதாஸ் போன்ற தலைவர்களுக்கு ஏற்ற குணமாக இருக்க முடியும். அதை விடுத்து-அமைதியாக நல்லிணக்கத்துடன் வாழும் சமுதாயங்களிடையே வெறுப்பைக் கக்கி, முத்தரசன் மற்றும் பேராயர் போன்ற உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல்கள் விடுக்கும் அளவிற்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ தெரியாமலோ உருவாக்குவது நமது தமிழ்ச் சமூகத்திற்குப் பேராபத்தானது.
தேர்தல் வெற்றி தோல்விகள் எல்லோருக்கும் பொதுவானவை என்பதை மருத்துவர் நன்கறிவார். ஆகவே ராமதாஸ் மீண்டும் இதுபோன்ற பதற்றச் சூழ்நிலைகள் உருவாகிடக் கிஞ்சிற்றும் இடம் கொடுக்காமல்-தமிழகத்தில் அனைத்து சமூகங்களும் நிம்மதியாகவும் அமைதியாகவும் நட்புறவோடும் வாழ்வதற்கு ஏற்ற சுமுகமான சூழ்நிலைகளை மட்டும் உருவாக்கி- பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மேலும் மேலும் முன்னேறுவதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எல்லாவற்றையும் அறிந்திருப்பவர் அவர். அவருக்கு இது நிச்சயமாக அறிவுரை அல்ல; மனப்பூர்வமான வேண்டுகோள். இரா.முத்தரசன் மற்றும் பேராயருக்கு உரிய பாதுகாப்புகளை வழங்கி மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தையும் பொது அமைதியையும் உறுதியோடு பாதுகாத்திட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் 2ம் கட்ட தேர்தல் பிரசாரம்: திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு
திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். வருகிற 14ம் தேதி ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதி, 15ம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதி, 16ம் தேதி சூலூர் தொகுதி, 17ம் தேதி அரவக்குறிச்சி தொகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம்
பாஜ.வுக்கு எதிராக 3வது அணி அமைக்க தீவிர முயற்சி ஜனாதிபதி பதவிக்கு குறி: தேசிய பயணத்தில் சந்திரசேகர ராவ் தலைவர்களுடன் அடுத்தடுத்து சந்திப்பு
மேற்கு வங்கத்தில் பாஜ எம்பி. மீண்டும் தாவல்
சொல்லிட்டாங்க...
ராஜிவ் காந்திக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் அளவுக்கு சீமான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை: கே.எஸ்.அழகிரி தாக்கு
சென்னையில் வரும் 28ம் தேதி சிறப்பு பொதுக்குழு பாமக தலைவராக அன்புமணி தேர்வாகிறார்? ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்க திட்டம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்