SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுற்றுலாத்தலமாக அறிவித்து ரூ.9.20 கோடி ஒதுக்கியும் பணி நடக்கவில்லை சேதமடைந்த ஆண்டியப்பனூர் நீர்த்தேக்கம்

2019-03-17@ 00:27:16

* அணை நிரம்பினாலும் விவசாயிகளுக்கு பயன்படாத நிலை
* நிலம் வழங்கியவர்களுக்கு கேள்விக்குறியான நிவாரணம்

வாணியம்பாடி: ரூ.9.20 கோடி நிதி ஒதுக்கி சுற்றுலா தலமாக அறிவித்தும் ஆண்டியப்பனூர் நீர்த்தேக்கத்தில் எந்த பணியும் நடைபெறாததுடன், அணை சேதமடைந்து வருவது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டியப்பனூரில் கடந்த 2007ம் ஆண்டு, அப்போதைய தி.மு.க. ஆட்சியில் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் 273 லட்சம் செலவில் கட்டி திறந்து வைக்கப்பட்டது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் அணை உள்ளது. ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கத்தின் பிரதான கால்வாயின் நீளம் 3,630 மீட்டர், நீரின் வேகம் 0.724 மி.வி., பாசனபரப்பு 64.52 ஏக்கர், நீர் வெளியேறும் அளவு 27.58 கன அடி, கால்வாயின் அடிமட்ட அகலம் 1.20 மீட்டர், முழுமட்ட உயரம் 0.60 மீட்டர், நேரடி பாசன மதகு 5 என, தகவல் பலகை தெரிவித்தாலும் நீர்த்தேக்கத்தில் எத்தனை முறை தண்ணீர் நிரம்பினாலும், இக்கால்வாயை பாசனத்துக்காக, ஒருமுறை கூட திறந்துவிட்டதில்லை. இது ஒருபுறம் என்றால், ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் அமைய நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, இன்னும்கூட உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகளும் அப்பகுதி மக்களும் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல், ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டதுடன் சரி, அதன்பிறகு பராமரிப்புப்பணி என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அணை கட்டி முடிக்கப்பட்டு 12ஆண்டுகள் கடந்த நிலையில் எந்த பராமரிப்பு பணியும் மேற்கொள்ளாத நிலையில் அணையின் கட்டுமானங்கள் ஆங்காங்கே சேதமடைந்தும், மதகுகள் பழுதடைந்தும் காணப்படுகிறது. அணைக்கு செல்லும் சாலைகளும் கூட குண்டும் குழியுமாக காட்சி தருகிறது.

மேலும் அணையின் பூங்கா பகுதியும் சிதிலமடைந்து காணப்படுகிறது. பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழவும் அமைக்கப்பட்டுள்ள மயில், சரஸ்வதி, டைனோசர் சிலைகள், சண்டையிடும் காளை, முதலை சிலைகள், நிழற்கூடம் போல பசுமைக்காக அமைக்கப்பட்ட பந் தல்கள், மின்இணைப்புகள் மற்றும் மின்விளக்குகள் போன்ற அனைத்தும் சிதிலமடைந்து எலும்புக்கூடுகளாய் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அணையின் இத்தகைய நிலையால் இங்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வரத்தயங்குகின்றனர். இதனால் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கி அணைப்பகுதி மர்ம பிரதேசமாக மாறியுள்ளதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆண்டியப்பனூர் அணையின் இத்தகைய பரிதாப நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து அணையை சீரமைத்தும், பூங்கா உட்பட சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்களை மேம்படுத்தியும் இதனை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்று உள்ளூர் அமைச்சர் நிலோபர் கபில் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஆண்டியப்பனூர் அணைப்பகுதியை சுற்றுலா தலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் அதற்காக ரூ.9.20 கோடி நிதியும் ஒதுக்கப்படும் என்று அறிவித்து நிதியும் ஒதுக்கப்பட்டது. அதன்படி, தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆண்டியப்பனூர் அணை பகுதியை மேம்படுத்த, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் வேண்டுகோள் அடிப்படையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அணைப்பகுதி சுற்றுலாத்தலமாக்கப்படும்.

மேலும் அணை பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குழந்தைகள் பூங்கா, நீரூற்றுகள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், அணைக்கான இணைப்பு சாலைகள், கழிவறைகள், அணையை சுற்றி பாதுகாப்பு வளைதடுப்புகள், பயணிகள் தங்கும் அறைகள், மணிமண்டபம் என 16 வகையான மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.9.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் 2018-19ம் நிதியாண்டில் செயல்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆண்டியப்பனூர் அணை 26 அடி உயரம் உள்ளது. இந்த அணையால் தேக்கப்படும் நீரால், அணையை சுற்றியுள்ள வாணியம்பாடி தாலுக்கா, திருப்பத்தூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள 5025 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என தமிழக அரசின் முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதற்கான பூர்வாங்கப்பணிகள் இன்னும் தொடங்கியபாடில்லை என இப்பகுதிமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, இனியாவது விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஆண்டியப்பனூர் அணையில் பராமரிப்புப்பணிகளை மேற்கொள்வதுடன், மதகுகள், அணையின் பாசனக்கால்வாய்கள் ஆகியவற்றை சீரமைத்து தர வேண்டும். மேலும், அணைக்கென நிரந்தர பொதுப்பணித்துறை அலுவலகம் அமைத்து அணையை தொடர்ந்து கண்காணிப்பில் வைக்க வேண்டும். மேலும் அரசு அறிவித்தபடி சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்களையும் அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

 • ruto-wins-presidency

  கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..

 • ragul-inde-15

  டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

 • independence-15

  75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்