SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குட்கா வழக்கு குற்றப்பத்திரிக்கையில் அமைச்சர், போலீஸ் உயரதிகாரிகள் பெயர் இல்லாதது சந்தேகமளிக்கிறது: மு.க.ஸ்டாலின் அறிக்கை

2018-11-17@ 18:33:30

சென்னை: குட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊழலின் பிதாமகன்களான குட்கா டைரியில் இடம்பெற்ற உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் பெயர் இல்லாதது சந்தேகமளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸடாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நள்ளிரவில் சி.பி.ஐ இயக்குநர் விநோதமான சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மாற்றப்பட்ட வழக்கு விசாரணை முடியும் வரை, சி.பி.ஐ பொறுப்பு இயக்குநர் எந்த முக்கியமான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், குட்கா வழக்கில் ஒரு முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையை அவசர அவசரமாகத் தாக்கல் செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. மத்திய அரசுக்கு 250 கோடிக்கு மேல் வரி இழப்பு ஏற்படுத்தி, 40 கோடிக்கு மேல் மாமூல் பெற்றதற்கான “குட்கா டைரி” கைப்பற்றப்பட்ட வழக்கில், 40 இடங்களுக்கும் மேல் சி.பி.ஐ அதிரடியாக சோதனை நடத்தியது. அதிமுக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அப்படியொரு மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், தாக்கல் செய்யப்பட்டுள்ள முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையில் கீழ்மட்ட அதிகாரிகளும், குட்கா கம்பெனியைச் சேர்ந்தவர்களும் மட்டுமே இடம்பெற்றிருந்தாலும், இந்த ஊழலின் “பிதாமகன்களாக” திகழ்ந்து, ஊரை ஏமாற்றி உலாவரும் உயர் பதவியில் இருப்பவர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை என்பது, விசாரணை திணறித் திசை மாறுகிறதோ என்ற நியாயமான சந்தேகத்தை அனைவருடைய மனதிலும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக குட்கா வழக்கை கவனித்து வந்த சி.பி.ஐ. உயரதிகாரி மாற்றப்பட்டுள்ள நிலையில், மின்னல் வேகத்தில் இப்படியொரு முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதன் அடிப்படை நோக்கம் அழுத்தமா அல்லது அரசியலா அல்லது மேலிடத்துக் கட்டளையா என்பதெல்லாம் கேள்விக்குறியாகியிருக்கிறது. குட்கா டைரியில் இடம்பெற்றுள்ள உயர் போலீஸ் அதிகாரிகளையும், அமைச்சரையும் விலக்கி விடுவிக்க இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது.

ஆகவே, குட்கா மாமூல் வழக்கு விசாரணை நியாயமான முறையில் சட்ட ரீதியாக நடைபெற வேண்டும் என்றும், டைரியில் இடம்பெற்றுள்ளவர்கள் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமில்லாமல் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன்பு நிறுத்தி, சி.பி.ஐ. என்ற மிக உயர்ந்த அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாத்திட வேண்டும் என்றும் சி.பி.ஐ. பொறுப்பு இயக்குநரைக் கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கு சுகாதாரக் கேடுகளையும், உயிருக்கு பேராபத்தையும் ஏற்படுத்தும் குட்கா விற்பனை “மாமூல்” விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதால், டி.ஜி.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கும் எண்ணத்தில் சி.பி.ஐ. விசாரணை திசை மாறி விடாமல், பிழையான பாதையில் சென்றுவிடாமல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எள்ளளவும் பிசகாமல் சி.பி.ஐ. மதிக்க வேண்டும். அதற்கு மாறாக உள்நோக்கத்தோடும் பெயரளவுக்கும் நடைபெற்றால் நியாயமான, சுதந்திரமான, எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் ஆட்படாத  விசாரணை கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகிட நேரிடும் என்றும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புயல் பாதித்த இடங்களை மு.க.ஸ்டாலின் பார்வை

தமிழகத்தில் நேற்று கரை கடந்த கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் சேதத்தை பார்வையிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னையில் இருந்து கிளம்பி புதுச்சேரி வந்தார். இரவு அங்கு தங்கிய அவர் இன்று காலை 9.45 மணியளவில் காரில் கிளம்பி கடலூர், சிதம்பரம் வழியாக நாகை மாவட்டம் கொள்ளிடம் வந்தார். பின்னர் ஸ்டாலின் தரங்கம்பாடி புறப்பட்டு சென்றார். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். மீனவர்களுக்கும் ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து காரைக்கால் வழியாக நாகை அக்கரைப்பேட்டை வந்தார். அங்கும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மீனவ மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மு.க.ஸ்டாலின் வேதாரண்யம் புறப்பட்டு சென்றார். ஸ்டாலினுடன், மாவட்ட செயலாளர்கள் நிவேதா முருகன், கவுதமன், முன்னாள் அமைச்சர் மதிவாணன் மற்றும் பலர் வந்திருந்தனர். முன்னதாக நேற்று இரவு புதுச்சேரி தனியார் ஓட்டலில் தங்கியிருந்த மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்தார். புயலால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விபரங்களை மு.க.ஸ்டாலினிடம் நாராயணசாமி எடுத்துக் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்