SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆக்கிரமிப்பாளர்களை கண்டுகொள்ளாத அதிகாரிகள் கேரளாவில் 4 வழி சாலையாகிறது, தமிழகத்தில் 40 அடியும் மிஞ்சவில்லை: திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையின் அவலம்

2018-07-15@ 00:23:14

நாகர்கோவில்: திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை கேரள மாநில பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 4 வழி சாலையாக மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் ஆக்ரமிக்கப்பட்டு 40 அடி கூட  மிஞ்சாமல் சுருங்கியுள்ளது.
 தேசிய நெடுஞ்சாலை 47ஐ அகலப்படுத்தி 4 வழிப்பாதையாக்கும் நடவடிக்கைகள் கேரளாவில் தொடங்கியுள்ளது. சேலத்தில் தொடங்கி கோவை, பாலக்காடு, எர்ணாகுளம் வழியாக வருகின்ற இந்த சாலையில் திருவனந்தபுரம்  மற்றும் களியக்காவிளை இடையே சாலை விரிவாக்க பணிகள் மூன்று கட்டமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில் திருவனந்தபுரத்தில் கரமனை முதல் பிராவச்சம்பலம் வரை முதல்கட்ட பணிகள் கடந்த ஆட்சி  காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. பிராவச்சம்பலம் முதல் பாலராமபுரம் வழிமுக்கு வரை வரை இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மூன்றாம் கட்டமாக வழிமுக்கு முதல் குமரி மாவட்ட எல்லையான  களியக்காவிளை வரை விரிவாக்கம் செய்யப்படும். இரண்டாம் கட்டத்தில் பாலராமபுரம் முதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பாலராமபுரம் கொடிநடை ஜங்ஷன் முதல் களியக்காவிளை வரை பாதையின் இரு வசங்களிலும் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட இருக்கிறது. இதற்காக  இந்த பகுதிகளில் நிலங்கள் பதிவு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைக்கு மட்டும் 30.2 மீட்டர் (99.08 அடி) அளவில் வடிவமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இவை தவிர கூடுதல் இடங்கள் இரு புறங்களிலும்  கையகப்படுத்தும் பணிகளும் நடைபெற உள்ளது. ஆனால் விரிவாக்க பணிகள் நடைபெறுகின்ற ஒரே தேசிய நெடுஞ்சாலையின்  மறுபுறமான குமரி மாவட்ட பகுதியில் பல இடங்களிலும் 40 அடி அகலம் கூட தேசிய  நெடுஞ்சாலைக்கு இல்லாத நிலை காணப்படுகிறது. இவை விரிவாக்கம் செய்ய இதுவரை தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் திட்டம் ஏதும் இல்லை.

 120 அடி அகலம் கொண்ட இந்த சாலை கன்னியாகுமரி முதல் கொட்டாரக்கரை வரை திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் ராஜபாதையாக இருந்தது. பின்னர் இது சர்.சி.பி.ராமசாமி ஐயர் காலத்தில் காங்கிரிட் சாலையாக  மாற்றப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து சாலை வழியாக  கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. பல்வேறு அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டபோதிலும் ஆக்ரமிப்பு அகற்றம் என்பது பெயரளவில் மட்டுமே இருந்து  வருகிறது. சாலையோரங்களில் உள்ள பழக்கடைகள், பெட்டிகடைகளின் முன்பக்க போர்டுகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றிவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டதாக அதிகாரிகள் கணக்கு காண்பிக்கின்றனர்.

 தற்போது உள்ள நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து களியக்காவிளை வரை சாலை பணிகள் முழுவதுமாக நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்த சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் குமரி பகுதிக்குள் வரும்  போது  கிராமச்சாலைக்குள் புகுந்துவிட்டது போன்று உணருகின்ற நிலை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. சாலையின் இரு பகுதிகளிலும் ஆக்ரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் ஏதும் அகற்றாததால் தற்போது கடும் வாகன  நெருக்கடியில் மாவட்டம் சிக்கி தவித்துவருகின்ற நிலை உள்ளது. வரும் ஆண்டுகளில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேம்பாலங்கள் உதவும் என்ற அடிப்படையில் பார்வதிபுரம், மார்த்தாண்டம் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றது. ஆனால் சாலைகளில் உள்ள  ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் பாலங்களால் பயன் ஏற்படபோவது இல்லை என்கின்றனர் வாகன ஓட்டிகள். தேசிய நெடுஞ்சாலையில் திருவனந்தபுரத்தில் இருந்து களியக்காவிளை வரை 4 வழி சாலையாக அகலப்படுத்துகின்ற  நிலையில் தொடர்ந்து நாகர்கோவில் வரையிலேனும் அதே வடிவில் அகலப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 04-12-2020

  04-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்