SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிலை திருட்டு விவகாரம் பேரவையில் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி : நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் விளக்கம்

2018-06-30@ 01:57:37

சென்னை: சிலை தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மானிக்கவேலுக்கு அரசு ஒத்துழைக்கவில்லை?, தலைமை செயலாளர், டிஜிபிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது ஏன்?, சிலை கடத்தல் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக அரசு ஏற்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் சிலை கடத்தல் பிரிவினுடைய ஐ.ஜி. ஆக இருந்த பொன். மாணிக்கவேலை இந்த அரசு இடமாற்றம் செய்தது. உடனடியாக சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு சிலை தடுப்பு பிரிவு விசாரணையை பொன்.மாணிக்கவேலிடமே மீண்டும் ஒப்படைத்தது. அவருக்கு தனி முகாம் அலுவலகம் ஒன்றை திருச்சியிலே அமைத்து, தேவையான போலீஸ் அதிகாரிகள் அளிக்க வேண்டும்  என்று தெளிவாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதுமட்டுமல்ல, ஒரு வாரத்திற்குள் மேற்கண்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அவர்களுக்கு முதல் எச்சரிக்கையாக 21-7-2017 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், அதை உடனடியாக ஏற்று நியமிக்காமல், அரசு என்ன செய்தது என்று கேட்டால் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்து, அது  உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடியும் செய்யப்பட்டது. மீண்டும் 5-9-2017 அன்று ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி., ஆக நியமிக்காமல் தொடர்ந்து ஏன் தாமதம்? என்று காவல்துறை டி.ஜி.பி.,க்கு இரண்டாவது எச்சரிக்கை விடுத்தது உயர் நீதிமன்றம்.

பிறகு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் சிலை தடுப்பு பிரிவிற்கு நியமிக்கப்பட்டு தமிழக காவல்துறை டி.ஜி.பி உத்தரவிட்டார். ஆனால், உத்தரவிட்ட நேரத்தில் 19 சிலை தடுப்பு வழக்குகள் மட்டுமே அவரிடத்திலே கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் சிலை தடுப்பு பிரிவில் உள்ள 531 வழக்குகளையும் ஏன் ஐ.ஜி.யிடம் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்,அடுத்தடுத்து நான்கு  முறை எச்சரிக்கை விடுத்தது. தலைமை செயலாளருக்கும், டி.ஜி.பிக்கும் எச்சரிக்கை விடுக்கிறது என்று சொன்னால் அதிகாரிகளுக்கு, உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கத் தெரியாதா? அல்லது அரசே திட்டமிட்டு சிலை கடத்தல் விவகாரத்தில் தடைகளை ஏற்படுத்துகிறதா? என்ற அந்த சந்தேகம்தான் இப்பொழுது எழுந்திருக்கிறது. ராமசாமி (காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர்): திருடுபோன சிலைகளை மீட்டு கொண்டு வருவது அரசின் கடமை. அந்த போலீஸ் அதிகாரிகளுக்கு உரிய வசதி செய்து தர வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பொன்.மாணிக்கவேல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் காவல் துறை தலைவர் திருச்சி சிறப்பு முகாம் அலுவலகத்திற்கு கூடுதலாக கேட்ட 7 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களும், 10 காவல் துணை கண்காணிப்பாளர்களும், 18 ஆய்வாளர்களும், 50 உதவி ஆய்வாளர்களும், 140 தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 325 அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டனர்.

காவல்துறை தலைவர் பொன்.மாணிக்கவேல் இடம் மாற்றத்தை பற்றி சொன்னார்கள். அவர் ஐந்தரை ஆண்டு காலம் அதே துறையிலே இருந்தார். பணியிடம் மாற்றுவது எல்லா ஆட்சியிலும் நடைபெறும் ஒரு சம்பவம். நீண்ட நாட்கள் பணியிலே இருந்ததால், பணி மாறுதல் செய்வார்கள். அந்த அடிப்படையிலே தான் அவர் பணிமாற்றம் செய்யப்பட்டாரே தவிர வேறு ஒன்றும் இல்லை. களவு போன சிலைகளை கண்டுபிடிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மு.க.ஸ்டாலின்: முதன்முதலில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி ஐ.ஜி.க்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என்று சொன்னால் தலைமை செயலாளரை சம்மன் செய்ய வேண்டியிருக்கும் என்று நான்காவது எச்சரிக்கையாக செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, நீதிமன்றத்தின் அனுமதியின்றி ஐ.ஜி.யின் சிலை தடுப்பு பிரிவில் உள்ள அதிகாரிகளை மாற்றினால் டி.ஜி.பியை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். முதல்வர் எடப்பாடி: நீதிமன்ற உத்தரவின்படி, பொன்.மாணிக்கவேல் என்ன என்ன கேட்டார் என்ற விவரம் முழுவதும் நான் சொல்லிவிட்டேன். அவர் கேட்டதை எல்லாம் கொடுத்துவிட்டோம். அந்த சிலை தடுப்பு பிரிவிலே கூடுதலாக காவலர்களை கேட்டார்கள், கொடுத்துவிட்டோம். வாகனங்கள் கேட்டார்கள், கொடுத்து விட்டோம். ஆகவே, எல்லாமே கொடுத்துவிட்டோம்,

மு.க.ஸ்டாலின்: முதல்வர் இவ்வளவு விளக்கம் சொல்லுகிறார். ஆனால், நீதிமன்றத்திலே சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் இந்த அரசு ஒத்துழைப்பு தரவில்லை. தேவைப்பட்டால் தலைமை செயலாளரையும் டி.ஜி.பியையும், சம்மன் செய்து அழைக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்று சொல்லவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? இவ்வளவு செய்திருக்கிறது உண்மை என்று சொன்னால், அதை நீதிமன்றத்திலே அரசு தரப்பினுடைய வழக்கறிஞர்கள் சொல்லி வாதிட்டிருக்க வேண்டுமே. முதல்வர் எடப்பாடி: உங்களுடைய ஆட்சி காலத்தை விட, அதிமுக ஆட்சியில்தான் அதிகமான சிலை கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.  இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்