SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கந்துவட்டி தடுப்பு சட்டத்தை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்: அரிபரந்தாமன், ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி

2017-10-30@ 00:44:55

வங்கிகள் மூலமாக கடன் பெறுவதில் மக்களிடம் இன்னும் சிரமம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கடன் பெற சென்றால் அந்த ஆவணங்களை கொண்டு வா, இந்த ஆவணங்களை கொண்டு வா என்று அழைக்கழிக்கப்படுகிறார்கள். இதனால் மக்கள் வங்கிகளை தவிர்த்து, எந்த தேவையாக இருந்தாலும் வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கும் நிலை உருவாகி உள்ளது. இதனைப் பயன்படுத்தும் கும்பல்  அப்பாவி மக்களிடம் மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, நாள் வட்டி, வார வட்டி, ஒரு மணி நேரத்திற்கு வட்டி என  பல்வேறு வகைகளில் புதுசுபுதுசாக கொண்டு வந்து வட்டியை வசூலிக்கின்றனர்.எளிதாக பணம் கிடைக்கிறதே என்று வட்டியை பொருட்படுத்தாமல் சிலர் பணம் வாங்குகின்றனர். ஆனால் அவர்கள் கடனுக்கு மேல் பணம் கொடுத்தும் கடன் அடைந்தபாடில்லை. இதனால் பாதிக்கப்படுபவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதனை தடுக்கவே 2003ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி கந்து வட்டித் தடை சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளி என ஒருவர் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனையும், ₹30 ஆயிரம் அபராதமும் விதிக்க முடியும். கடன் வாங்கியவரோ, அவரது குடும்பத்தினரோ தற்கொலை செய்து கொண்டால் அந்த சம்பவத்துக்கு முன், அவர்களுக்கு தொல்லை கொடுக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், கடன் கொடுத்தவர், தற்கொலைக்கு தூண்டியதாக கருத முடியும். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால், இச்சட்டத்தை அரசு ஒழுங்காக அமல்படுத்தவில்லை. அரசு இயந்திரங்கள் இதனை செயல்படுத்தவில்லை. சொல்லப் போனால் சட்டம் ஒன்றை இயற்றுவதோடு சரி ஆனால் செயல்படுத்துவது என்பது அரிதாக இருந்து வருகிறது. இதே போல நீட் உள்ளிட்ட எந்த சட்டமாக இருந்தாலும் அமல்படுத்துவது இல்லை. சட்டத்தை அமல்படுத்த நீதிமன்றங்கள் மூலமாக நிர்பந்தப்படுத்த வேண்டியது உள்ளது. கந்து வட்டி சட்டத்தை அமல்படுத்தியிருந்தால் திருநெல்வேலியில் ஒரு குடும்பமே தீக்குளித்து பலியாகியிருக்காது. கந்து வட்டி கொடுமை தொடர்பாக ஒருவர் புகார் கொடுத்தால் போலீசாரிடமோ, அதிகாரிகள் வாயிலாக எந்தவித தீர்வும் கிடைப்பதில்லை.

அவர்களுக்கு நிவாரணமும் கிடைப்பதில்லை. நெல்லையில் தீக்குளித்து இறந்தவர்களின் உறவினர்கள் கந்து வட்டி கொடுமை தொடர்பாக போலீசார், மாவட்ட கலெக்டரிடம் எல்லாம் புகார் மற்றும் மனு என்று பலமுறை கொடுத்ததாக கூறுகின்றனர். இது போன்று மனு கொடுத்து நடவடிக்கை எடுக்காத போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்தால் இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். பணம் இருப்பவர்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து நீதி காண்கிறார்கள். அப்படி காசு இல்லாதவர்கள் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண முடியாத நிலை தான் இருந்து வருகிறது. கந்து வட்டி தடுப்பு சட்டத்தை கடுமையாக கடைப்பிடிக்காத வரையில் இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaliand-monkey

  தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

 • light-show-28

  பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்