SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் ஐஎஸ் இயக்க ஆதரவாளர் கைது

2017-09-19@ 00:43:12

சென்னை: சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு  தமிழகத்தில் இருந்து ஆள் சேர்த்தல், நிதி திரட்டி தருவது, ஆதரவாக பிரசாரத்தில் சிலர் ஈடுபடுவதாக தேசிய புலனாய்வு முகமை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ரகசியமாக விசாரணை செய்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், அந்த அமைப்புக்கு ஆள் சேர்த்ததாகவும், நிதி சேகரித்து கொடுத்ததாகவும் சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்ற சலாவூதீன் (24) என்பவரை  டெல்லியில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை  போலீசார் கைது செய்தனர்.  இவர் இந்த வழக்கில் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் அவரை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செந்தூர்பாண்டியன் முன் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீஸ் தரப்பில் ஆர்.சி. 3/2017 என்ற  வழக்கு எண்ணில் பிரிவுகள் 15, 16, 17, 20, 29 கீழ் சாகுல் ஹமீதை கைது செய்துள்ளனர்.  இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் முதல் குற்றவாளியாக காஜா பஹ்ரூதின் என்பவர் காட்டப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.  மேலும் அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி தனி கிளை சிறையில் உள்ள காஜா மொய்தீன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சாகுல் ஹமீது மற்றும் காஜா மொய்தீன் ஆகிய இருவரையும்  தேசிய புலனாய்வு முகமை போலீசார், கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை வருகிறது.

இந்நிலையில் இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பிள்ளை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக, நிதி திரட்டியதாக, ஆதரவாக செயல்பட்டதாக சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரை டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் இது தொடர்பாக சிரியா நாட்டிற்கு சென்று அங்கு ரகசிய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் அம்பத்தூர் இந்து முன்னணி  பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில்  காஜா மொய்தீன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதாக அறியப்பட்டுள்ளது. அவர் இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் புலனாய்வு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை கொச்சின் தேசிய புலனாய்வு முகமை போலீசார் விசாரிப்பார்கள்.

சாகுல் ஹமீது மற்றும் காஜா மொய்தீன் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர் தரப்பிலிருந்து கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது. நீதிபதியின் உத்தரவுக்குப்பின் சாகுல் ஹமீது, காஜா மொய்தீன் இருவரையும் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் டெல்லி அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்த உள்ளனர். இவர்களை முழுமையாக விசாரித்த பிறகுதான் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்கள் பதுங்கி இருக்குமிடம்,  இவர்களது தலைவர் யார்? இவர்களை இயக்குபவர் யார் இவர்களுக்கு நிதி உதவி எப்படி வருகிறது? உள்ளிட்ட  பல்வேறு தகவல்கள் தெரியவரும்’’ என்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்