SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிக ஜிஎஸ்டி வரி விதித்தால் சினிமாவை விட்டு விலகுவேன் : கமல் ஆவேசம்

2017-06-03@ 00:38:00

சென்னை : இந்திய திரைப்படத் தொழிலுக்கு மத்திய அரசு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதனால் திரைப்படத் தொழில் அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ்த் திரைப்படத் துறையினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இன்று டெல்லியில் ஜிஎஸ்டி வரி சம்பந்தமாக நிதியமைச்சர் உள்பட பல்வேறு துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் பங்கேற்ற அவசரக் கூட்டம் பிலிம் சேம்பர் வளாகத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் பரபரப்பாகப் பேசினார். அது வருமாறு: கடந்த 4 வருடங்களாக சினிமாவிலுள்ள பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பு, தூக்குத் தண்டனையை விட மிகப் பெரிய தண்டனை. வரி கட்ட மாட்டோம் என்று சொல்லவில்லை. இவ்வளவு அதிகமாக வரி விதித்தால், அதை எங்களால் கட்ட இயலாது என்பதைத்தான் வலியுறுத்துகிறோம். சினிமா என்பது சூதாட்டம் அல்ல. கலை. இதை பாவச்செயலில் சேர்க்கக்கூடாது. ஹாலிவுட் மற்றும் இந்திப் படங்களுக்கு நிகராக தமிழ் சினிமாவுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கக்கூடாது. எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று நல்லது செய்வார்கள் என்று நம்புகிறோம்.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் சினிமாவில் திருட்டு விசிடி புழக்கம் அதிகரிக்கும். நாடு முழுக்க கருப்புப் பணம் அதிகரிக்கும். வரி விதிப்பு அதிகரித்தால், நான் உள்பட அனைத்துக் கலைஞர்களும் பாதிக்கப்படுவோம். வேலைவாய்ப்புகள் குறையும். இங்கென்ன மேற்கிந்தியக் கம்பெனியா நடக்கிறது? வரிச்சுமை அதிகமானால், சினிமாவை விட்டு விலகுவதைத் தவிர வேறுவழி தெரியவில்லை. ஒருவேளை இந்திப் படவுலகம் இந்த வரி விதிப்பை ஏற்றுக்கொண்டால் கூட, தமிழ் சினிமாவுலகைச் சேர்ந்த நாங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டோம். வரி கட்டத் தயாராக இருக்கிறோம். நானும் ஒழுங்காக வருமான வரி கட்டி வருகிறேன். இந்தியா முழுவதும் ஒரு வருடத்துக்கு 2,100 படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதில் 400 இந்திப் படங்கள் என்று வைத்துக்கொள்வோம். பாக்கி படங்கள் எல்லாமே பிராந்திய மொழிப் படங்கள்தான். எனவே, அந்தந்த மாநிலத்தின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பிராந்திய மொழிப் படங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பைக் குறைக்க வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

பிலிம் சேம்பர் தலைவர் ஆனந்தா எல்.சுரேஷ் கூறுகையில், ‘ஜிஎஸ்டி வரி செலுத்தத் தயாராக இருக்கிறோம். படங்களை விற்கும்போது 12ல் இருந்து 5 சதவீதமாகவும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 18ல் இருந்து 12 சதவீதமாகவும், கேளிக்கை வரியை 28ல் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்க வேண்டும் என்று கேட்கிறோம்’ என்றார். ரவி கொட்டாரக்கரா, அபிராமி ராமநாதன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன், காட்ரகட்ட பிரசாத், செல்வின்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

* ஜிஎஸ்டி வரி 5, 12,18,28 என்று நான்கு கட்டமாக விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
* சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் என்று திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 30-09-2020

  30-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • formars29

  வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

 • coronadeath29

  கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

 • thee29

  பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

 • vadothara29

  குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்