SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

‘நிலம்’ புயலில் சிக்கி தரை தட்டிய கப்பலின் தரச்சான்று காலாவதி

2012-11-05@ 02:06:27

சென்னை : பிரதிபா காவேரி கப்பலின் தரச்சான்று காலாவதி ஆகியிருந்ததால், துறைமுக எல்லையிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் வீசிய நிலம் புயலில் கப்பல் சிக்கி தரை தட்டியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. வங்க கடலில் உருவான நிலம் புயலால், சென்னை துறைமுகம் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த ‘பிரதிபா காவேரி‘ சரக்கு கப்பல் பெசன்ட் நகர் அருகே தரை தட்டியது. இந்த விபத்தில் கப்பலில் இருந்து தப்ப முயற்சித்தபோது, 3 இன்ஜினியர்கள், 3 மாலுமிகள் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். கப்பலில் இருந்த 31 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சரக்கு கப்பல் கடற்கரையோரமாக மணல் பரப்பிலேயே நகர்ந்து மெரினா கடற்கரை அருகே வந்துவிட்டது.

இந்நிலையில், மத்திய கப்பல் போக்குவரத்துறை இயக்குனர் கவுதம் சட்டர்ஜி தலைமையிலான அதிகாரிகள், கப்பல் விபத்து குறித்த விசாரணையை, ராஜாஜி சாலையில் உள்ள கப்பல் சிப்பந்திகள் விடுதியில் நேற்று முன்தினம் தொடங்கினர். தரை தட்டிய கப்பலில் இருந்து உயிர் பிழைத்த கேப்டன் உட்பட அனைவரும் ஒவ்வொருவராக அதிகாரிகள் முன்பு ஆஜராகி நடந்த சம்பவங்கள் பற்றி தெரிவித்து வருகின்றனர். சென்னை துறைமுக அதிகாரிகள், கடலோர காவல் படையினர், கப்பல் நிர்வாகத்தினர் மற்றும் கப்பல் ஏஜென்ட் ஆகியோரிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது சுமார் ஒருமாதம் நடைபெறும். அதன் பின், விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

பிரதிபா காவேரி கப்பல் அக்டோபர் 8ம் தேதி சென்னை துறைமுகத்துக்கு வந்தது. ஆனால், கப்பலுக்கு வழங்கப்பட்டிருந்த தரச்சான்று அக்டோபர் 1ம் தேதியுடன் காலாவதியாகி இருந்தது. அதனால் துறைமுக அதிகாரிகள், கப்பலை உள்ளே அனுமதிக்காமல், துறைமுக எல்லையிலேயே நிற்க வைத்தனர். துறைமுக எல்லையில் கப்பல் நின்றிருந்த காலங்களில் அதிலிருந்த ஊழியர்களுக்கு தேவையான உணவு, தண்ணீரை வழங்க நிர்வாகம் மற்றும் சென்னையில் உள்ள கப்பல் ஏஜென்ட் நடவடிக்கை எடுக்கவில்லை. கப்பலை தொடர்ந்து இயக்குவதற்கு தேவையான டீசலை வழங்காததும், துறைமுகத்துக்குள் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்காததும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில்தான் அந்த கப்பல் நிலம் புயலில் சிக்கியுள்ளது.

பொதுமக்கள் வேண்டுகோள்: மெரினாவில் நிற்கும் கப்பலை பார்க்க சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். 5வது நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கப்பலை பார்க்க வந்தனர். இதனால், மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குடும்பம் குடும்பமாக கப்பல் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், மெரினா கடற்கரைக்கு இந்த கப்பல் மேலும் அழகு சேர்க்கிறது. அதனால், மெரினாவின் காட்சி பொருளாகவும், நினைவாகவும் கப்பலை இங்கேயே நிறுத்த வேண்டும்’’ என்றனர்.

அப்புறப்படுத்த வேண்டும் மீனவர்கள் கோரிக்கை

கப்பல் தரை தட்டி நிற்பதால், பட்டினப்பாக்கம் மற்றும் நொச்சிக்குப்பத்தை சேர்ந்த மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், கப்பல் தரை தட்டி நிற்பதால், கடல் சீற்றம் மற்றும் கடல் அலையின் வேகத்தை அறிய முடியவில்லை. மீன்பிடி படகுகளை அப்பகுதியில் சரியாக இயக்க முடியவில்லை. வலைகள் கப்பலில் சிக்குமோ என்ற பயம் உள்ளது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கப்பல் நிற்பதே தெரியவில்லை. அதனால், தரை தட்டிய கப்பலை உடனடியாக அகற்றி துறைமுகத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்’’ என்றனர்.

அதிகாரிகள் அதிரடி ஆய்வு

மெரினா கடற்கரை அருகே தரை தட்டி நிற்கும் பிரதிபா காவேரி கப்பலை கடலுக்குள் இழுத்து செல்ல இழுவை கப்பல்கள் துறைமுகத்துக்கு வந்துள்ளது. மும்பையை சேர்ந்த விஸ்வ கர்மா நிறுவனத்தின் மீட்பு குழுவினர், சிங்கப்பூர் சிறப்பு தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் மற்றும் கப்பல் துறை அதிகாரிகள் தரை தட்டிய கப்பலை நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, கப்பல் எவ்வளவு ஆழத்தில் நிற்கிறது.

கடற்கரைக்கும் கப்பலுக்கும் உள்ள தூரம், எந்த அளவுக்கு கப்பல் மணலில் புதைந்துள்ளது. கப்பலை கடலுக்குள் இழுக்க முடியுமா, கடல் அலையின் சீற்றம் ஆகியவை குறித்த ஆய்வுகளை அதிகாரிகள் நடத்தினர். இந்த ஆய்வு இன்னும் 2 நாள் நடைபெற உள்ளது. சென்னை, எண்ணூர், விசாக பட்டினம் மற்றும் கொச்சி துறைமுகங்களில் இருந்து இழுவை கப்பல்கள் வரவழைக்கப்பட உள்ளன. கப்பலை கடலுக்குள் இழுக்கும் பணி வரும் 8ம் தேதி தொடங்க உள்ளது.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்