மதுரையில் மேலும் ஒரு அல்கொய்தா தீவிரவாதி கைது: தென் மாநிலங்களில் குண்டு வைக்க சதி திட்டம்
2016-11-30@ 06:41:45

மதுரை: தென்மாநிலங்களில் 5 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய அல்கொய்தா தீவிரவாதிகள் 4 பேர் கைதான நிலையில், நேற்று மேலும் ஒருவர் மதுரையில் கைதானார். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தென் மாநிலங்களில் குண்டு வெடிப்பு நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களின் கோர்ட் வளாகங்கள் உட்பட 5 இடங்களில் பயங்கர குண்டு வெடிப்புகள் நடந்தன. டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையில், மதுரையை மையமாகக் கொண்ட ஒரு தீவிரவாத கும்பல் குண்டுகளை வெடிக்க செய்தது தெரிந்தது. இதன்பேரில் கடந்த 3 நாட்களாக தேசிய புலனாய்வுப்படையினர் (என்ஐஏ) மதுரையில் முகாமிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இதில், மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் 4வது தெருவைச் சேர்ந்த அப்பாஸ் அலி (27), மதுரை புதூர் விஸ்வநாத நகரை சேர்ந்த சம்சும் கரீம் ராஜா (26) ஆகியோர் நேற்று முன்தினம் கைதாகினர். இவர்களது தகவலின்பேரில் தீவிரவாத கும்பலின் தலைவராக செயல்பட்ட மதுரை கரீம்ஷா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சுலைமான் (23) என்பவரையும் அன்றே, சென்னையில் தேசிய புலனாய்வுப்படையினர் கைது செய்தனர். இதுதவிர மதுரை புதூரை சேர்ந்த முகம்மது அயூப் (25) என்பவரும் சிக்கினார். அப்பாஸ் அலி, சம்சும் கரீம் ராஜா மற்றும் முகம்மது அய்யூப் ஆகியோரை மதுரை அருகே இடையபட்டி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமில் வைத்து தேசிய புலனாய்வுப்படையினர் தொடர் விசாரணை நடத்தினர். இதில், குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருப்பதாக முகம்மது அய்யூப் தெரிவித்த தகவலின்பேரில், மதுரை நெல்பேட்டை கீழமாரட் வீதியைச் சேர்ந்த சம்சுதீன் (25) என்பவரை நேற்று கைது செய்தனர்.
இவ்வழக்கில் மதுரையில் கைதான 4 பேரும் மேலூர் கோர்ட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். மேல் விசாரணைக்காக பெங்களூர் தேசிய புலனாய்வு பிரிவு கோர்ட்டில் ஆஜர்படுத்த, இவர்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர். மதுரை மாவட்டம், மேலூர் குற்றவியல் கோர்ட்டிற்கு, கைதான 4 தீவிரவாதிகளும் நேற்று மாலை 3.30 மணிக்கு கொண்டு வரப்பட்டனர். முன்னதாக வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய் விஜய் வரவழைக்கப்பட்டு கோர்ட் வளாகம் முழுவதும் சோதனையிடப்பட்டது. மத்திய குற்றப்புலனாய்வு எஸ்பி பிரதீபா அம்பேத்கர் தலைமையில் டெல்லி தேசிய புலனாய்வுப்படையினர், கைதான நால்வரையும் மாஜிஸ்திரேட் செல்வகுமார் முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் நால்வரையும் டிச. 1ம் தேதிக்குள் பெங்களூரு தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
கைதானவர்களின் பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் மல்க கோர்ட் வாசலில் காத்திருந்தனர். பொதுமக்களும் பெருமளவில் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கைதானவர்கள் நால்வரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் ஆவணங்கள், வரைபடங்கள் போன்றவற்றை அட்டைப்பெட்டியில் வைத்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் தேசிய பாதுகாப்பு படையினர் சீல் வைத்தனர். கிளம்புவதற்கு முன்னதாக, கைதானவர்களின் தாய்மார்கள் மட்டும் தங்கள் பிள்ளைகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது மகனைப் பார்த்து பேசிவிட்டு வந்த ஒரு தாய், கோர்ட் வளாகத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று மாலை 3.30 மணிக்கு கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்ட 4 தீவிரவாதிகளும், மாலை 6.30 மணிக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிற்குப்பிறகு, காரில் ஏற்றி பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பாதுகாப்பு கருதியே மதுரையை தவிர்த்து மேலூர் கோர்ட்டில் 4 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்’ என்றார். முன்னதாக பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், மதுரை மற்றும் சென்னையில் கைதான தீவிரவாத கும்பல், கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி நவ. 1ம் தேதி வரை ஆந்திர மாநிலம், சித்தூர் மற்றும் நெல்லூர், கேரள மாநிலம், கொல்லம் மற்றும் மலப்புரம், கர்நாடக மாநிலம் மைசூரு ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்ற வளாகப் பகுதிகளில் 5 இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளனர்.
இச்சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட குக்கர், பேட்டரி, வெடிபொருட்களை மதுரையில் தயாரித்து, 4 மாநிலங்களுக்கும் எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக மதுரை மேலூர், சிவகாசி பகுதிகளில் வெடி மருந்துகள், பொருட்கள் வாங்கி தயாரித்துள்ளனர். மேலும், மதுரையில் 30 இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி முகாம்களையும் நடத்தியுள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் செல்போன்களை கொடுத்தால், பின்னர் போலீஸ் விசாரணையில் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். அதனால், அவர்கள் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தினால், அவர்கள் குண்டு வைக்கும் இடம் வரை செல்கிறார்களா என்பதை எளிதாக சென்னையில் உள்ள சுலைமான் கண்காணிப்பார். பின்னர் குண்டு வைத்து விட்டு திரும்பி வரும்வரையும் ஜிபிஎஸ் மூலமே அவர் கண்காணிப்பார்.
ஒருவேளை போலீஸ் பிடித்து விட்டால், மற்ற தீவிரவாதிகள் தப்புவதற்கும் எளிதாக இருக்கும் என்பதற்காகவே இந்த திட்டத்தை அவர்கள் செயல்படுத்தி வந்தனர் என்றும் தெரியவந்தது. மேலும் டிசம்பருக்குள் தென் மாநிலங்களில் பல இடங்களில் குண்டு வெடிப்பை நிகழ்த்தவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்கான வரைபடங்கள் தற்போது போலீசிடம் சிக்கியுள்ளன. இது குறித்தும் பிடிபட்ட தீவிரவாதிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதால், தமிழகத்தில் தேசிய புலனாய்வு படையினர் தங்கி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் நாள் இரவு துவங்கி மறுநாள் மாலை வரை விசாரணை: மதுரையில் கைதான வெடிகுண்டு தீவிரவாதிகள் நேற்று முன்தினம் மதுரை - சிவகங்கை மாவட்ட எல்லையில் இடையபட்டியில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இங்கு நடந்த விசாரணை குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தீவிரவாதிகளுக்கு ேவறு நபர்களால் ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த முகாமை தேசிய புலனாய்வு படையினர் தேர்வு செய்தனர். தனித்தனியாக தீவிரவாதிகள் ஒவ்வொருவரிடமும் நேற்று முன்தினம் இரவு துவங்கி, நேற்று மாலை 3 மணி வரை துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல முக்கியத்தகவல்கள் கிடைத்தன. சேகரித்தவற்றை ஆவணங்களாக தயாரித்து, உடனுக்குடன் பெங்களூருக்கும், டெல்லி தலைமையகத்திற்கும் புலனாய்வுப்படையினர் அனுப்பினர்,’’ என்றார்.
150 சிம்கார்டுகள்
மதுரை, சென்னையில் கைதானவர்கள் போலி பெயர்களில் 150 சிம் கார்டுகள் வரை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. ‘சமூகப்போராளிகள்’ பெயரில் இவர்கள் பேஸ்புக்கில் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களது முகநூல் பக்கங்கள், சிம் கார்டுகளை ‘ட்ரேஸ்’ செய்து, அதன் அடிப்படையில் இவர்களது பல்வேறு தொடர்புகளை தேசிய புலனாய்வுப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கண்காணிப்பில் 548 பேர்
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தென்மாநிலங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது. மதுரையை மையமாக வைத்தே தீவிரவாத கும்பல் செயல்பட்டிருக்கிறது. எனவே, மதுரையில் இன்னும் சில நாட்கள் தேசிய புலனாய்வுப்படையினர் முகாமிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளனர்.
கைதான தீவிரவாதிகளை காவலில் எடுத்து விசாரிக்கும்போது, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது, நடந்த பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும். குண்டு வெடிப்புகளுக்கான செலவுக்கு பணத்தை சப்ளை செய்தவர்கள் யார்? அல்கொய்தா தீவிரவாத அமைப்பிற்கும், கைதானவர்களுக்கும் உள்ள தொடர்பு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட 22 தலைவர்களை கொல்ல திட்டமிட்டது குறித்த பல்வேறு தகவல்களும் வெளிவரும். தமிழகம் முழுவதும் 548 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத தொடர்புடைய பலரும் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்தடுத்து பலர் கைதாவர்,’’ என்றார்.
நூலகம் மூலம் தீவிரவாத பிரசாரம்
கைதானவர்களில் ஒருவரான அப்பாஸ் அலி, 8ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, பெயின்டராக இருந்தார். ‘தாருல் இல்ம்’ என்ற பெயரில் இவர் நூலகம் வைத்து நடத்தி வந்ததும், இதன் மூலம் தீவிரவாத பிரசாரப்பணிகளில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. கைதான சம்சும் கரீம் ராஜா, பிகாம் பட்டதாரி. கோழிக்கடை வைத்துள்ளார். கைதான முகம்மது அய்யூப்பிற்கு திருமணமாகி ஒரு வாரமே ஆகிறது. பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், காது கேட்கும் கருவி விற்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சுலைமான் (23), சென்னையில் கைது செய்யப்பட்டார். கைதானவர்கள் பணியாற்றும் இடங்களிலும், வீடுகள் உள்ள பகுதிகளிலும் கடந்த 2 நாட்கள் கண்காணித்த பிறகே, தேசிய புலனாய்வுப்படையினர் அதிரடியாக இவர்களை அடுத்தடுத்து கைது செய்துள்ளனர்.
பாதுகாப்பு வளையத்தில் இந்தோ - திபெத் முகாம்
தீவிரவாதிகளிடம் விசாரணை நடந்த இடையபட்டி இந்தோ -திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீஸ் முகாமிற்குள், உள்ளூர் போலீசார், பத்திரிகையாளர்கள் என யாரும் அரை கிலோ மீட்டருக்கு முன்பே அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பிற்கு வந்திருந்த ஒத்தக்கடை போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். முகாமைச் சுற்றிய ரோட்டில் போலீஸ் வாகனங்கள் ரோந்து சுற்றி வந்தன.
அவ்வழியாக வந்த சந்தேகத்திற்குரிய வாகனங்களை ஒத்தக்கடை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினர். நேற்று பிற்பகல் 3.10 மணிக்கு தீவிரவாதிகளை ஏற்றிக்கொண்டு காரில், தேசிய புலனாய்வு படையினர் மேலூர் கோர்ட்டிற்கு புறப்பட்டனர். காரின் முன்னும், பின்னும் திண்டுக்கல், மதுரை துப்பாக்கி ஏந்திய, ஆயுதப்படையினர் வேன்களில் சென்றனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரி சுகாதாரத் துறையில் காலி பணியிடங்களில் தேசிய சுகாதார இயக்கக ஊழியர்கள் பணி நிரந்தரம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!
குமரி ஆபாச பாதிரியாரை காவலில் எடுத்து தீவிர விசாரணை
தாது மணல்களை போல ஆற்று மணலை ஏன் ஒன்றிய அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கூடாது?: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி
பழனி மலையடிவாரத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட ரவுடி கைது
மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கால அட்டவணை வெளியீடு!
ராகுலின் எம்.பி பதவி பறிப்புக்கு காங்கிரசார் எதிர்ப்பு: தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்..!!
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!