SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை அருகே ஒருதலைகாதலில் வாலிபர் வெறிச்செயல் காதலிக்க மறுத்த பட்டதாரி பெண் படுகொலை

2016-09-15@ 00:18:01

அன்னூர் : கோவை அருகே பெண் சாப்ட்வேர் இன்ஜினியரை கேரள வாலிபர் கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்துவிட்டு  தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சோமு. இவரது மனைவி சாரதா. இவர்களது மகள் தன்யா(23). பிஎஸ்சி ஐடி படித்துள்ளார். இவர்கள், அன்னூர் தென்னம்பாளையம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். தன்யா, திருப்பூரை அடுத்த பொங்கலூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். தன்யாவை கடந்த 6 மாதமாக கேரளாவை சேர்ந்த ஜகீர்(25) ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை தன்யா ஏற்க மறுத்ததை தொடர்ந்து, அந்த வாலிபர் மீண்டும் கேரளா சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தன்யாவை தினேஷ்(26) என்பவருடன் நிச்சயத்தார்த்தத்தை பெற்றோர் முடித்தனர். நேற்று ஓணம் பண்டிகையையொட்டி தன்யாவுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. தன்யா தனது வருங்கால கணவருடன் வெளியே சென்று விட்டு மாலை 5 மணியளவில் வீடு திரும்பினார். மகள் வீட்டுக்கு வந்ததும் தன்யாவின் தந்தை சோமு தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்ததால், மனைவி சாரதாவுடன் மருத்துவமனைக்கு புறப்பட்டார். தன்யாவை வீட்டிற்குள் வைத்து வெளியே பூட்டிவிட்டு சென்றிருந்தார். மாலை 6.30 மணி அளவில் வீடு திரும்பிய பெற்றோர், வீட்டுக்குள் தன்யா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஒன்றரை மணி நேரத்திற்கு முன் உயிரோடு இருந்த மகளை பிணமாக கண்ட தாய், தந்தையினர் கதறி அழுது துடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவை எஸ்.பி. ரம்யாபாரதி, கருமத்தம்பட்டி டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தன்யாவை ஒருதலையாக காதலித்த கேரள வாலிபர் ஜகீர் நேற்று மாலை வீட்டின் பின்பக்க சுவர் ஏறிக் குதித்து வீட்டிற்குள் நுழைந்ததோடு தன்யாவை தலையில் பலமாக தாக்கியதோடு வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு பின்பக்கமாக சுவர் ஏறிக்குதித்து தப்பியது தெரியவந்தது. அதிகாரிகள் சிறைபிடிப்பு: ஒரு தலைகாதலால் தமிழகத்தில் மீண்டும் ஒரு இளம்பெண், அதுவும் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து, தகவல் அறிந்த அன்னூர் மக்கள் தன்யாவின் வீட்டின் முன் திரண்டனர். குற்றவாளியை உடனடியாக பிடிக்காவிட்டால் அதிகாரிகள் யாரையும் வீடு திரும்ப விட மாட்டோம் எனக் கூறி சிறைபிடித்தனர். இதனால் அன்னூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒருதலை காதலுக்கு 6வது பலி

தமிழகத்தில் ஒருதலை காதலில், கடந்த ஜூன் மாதம் முதல் நேற்றுவரை 6 பெண்கள் பலியாகியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் இன்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இவரை தொடர்ந்து, விழுப்புரத்தில் நவீனா, கரூரில் கல்லூரிக்குள் புகுந்து மாணவி சோனாலி, தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயத்துக்குள் புகுந்து ஆசிரியை பிரான்சினா ஆகிய 4 பெண்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர். கடந்த வாரம் விருத்தாச்சலத்தை சேர்ந்த புஷ்பலதா என்ற நர்ஸ் ஒருதலை காதல் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். நேற்று அன்னூரில் தன்யா படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தில் ஒருதலைக்காதலுக்கு ேநற்று வரை 6 பெண்கள் பலியாகியுள்ளனர்.

மணமகன் கதறல்

தன்யா படுகொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன் தினேஷ் அழுதபடி வீட்டுக்கு ஓடிவந்தார். அங்கு ரத்த வெள்ளத்தில் தன்யாவின் சடலம் கிடந்ததை கண்டு தினேஷ் கதறி துடித்தார். கொஞ்ச நேரத்துக்கு முன் தானே ஒன்றாக வெளியே போய்ட்டு வீட்டுக்கு கொண்டு வந்து விட்டேன். அதற்குள்ளே கொலை செஞ்சிட்டானே பாவி. இப்படி நடக்கும் தெரிஞ்சா இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கொண்டு வந்து விட்டிருப்பேனே என்று கதறினார்.

அடுத்த மாதம் திருமணம்

தன்யாவுக்கும், அன்னூரில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் தினேஷ்(26) என்பவருக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது.   கொலையாளியாக கருதப்படும் ஜகீர் (25) அன்னூரில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார்.  நேற்று காலை முதல் தன்யாவின் வீட்டை ஒரு தலைக்காதலன் ஜகீர் சுற்றி, சுற்றி வந்ததாக பக்கத்து வீட்டுக்காரர்கள் தெரிவித்தனர். வருங்கால மாப்பிள்ளையுடன் தன்யா வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புவதை பார்த்த ஜகீர், ஆத்திரத்தில் தனக்கு கிடைக்காத தன்யா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற ஆத்திரத்தில் தன்யாவின் தாய், தந்தை வெளியே சென்ற பின்னர் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் துடிக்க,துடிக்க கொலை செய்தது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்