கள்ளக்காதலியுடன் ஓட முயன்ற கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்றார் மனைவி
2016-08-17@ 00:38:58

சென்னை : ‘‘கள்ளக்காதலியுடன் ஊரைவிட்டுப் போகப் போகிறேன். நீயும் உனது குழந்தைகளும் நடுத்தெருவில் பிச்சைதான் எடுக்க வேண்டும்’’ என்று மிரட்டிய கணவனை மனைவியே அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி காயல்பட்டினத்தை சேர்ந்தவர் அக்பர் (50). இவர் சென்னை மண்ணடி கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள வீட்டின் 3வது மாடியில் வாடகைக்கு வசித்தார். தொழிலதிபரான இவர், மண்ணடி பகுதியிலேயே இரும்பு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பாத்திமுத்து (45). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை தனது கடைக்கு சென்ற அக்பர், இரவு 12 மணியளவில் வீட்டுக்கு வந்தார். பாத்திமுத்து மற்றும் அவரது பிள்ளைகள் ஒரு அறையிலும், அக்பர் மற்றொரு அறையிலும் தூங்கினர். நேற்று காலை அதே பகுதியில் வசிக்கும் அக்பரின் மைத்துனர் சையது, அக்பரின் வீட்டுக்கு வந்தார். அவர் கதவு தட்டும் சத்தம் கேட்டு, பாத்திமுத்து எழுந்து சென்று கதவை திறந்தார். அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே, அக்பர் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சையது சென்றார்.
அங்கு வாயில் துணி திணிக்கப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அக்பர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து சையது சத்தம் போட்டார். பாத்திமுத்து மற்றும் பிள்ளைகளும் ஓடி வந்தனர். அக்பரின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். தகவலறிந்து வடக்கு கடற்கரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் போஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீஸ் மோப்ப நாய் சோனா வரவழைக்கப்பட்டது. அது மண்ணடி தெருமுனை வரை சென்று நின்றுவிட்டது. இதையடுத்து அக்பரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில்தெரியவந்தாவது, வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (35). கணவனை விட்டுப் பிரிந்தவர். இவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது கடையில் கணக்கு வழக்குகளை கவனித்துக்கொள்வதற்காக அக்பர் வேலைக்கு வைத்துக் கொண்டார்.
ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. பிறகு மண்ணடியிலேயே வாடகை வீடு எடுத்து பாத்திமாவை அக்பர் தங்கவைத்துள்ளார். பிறகு இருவரும் அவ்வப்போது நெருக்கமாக இருந்துள்ளனர். வெளி இடங்களிலும் சுற்றித் திரிந்துள்ளனர். நாளடைவில் இந்த கள்ளத்தொடர்பு பாத்திமுத்துவுக்கு தெரிய வர அக்பரை கண்டித்துள்ளார். ஆனால் அக்பரோ அப்படி ஏதும் இல்லையென்று மறைத்துள்ளார். ஆனாலும் சந்தேகம் தீராத பாத்திமுத்து தனது கணவரை பின் தொடர்ந்து வேவு பார்த்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாத்திமாவின் வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். தனது உறவினர்களுடன் அங்கே சென்று கையும் களவுமாகப் பிடித்த பாத்திமுத்து, பாத்திமாவை அடித்து உதைத்துள்ளார். பிறகு அங்கிருந்த பாட்டிலால் அக்பரின் தலையில் அடித்துள்ளார். இதில் அக்பருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பாத்திமுத்துவுடன் கோபித்துக்கொண்டு அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அக்பருக்கு பாத்திமாதான் உதவியாக இருந்துள்ளார். பிறகு உறவினர்கள் சமாதானப்படுத்தியதை அடுத்து பாத்திமுத்துவுடன் வீட்டுக்கு வந்துள்ளார். பாத்திமாவையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டார். ஆனால், சில நாட்களிலேயே மீண்டும் இருவரும் பழகத் தொடங்கியுள்ளனர். இதை பாத்திமுத்து கண்டிக்க, ‘நான் பாத்திமாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும். பாத்திமாவும் நானும் திருமணம் செய்துகொண்டு இந்த ஊரை விட்டே செல்லப் போகிறோம். பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும். நான் உனக்காக நிறைய செலவு செய்தேன். ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாத்திமாவுடன் வெளியில் சுற்றிவிட்டு நன்றாகக் குடித்துவிட்டு இரவு 12.30 மணியளவில் அக்பர் வீட்டிற்கு வந்துள்ளார். ‘‘ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்னையும் குழந்தைகளையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் செய்வது நியாயமா’’ என்று பாத்திமுத்து அழுது புலம்பினார். ஆனால் அவரோ பாத்திமுத்துவை எட்டி உதைத்தார். பிறகு போதையில் தனது அறையில் படுத்துள்ளார்.
அவரைப் பார்க்கக் பார்க்க ஆத்திரமுற்ற பாத்திமுத்து வீட்டிலிருந்த இளநீர் வெட்டும் அரிவாளை எடுத்து அவரது கழுத்தில் சராமாரியாக 3 முறை வெட்டியுள்ளார். மேலும் ரத்தம் கொட்டியதை பார்த்ததும் பாத்திமுத்துக்கு மயக்கம் வந்துவிட்டது. அரிவாளை துணியில் சுற்றி பீரோவுக்கு அடியில் தள்ளிவிட்டு தனது அறையில் வந்து படுத்துக் கொண்டார். காலையில் மைத்துனர் எழுப்பியதும் அவரும் நாடகமாடியுள்ளார் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பாத்திமுத்துவை போலீசார் கைது செய்தனர். வீட்டில் மறைத்து வைத்திருந்த அரிவாளை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து பாத்திமாவிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘அப்பா தூங்குறாரு..’
அக்பரின் மகள் பூஜா(12) சற்றே மனநலம் பாதித்தவர். அவர் நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அக்பரை பார்த்துவிட்டு பாத்திமுத்துவிடம் கேட்டுள்ளார். ஒன்றுமில்லை. அப்பா தூங்குகிறார். காலையில் எழுந்துவிடுவார் என்று அவரை பாத்திமுத்து தூங்க வைத்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகள்
புதுச்சேரி குருசுகுப்பத்தில் போதை மாத்திரை, பவுடர் விற்ற ஆப்பிரிக்க மாணவர்கள் கைது: சுற்றுலா விசாவில் தங்கியிருந்த இளம்பெண்ணும் சிக்கினார்
புதுகை அருகே கணவருடன் தகராறில் பயங்கரம் கழுத்து நெரித்து 2 குழந்தைகள் கொலை; கொடூர தாய் கைது
திண்டுக்கல் அருகே மான் தோல், நரி பல் வைத்திருந்த ஜோதிடர் கைது
புதுகையில் கஞ்சா விற்ற எஸ்ஐ மகன் உள்பட 5 பேர் கைது
பெரம்பலூர் அருகே சினிமா டைரக்டருக்கு கத்தி வெட்டு: 6 மர்ம நபர்களுக்கு வலை
சேத்துப்பட்டு அருகே சொத்து தகராறில் தம்பி சுட்டுக்கொலை மாஜி ராணுவ வீரர், மனைவியுடன் கைது: பல மணிநேர சமரசத்திற்கு பின் சடலம் போலீசாரிடம் ஒப்படைப்பு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!