சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் பவானிசிங் ஆஜராவது என்ன நியாயம்?
2015-02-03@ 01:01:46

பெங்களூரு: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையில் தமிழக அரசால் நியமனம் செய்யும் அரசு வக்கீல் ஆஜராகி வாதம் செய்வது என்ன நியாயம் என்று தமிழக ஊழல் தடுப்பு போலீஸ் சார்பில் ஆஜரான வக்கீலிடம் தலைமை நீதிபதி டி.எச்.வகேலா கேள்வி எழுப்பினார். தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் வக்கீல்கள் இரா.தாமரைசெல்வன், சரவணன், பி.குமரேசன் ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு கடந்த 19ம் தேதி நீதிபதி ஆனந்தபைராயரெட்டி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய நீதிபதி பிறப்பித்த உத்தரவில் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் தினமும் விசாரணை நடந்து வருகிறது. பவானிசிங் அரசு வக்கீலாக தொடராமல் தடுக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் எடுக்க விரும்பவில்லை. அதே சமயத்தில் இக்குழப்பத்திற்கு தீர்வு காண்பதும் அவசியம் என்பதால் உச்சநீதிமன்றத்தை நாடி விளக்கம் பெற்று கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அத்தீர்ப்பை எதிர்த்து க.அன்பழகன் சார்பில் கடந்த 28ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அம்மனு தலைமை நீதிபதி டி.எச்.வகேலா மற்றும் நீதிபதி அசோக் பி.இஞ்சகேரி ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற விவாதம் க.அன்பழகன் சார்பில் ஆஜரான வக்கீல் சி.வி.நாகேஷ்: மேல்முறையீட்டு மனு விசாரணையில் பவானிசிங் அரசு வக்கீலாக ஆஜராகி வருகிறார். ஆனால் அவருக்கு கர்நாடக அரசின் சார்பில் எந்த நியமன உத்தரவும் வழங்கவில்லை. தமிழக ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கொடுத்துள்ள நியமன உத்தரவை வைத்து கொண்டு ஆஜராகி வருகிறார். இது சட்டப்படி சரியல்ல. ஆகவே அவரை நீக்கிவிட்டு புதிய அரசு வக்கீலை நீதிபதி நியமனம் செய்ய வேண்டும்.
அரசு வக்கீலாக பவானிசிங் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஆஜராகி வருகிறார் என்று பவானிசிங்கின் வக்கீல் செபஸ்டினிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். வக்கீல் செபஸ்டின்: பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்த சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் அரசு சிறப்பு வக்கீலாக ஆஜராகி வாதம் செய்ய பவானிசிங்கிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இவ்வழக்கு கர்நாடகாவில் நடக்கும்போது, அதில் ஆஜராகி வாதம் செய்யும் முழு அதிகாரம் அவருக்குள்ளது. தலைமை நீதிபதி: மேல்முறையீட்டு மனு விசாரணையின் போது எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் பவானிசிங் ஆஜராக அனுமதி வழங்கினீர்கள் என்று தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஆஜரான வக்கீல் டி.என்.ராவிடம் கேட்டார்.
வக்கீல் ராவ்: இவ்வழக்கின் புகார்தாரர்கள் நாங்கள் தான். இதில் எங்கள் சார்பில் நீதிமன்றத்தில் யார் ஆஜராக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது. அதனடிப்படையில் தான் பவானிசிங்கை நியமனம் செய்தோம். தலைமை நீதிபதி: குற்றவியல் நடைமுறை சட்டம் 24 (1) படி கிரிமினல் வழக்கு ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு மாற்றம் செய்யும்போது, எந்த மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறதோ, அந்த மாநில அரசு தான் சிறப்பு அரசு வக்கீலை நியமனம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதே. வக்கீல் ராவ்: குற்றவியல் நடைமுறை சட்டம் 24(8)ன்படி பவானிசிங் அரசு சிறப்பு வக்கீலாக தனிநீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் செய்தார். ஒருவேளை தனிநீதிமன்றத்தில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தால், அதை எதிர்த்து நாங்கள் தான் மேல்முறையீடு செய்திருப்போம். எங்கள் சார்பில் நீதிமன்றத்தில் யார் ஆஜராக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமையின் அடிப்படையில் தான் அரசு வக்கீல் நியமனம் செய்தோம்.
தலைமை நீதிபதி: மணிப்பூர் மாநிலத்தில் நடந்த ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பை கர்நாடக மாநிலத்திற்கு உச்சநீதிமன்றம் மாற்றம் செய்தால், அந்த வழக்கு விசாரணையில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் அரசு வக்கீலாக ஆஜராக முடியுமா? கர்நாடகாவில் நடக்கும் விசாரணையில் அரசு தரப்பில் ஆஜராக கர்நாடக அரசு தான் வக்கீலை நியமனம் செய்ய வேண்டும் என்று மனுதாரர் (க.அன்பழகன்) கோரும் உரிமை நியாயமானது தானே. வக்கீல் சி.வி.நாகேஷ்: இவ்வழக்கு சென்னை தனிநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா தலைமையில் ஆட்சி நடந்தது. குற்றவாளிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது நடக்கும் விசாரணையில் நியாயம் கிடைக்காது என்று எனது கட்சிக்காரர் (க.அன்பழகன்) உச்சநீதிமன்றம் சென்றார்.
அவரின் நியாயமான கோரிக்கை ஏற்று பெங்களூருக்கு மாற்றம் செய்தது. தற்போதும் தமிழகத்தில் குற்றவாளியான ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. அந்த ஆட்சியின் கீழ் செயல்பட்டுவரும் ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு பவானிசிங்கிற்கு நியமன உத்தரவு வழங்கியுள்ளது. ஆகவே அவர் ஆஜராகி வாதம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். மேலும் அனுபவமுள்ள மூத்த வக்கீலை கர்நாடக அரசு நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். தலைமை நீதிபதி: அரசியலை இங்கு தொடர்புபடுத்த வேண்டாம். வக்கீல் சி.வி.நாகேஷ்: இவ்வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு அதிகம் இருந்த காரணத்தால் தான் பெங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டது.
தற்போதும் அதே நிலைதான் நீடிக்கிறது. தலைமை நீதிபதி: அரசு தலைமை வக்கீல் ரவிவர்மகுமாரை பார்த்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
ரவிவர்மகுமார்: இந்த வழக்கு முழுக்க முழுக்க உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நடக்கிறது. இதில் கர்நாடக அரசின் பங்களிப்பு எதுவுமில்லை. இருப்பினும் நீதிமன்றம் பிறப்பிக்கும் எந்த உத்தரவையும் செயல்படுத்த தயாராகவுள்ளோம். வக்கீல் ராவ்: மேல்முறையீட்டு மனு விசாரணை 19 நாட்களாக நடந்து வருகிறது. முதல் குற்றவாளியான ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல் வாதம் முடித்துள்ளார். 2வது குற்றவாளியான சசிகலா தரப்பில் அவரது வக்கீல் ஆஜராகி வாதம் செய்துவருகிறார்.
மேல்முறையீட்டு மனு விசாரணையை 3 மாதங்களில் தினமும் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அரசு வக்கீல் பிரச்னையை எழுப்புவது சரியல்ல. தலைமை நீதிபதி: அதற்கான சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட அனுமதிக்கலாமா? இருப்பினும் இது முக்கியமான பிரச்னை என்பதால், பவானிசிங் நீடிக்கக் கூடாது என்று மனுதாரர் சார்பில் கூறப்படும் நியாயமான வாதம், பவானிசிங் நீடிப்பது சட்டப்படி நியமனம் என்று ஊழல் தடுப்பு போலீசார் கூறும் வாதம் ஆகியவற்றை எழுத்து மூலமாக நாளை (இன்று) தாக்கல் செய்து சுருக்கமாக வாதம் செய்ய வேண்டும். மேலும் அரசு தரப்பிலும் தங்களின் கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.
மேலும் செய்திகள்
சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதால்வத் திடீர் கைது: போலி ஆவணங்களை தயாரித்து வழக்கு தொடர்ந்ததாக குற்றச்சாட்டு
நடுரோட்டில் இளம்பெண்ணை கொன்று சடலத்தை ஏரியில் வீசிய கணவன் கைது: திருமணமான 2 ஆண்டில் பரிதாபம்
சிவசேனா போட்டி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மகாராஷ்டிராவில் பாஜ ஆட்சி அமைக்க முயற்சி; அமித்ஷாவுடன் இன்று ஆலோசனைக்கு பின் முக்கிய முடிவு.!
பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி வங்கி மோசடி: காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 11,739 ஆக குறைந்தது... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 92 ஆயிரத்தை தாண்டியது!!
ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாமில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் குடும்பங்களுக்கு குறி?
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!