சேலம் அரசு மருத்துவமனையில் பெரும் மோசடி மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பலகோடி முறைகேடு புகார்
2015-02-03@ 00:56:53

சேலம் : சேலம் அரசு மருத்துவமனையில், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட, பல கோடி ரூபாய் முறைகேடு புகார் குறித்து ஆய்வு நடக்கிறது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதயம், சிறுநீரகம், குடல், மூளை, காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு தொடர்பாக தினசரி 30க்கும் மேற்பட்ட ஆபரேஷன்கள் செய்யப்படுகின்றன. இதற்காக தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் தொகை பெறப்படும். இதில் மருத்துவமனைக்கு என்று 12.5 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். மேலும் மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு சதவீத அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும். இந்த வருவாயைக் கொண்டு மருத்துவமனை பராமரிப்பு, புதிய வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்துதல், உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
கடந்தாண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் கோடிக்கணக்கில் அரசு மருத்துவமனைக்கு வருவாய் கிடைத்துள்ளது. இதில், மருத்துவமனை வளர்ச்சி திட்டத்திற்கு சில லட்சம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. தற்போது டீனாக உள்ள மோகன் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளதால், முறைகேட்டை கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள், அவற்றின் மூலம் மருத்துவமனைக்கு கிடைத்த வருவாய், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மருத்துவக்கல்வி இணை இயக்குநர் மாலதி மற்றும் அதிகாரிகள் கடந்த மாதம் ஆய்வு செய்தனர். அப்போது, காப்பீட்டு திட்டத்தில் பெருமளவு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த அறிக்கை, மருத்துவக்கல்வி இயக்குநர் கீதாலட்சுமியிடம் அளிக்கப்பட்டது.
அவரது உத்தரவின் பேரில், சென்னையை சேர்ந்த இரு நபர் அடங்கிய தணிக்கை குழுவினர் நேற்று முதல் மருத்துவமனையில் மறுதணிக்கை செய்து வருகின்றனர். இதில் வரவு, செலவு கணக்குகளுக்கு முறையான பதிவேடுகள் இல்லாமலும், ஏராளமான முறைகேடுகளும் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து முக்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பதிவேடுகளை முழுமையாக ஆராய்ந்தால், கோடிக்கணக்கில் முறைகேடுகள் வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும், கண்டறிந்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் மருத்துவக்கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நிர்வாக அதிகாரி மாற்றம் பின்னணி: கடந்த சில வருடங்களாக சேலம் அரசு மருத்துவமனை நிர்வாக தொடர்பு அலுவலராக இருந்த தண்டபாணி சில வாரங்களுக்கு முன் திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டார். இவர், அமைச்சுப் பணியாளர் சங்க மாநில தலைவராக உள்ளார். இதனால் அரசு மருத்துவமனையில் தனிராஜாங்கம் நடத்தி வந்துள்ளார். கடந்த மாதம் நடந்த மருத்துவக்கல்வி அதிகாரிகளின் ஆய்வின்போது, வரவு, செலவு கணக்குகளின் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாதது பற்றி கேட்டதற்கு முறையாக பதிலளிக்காமல் அதிகாரிகளை மிரட்டியுள்ளார். இதையடுத்தே அவர் திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் வழக்கறிஞர் படுகொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
திருப்போரூர் பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி பணி தொடக்கம்
திருப்போரூர் தொகுதியில் தபால் வாக்குப்பெட்டி பாதுகாப்பாக உள்ளதா? அரசியல் கட்சிகள், தேர்தல் அதிகாரிகளுக்கு கேள்வி
நெல்லிக்குப்பம் ஊராட்சியில் மூடிய மருத்துவமனை மீண்டும் செயல்பட வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்
அகரம் கிராமத்தில் கோடை வெயிலுக்காக மண் பானைகள் செய்யும் பணி தீவிரம்
வாகன விபத்தில் தந்தை, மகன் பலி
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்