ராகுலுக்கு எதிராக சூழ்ச்சி வலை ஜெயந்தி நடராஜனை தூண்டியது யார்?
2015-02-03@ 00:15:46

புதுடெல்லி : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குரல் கொடுத்து, அவர் செல்வாக்கை சரிக்க முயன்ற ஜெயந்தி நடராஜன் பின்னால் தூண்டுகோலாக இருந்த காங்கிரஸ் தலைவர்கள் யார் யார் என்ற பட்டியலை கட்சி மேலிடம் தயாரித்து வருவதாக தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெயந்தி நடராஜன் ராஜினாமா செய்ததை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் கண்டுகொள்ளவில்லை. சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் நான் எடுத்த முடிவுகளுக்கு ராகுல்தான் காரணம் என்று ஜெயந்தி சொன்னதற்கும், அவர் வாய் திறக்கவில்லை. மாறாக, ஜெயந்தியை தூண்டி விட்டதன் பின்னணியில் சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருக்கின்றனர் என்று மேலிடம கருதுகிறது. மன்மோகன் சிங் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது பெரும் முறைகேடு செய்துள்ளார் என்று ஜெயந்தி மீது சிபிஐ இதுவரை ஐந்து வழக்குகளை போட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதியை பெரிய நிறுவனங்களுக்கு வழங்கியதிலும், சிலருக்கு ராகுல் தான் காரணம் என்று சொன்னதால் ராகுலை வழக்கில் இழுக்க இப்படிப்பட்ட சதி பின்னப்பட்டுள்ளதோ என்றும் காங்கிரஸ் கருதுகிறது.
இது தவிர, ஜெயந்தி மூலம் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தவும், ராகுலை தலைவர் பதவிக்கு வர விடாமல் செய்யவும் சில காங்கிரஸ் தலைவர்களே, ஜெயந்தியை தூண்டி விட்டு பேச வைத்ததாகவும் மேலிடம் கருதுகிறது. அந்த வகையில் இதுதொடர்பாக சில முக்கிய தலைவர்களிடம், யார் யார் ஜெயந்தி பின்னால் இருந்து தூண்டி விட்டனர் என்று பட்டியல் தயாரித்து தரும்படி கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.
முன்னாள் சபாநாயகர் மீரா குமார், மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகன் முன்னாள் அமைச்சர் அனில் சாஸ்திரி, முன்னாள் அமைச் சர் கே.சி. தேவ் உட்பட சிலர் பரபரப்பான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளனர். சிலர், ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கூறியிருப்பதன் சுருக்கம்: கடந்த மே மாதம் மக்களவை தேர்தல் தோல்விக்கு பின் ராகுலுக்கு எதிராக திட்டமிட்ட சில நடவடிக்கைகள் நடந்து வருவதை காண முடிகிறது. கிருஷ்ண தீரத், ஜக்மீத் சிங் பிரார் போன்ற சிலர் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டனர். அவர்கள் உடனே கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
அதன் பின்னும் சிலர் திறைமறைவு வேலைகளில் ஈடுபட்டு, எப்படியும் காங்கிரஸ் தலைமை பதவிக்கு ராகுல் வரக்கூடாது என்றே கங்கணம் கட்டி வந்தனர். இந்த நிலையில், சில முறைகேடுகள் தொடர்பாக ஜெயந்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் மீது சிபிஐ வழக்கு போடுகிறது. அப்போது தான் சோனியாவுக்கு கடிதம் எழுதுகிறார் அவர். ராகுல் காந்தி தான் எல்லாவற்றுக்கும் காரணம், நான் வெறும் கைப்பாவை தான் என்பது போல பேசுகிறார். இவர் கிளப்பியுள்ள குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல; திட்டமிட்டு ராகுல் செல்வாக்குக்கு களங்கம் விளைவிப்பது போன்றது. ஜெயந்தி இப்படி கடிதம் மற்றும் பேட்டி அளித்திருப்பதன் பின்னணியில் சில தலைவர்கள் இருக்கின்றனர் என்பது வலுவாக தெரிகிறது. அவர்கள் எண்ணம் காங்கிரசை பலவீனப்படுத்தி, இந்திரா காந்தி காலத்தில் ஏற்பட்டது போல பிளவை ஏற்படுத்துவது தான்.
1967 தேர்தல் தோல்விக்குப்பின் இந்திரா காந்திக்கு எதிராக கட்சியை உடைத்து காங்கிரஸ் (ஓ) என்று ஆரம்பித்தவர்கள் கடைசியில் இந்திரா வலுவடைந்தபின், மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சியில் ஐக்கியமான கதையை யாரும் மறக்க முடியாது. மூன்று முறை தொடர்ந்து வென்றும் காட்டினார் இந்திரா காந்தி. இப்போது மீண்டும் அது போன்று ஒரு பிளவை அரங்கேற்ற சிலர் திட்டமிடுகின்றனர். இதை மேலிடம் அடையாளம் கண்டு களையை பிடுங்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சியை அரித்து விடுவர். இவ்வாறு இவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகள்
என்னுடைய எதிர்காலத்தை அதிமுக தொண்டர்களும் மக்களும் தீர்மானிப்பார்கள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாவிட்டால் ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறி: ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை..!
சாதி ரீதியாக அதிமுகவினரை பிரிக்க முயற்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி
சொல்லிட்டாங்க...
முதல்வரின் முதன்மை திட்டம்
ஒருங்கிணைப்பாளரை நீக்குவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது: சண்முகம் புரியாமல் பேசுவதாக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் குற்றச்சாட்டு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!