செல்லும் கொல்லும்
2015-01-29@ 00:01:52

செல்பி படம் எடுக்க வேண்டும் என்ற மோகத்தில் உ.பி
மாநிலம் ஆக்ரா அருகே 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சீறி பாய்ந்து வந்த
ரயிலுக்கு முன் செல்பி எடுத்து பேஸ்புக்கில் போட்டு லைக்குகளை அள்ளவேண்டும்
என்ற அவர்களது ஆசை கடைசி ஆசையாய்- நிறைவேறாத ஆசையாய் ஆகிப்போனது. அளவுக்கு
மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி. அளவுக்கு அதிகமானால்
‘செல்லும் கொல்லும்’ என்பது புது மொழி. அந்த அளவுக்கு இன்றைய இளைஞர்கள்
நவீன தொழில்நுட்பத்துக்கு அடிமைகளாக மாறி தங்கள் வாழ்க்கையை தொலைத்து
வருகிறார்கள். இன்றைய இளைஞர்கள் சோறு, தண்ணீர் கூட இல்லாமல் இருந்து
விடுவார்கள். ஆனால், ஸ்மார்ட் போனும், பேஸ்புக்கும் இல்லாமல் ஒரு மணி
நேரம் கூட இருக்கமுடியாது. கழிப்பறைக்கு போனால் கூட கையோடு போனையும்
எடுத்துச் செல்கிறார்கள்.
காலையில் தூங்கி எழுவதில் இருந்து இரவு
படுக்கையில் படுத்த பிறகும், பாதி தூக்கத்தில் கூட எழுந்து ஸ்டேட்டஸ்
போடுவதையே தங்கள் தொழிலாக கொண்டுள்ளனர். தாங்கள் போட்ட ஸ்டேட்டசை எத்தனை
பேர் விரும்பி லைக் போட்டுள்ளார்கள், யாரெல்லாம் கருத்து
சொல்லியிருக்கிறார்கள் என்பதை பார்ப்பதிலும், அதற்கு பதில் போடுவதிலுமே
பொழுது போய்விடுகிறது. அதுபோக நேரம் இருந்தால்தான் படிப்பு, வேலையில்
கொஞ்சம் கவனம் செலுத்துகின்றனர். இப்படி இணையம் என்ற மாயைதான் வாழ்க்கை;
அதிலேதான் எல்லாமும் உள்ளது என்ற தவறான கண்ணோட்டத்துடன்தான் வாழ்க்கையை
அவர்கள் பார்க்கின்றனர். அதிகம் பேரின் கவனத்தை திசைதிருப்ப வேண்டும், அதிக
லைக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் செய்யும் கூத்துகள்
உயிரையே பறிக்கும் நிலை கவலையடையச் செய்கிறது.
தங்களை தாங்களே
செல்போனில் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பும் செல்பி படங்கள்தான்
இளைஞர்களின் லேட்டஸ்ட் மோகம். முதலில் தங்கள் முகத்தை மட்டும் எடுத்து வலை
தளங்களில் பரப்பியவர்கள், பின்னர் பின்னணியில் தெரியும் காட்சிகளுக்கு
முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினர். அழகான மலை, கடல் போன்ற இயற்கை
காட்சிகளை பின்னணியில் வைத்து செல்பி எடுத்து இணையத்தில் பரவவிட்டனர். ஒரு
கட்டத்தில் உயிரை பணயம் வைத்து செல்பி எடுக்கத் தொடங்கினர். எல்லாம்
மற்றவர்களின் செல்பியில் இருந்து தங்களை வேறுபடுத்தி காட்டத்தான். இப்படி
மலை முகட்டில், வேகமாக வரும் கார் முன் நிற்பது என்று செல்பி எடுக்க
முயற்சித்து உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை ஒவ்வொன்றாக அதிகரித்து வருகிறது.
இப்படி, வேகமாக வரும் ரயிலுக்கு முன் நின்று செல்பி எடுக்க நினைத்துதான்
உயிரை இழந்துள்ளனர் ஆக்ரா இளைஞர்கள்.
கண்களை விற்று சித்திரம்
வாங்கி என்ன பயன். அதுபோல், செல்பிகளுக்கு பேஸ்புக்கில் விழும் லைக்குகள்
போன உயிரை மீண்டும் கொண்டு வருமா? உலகின் கவனத்தை தங்கள் பக்கம் திரும்பி
பார்க்கச் செய்ய பல வழிகள் உள்ளன. இப்படி உயிரை பணயம் வைத்து செல்பி
எடுப்பதுதான் ஒரே வழி என்று உயிரை மாய்த்துக் கொள்வதை தவிர்த்து
ஆக்கபூர்வமான வழிகளில் சாதனைகள் புரிந்தாலும் உலகுள்ளவரை பெயர்
நிலைத்திருக்கும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.
Tags:
Thaliyangamமேலும் செய்திகள்
திடீர் போர்க்கொடி
தாய்மொழியை நேசிப்போம்
ஆட்டம் காணும் சேனா
செவிசாய்க்க வேண்டும்
தேர்தல் சீர்திருத்தம்
அக்னியாய் சுடும் திட்டங்கள்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!