யார் பொறுப்பு
2015-01-22@ 06:01:15

சென்னையிலும் ஒகேனக்கல்லிலும் ஒரே நாளில் பயங்கர சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. சென்னையின் முக்கிய சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி முன்னால் சென்ற இரண்டு சக்கர வாகனங்கள் மீது மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கொண்டை ஊசி வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் 100 அடி ஆழ கிடுகிடு பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஒகேனக்கல் விபத்துக்கு பராமரிப்பில்லாத அரசு பஸ்தான் காரணம் என்ற புகார் எழுந்துள்ளது. மக்களின் உயிரோடு அரசு விளையாடக்கூடாது.
நடுவழியில் கோளாறு ஏற்பட்டு நின்ற பஸ்சை, பயணிகள் எச்சரிக்கையையும் மீறி மீண்டும் இயக்கி மலைப்பாதையில் ஓட்டிச் சென்றதால், அது பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக தெரிகிறது. பஸ்சை ஓட்டும் முன் அது பழுதின்றி உள்ளதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உண்டு. கோளாறு உள்ள பஸ்சை ஓட்டும்படி ஓட்டுநர்களை கட்டாயப்படுத்துவதைவிட்டுவிட்டு, பழுதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடாவதி பஸ்தான் விபத்துக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு உண்மை என்றால், 9 பேரின் உயிரிழப்பிற்கு பொறுப்பேற்கப் போவது யார்? அவர்களுக்கு என்ன தண்டனை.
இந்திய அளவில் விபத்துக்களில் கடந்த 12 ஆண்டுகளாக நம்பர் ஒன்னாக இருப்பது தமிழகம். 2003ம் ஆண்டு தொடங்கி அதிக விபத்துக்கள் நடக்கும் மாநிலம் என்ற வேதனையான சாதனையை தமிழகம் செய்து வருகிறது. 2013ல் மட்டும் தமிழகத்தில் 66,238 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. தினமும் சராசரியாக 181 விபத்துக்கள் நடந்துள்ளன. 2014ல் நவம்பர் மாதம் வரையிலான புள்ளிவிவரப்படி 51,136 விபத்துக்கள் நடந்துள்ளன. அதாவது தினமும் சராசரியாக 187 விபத்துக்கள். இதில் 96 சதவீத விபத்துக்களுக்கு காரணம் டிரைவர்களின் அஜாக்கிரதைதான் என்பதை அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரமே தெரிவிக்கிறது. அஜாக்கிரதை என்ற ஒற்றை வார்த்தைக்கு, குடிபோதை, தூக்க கலக்கம், கவனக்குறைவு, செல்போன் பேசுதல், சாலை விதிகளை மதிக்காதது உள்ளிட்ட பல அர்த்தம் உண்டு. இதில், விபத்துக்களுக்கு முக்கிய காரணம் குடிபோதைதான்.
சென்னையில் 4 பேரை பலி கொண்ட லாரியை ஓட்டிய டிரைவர் போதையில் இருந்துள்ளார். போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அடுத்தடுத்து வாகனங்களை இடித்து தள்ளி நசுக்கியுள்ளார். நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு இன்னமும் பல மாநிலங்களில் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. இதனால், போதையால் நடக்கும் விபத்துக்கள் குறைந்தபாடில்லை. இதுபோன்ற விபத்துக்களுக்கு மதுக்கடைகளை திறந்து வைத்துள்ள அரசு பொறுப்பா அல்லது போதை டிரைவர் பொறுப்பா? மக்களை காக்க வேண்டும் என்ற தனது பொறுப்பை அரசு உணர்ந்தால், போதையால் ஏற்படும் விபரீத விபத்துக்களை தவிர்க்கலாம்.
Tags:
Thalaiyangamமேலும் செய்திகள்
திடீர் போர்க்கொடி
தாய்மொழியை நேசிப்போம்
ஆட்டம் காணும் சேனா
செவிசாய்க்க வேண்டும்
தேர்தல் சீர்திருத்தம்
அக்னியாய் சுடும் திட்டங்கள்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!